சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இதில் கைதேர்ந்தோர் நம் ஆட்சியாளர்கள்!

Updated : ஜன 05, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (1)
Advertisement
இதில் கைதேர்ந்தோர் நம் ஆட்சியாளர்கள்!எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் நெல்லையில் உள்ள சி.எஸ்.ஐ., பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து, மூன்று மாணவர்கள் உயிர் இழந்தனர். அதன்பின் விழிப்படைந்த அரசு, தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளின் கட்டமைப்புகளை ஆய்வு செய்து, தரமற்ற கட்டடங்களை இடிக்க
இது உங்கள் இடம்


இதில் கைதேர்ந்தோர் நம் ஆட்சியாளர்கள்!


எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் நெல்லையில் உள்ள சி.எஸ்.ஐ., பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து, மூன்று மாணவர்கள் உயிர் இழந்தனர். அதன்பின் விழிப்படைந்த அரசு, தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளின் கட்டமைப்புகளை ஆய்வு செய்து, தரமற்ற கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வில், தமிழகம்முழுதும் பயன்பாட்டிற்கு தகுதியில்லாத, 1,000க்கும் மேற்பட்ட வகுப்பறை கட்டடங்கள் கண்டறியப்பட்டிருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது.

கட்டடங்களை இடித்தால் மட்டும் போதுமா... குழந்தைகளின் உயிரைக் கூட துச்சமாக மதித்து, தரமற்ற கட்டடம் கட்டிய ஒப்பந்ததாரர், அவரிடம் 'கமிஷன்' வாங்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது, அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? தரமற்ற கட்டடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரிடமே மீண்டும் பணியை கொடுத்திருப்பது, மிக மோசமான செயல்.கடந்த 1995-ல், ஹரியானா மாநிலத்தில்தப்வாலி என்ற இடத்திலுள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், 258 குழந்தைகள் உட்பட, 442 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

அதற்கு அடுத்தபடியாக, 2004ல் கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள் உடல் கருகி இறந்ததை நம்மால் மறக்க முடியுமா? சில நாட்கள் பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவம், நாளடைவில் காற்றிலே கரைந்து விட்டது. தற்போது தரமற்ற கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.அவை கட்டப்பட்ட காலத்தில் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு திராவிடக் கட்சிகளும், இப்போது மவுனம் சாதிக்கின்றன. 'வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்துாறு போலக் கெடும்' என்ற வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிப்பதுபோல, தும்பை விடுத்து வாலை பிடிப்பதில், நம் ஆட்சியாளர்கள் கைதேர்ந்தோர்!



புளுகுவதற்கும் ஒரு அளவில்லையா?


வி.பாஸ்கர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டில்சுகாதார பணி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து, 'நிடி ஆயோக்' அமைப்பு தரவரிசை பட்டியல் வெளியிடுவது வழக்கம். இதன்படி, 2019 - 20-20ம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த சுகாதார செயல்பாடுகள் அடிப்படையில், கேரளா முதலிடத்தில் உள்ளது; தமிழகம் மற்றும் தெலுங்கானா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஆனால், சுகாதார மேம்பாட்டு நடவடிக்கையில் கேரளா 12ம் இடத்திலும்; தமிழகம், எட்டாம் இடத்திலும் உள்ளன; தெலுங்கானா இதிலும் மூன்றாமிடம் பிடித்துள்ளது. இது, 2019 - 20-20ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல். அப்போது தமிழகத்தில் இருந்தது, அ.தி.மு.க., ஆட்சி. முதல்வராக பழனிசாமியும்; துணை முதல்வராக பன்னீர்செல்வமும் இருந்த காலகட்டம் அது! உண்மையில், நிடி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த தரவரிசை பட்டியலுக்காக, பெருமைப்பட வேண்டியோர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தான்.

மத்திய அரசின் நிதியுதவியில் செய்யப்படும் பல நலத்திட்ட உதவிகளை, ஆட்சியில் இருக்கும் தி.மு.க., அரசு, ஏதோ தங்கள் சொந்த கைக்காசை செலவு செய்து தருவது போல, 'பாவ்லா' காண்பித்து, 'லேபிள்' ஒட்டிக் கொள்ளும்.இவற்றை மறுத்து பேசி, உண்மையான விபரங்களை பொதுமக்களுக்கு எடுத்து சொல்ல, இங்கு அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளுக்கும், 'பவுசு' கிடையாது; தமிழகத்தில் இயங்கும், பா.ஜ.,வுக்கும் நிதர்சனம் தெரியாது. இந்த நிடி ஆயோக் தரவரிசை பட்டியலிலும், தி.மு.க., இப்படித் தான் மூக்கை நுழைத்து பெருமை பீற்றிக் கொண்டிருக்கிறது.

அப்படி பெருமையை பீற்றி இருப்பவர், தி.மு.க.,வின் சாதாரண தொண்டரோ, கழக நிர்வாகிகளுள் ஒருவரோ அல்ல... தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தான் அந்த மஹானுபாவர்! 'நிடி ஆயோக் வெளியிட்ட சுகாதாரத் துறைக்கான தரவரிசை பட்டியலில், முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது' என, 'டுவிட்டர்' சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த, 2019 - 20-20ல் ஸ்டாலின், ஒவ்வொரு ஊராக சென்று, 'விடியல்' நிகழ்ச்சி அல்லவா நடத்திக் கொண்டிருந்தார்; அவர் அப்போது முதல்வர் இல்லை. யாரும் கேட்க மாட்டார்கள் என்பதற்காக, என்ன வேண்டுமானாலும் புளுகலாமா?



பழ மரங்கள் நடுவோம்!


க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்' என்று தான் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனரே தவிர, 'பழம் தரும்' என யாருமே சொல்வதில்லையே ஏன்? சாலையோரம், கல்விநிலையம், அரசு அலுவலக வளாகம் என எங்கும் நடப்படும் மரங்களை கவனியுங்கள்.... அங்கு, கனி தரும் மரங்கள் என, எதுவுமே இருக்காது!

சாலையை விரிவுப்படுத்தும்போது, புளிய மரங்களை வெட்டுவர்; அதற்கு பதில், பழம் தராத மரங்களை நடுவர். ஊரடங்கு காலத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், பசியோடு தங்கள் சொந்த ஊருக்கு பல கி.மீ., நடந்து சென்றனர். வழியில் பழ மரங்கள் இருந்திருந்தால், அவர்களின் பசியை அவை போக்கியிருக்கும்.மா, பலா, நாவல், அத்தி, கொய்யா என்று எத்தனை மரங்கள் உள்ளன; அவை ஏன் நடப்படவில்லை. கனிதராத மரங்களை மட்டுமே ஏன் நடுகின்றனர்? பழம், ஊட்டச்சத்து நிறைந்த உணவு. பொது இடங்களில் இருக்கும் பழ மரங்கள், ஏழைகளின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க செய்யுமே!

காற்று, நீர், உணவு என அனைத்தும் இயற்கை நமக்கு கொடுக்கிறது. இதை வியாபாரமாக மாற்றும், 'கார்ப்பரேட்' தான், அதை தடுத்து விடுகிறது. மனிதனின் அத்தியாவசிய தேவை அனைத்தையும், பணத்தால் மட்டுமே பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டனர்.நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்... சாலையோரம், பூங்கா, அரசு அலுவலக வளாகம் என எங்கும் பழ மரங்கள் இருந்தால், இந்த இடமே சொர்க்கமாக காட்சி அளிக்கும்; உணவுப் பஞ்சம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது.பழம் என்பது நமக்கானது மட்டும் அல்ல, காக்கை, குருவி, அணில், குரங்கு என அனைத்து உயிர்களுக்குமானது! எனவே, இனி பழ மரங்களையும் நடுவோம்!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-ஜன-202219:52:06 IST Report Abuse
D.Ambujavalli அவர் என்ன தானாகவா புளுகுகிறார்? உண்மையை ‘உடைத்து’ சொல்லி பெரிய இடத்து பொல்லாப்பு எதற்கு என்றுதான் ஈயம் பூசின மாதிரியும் இருக்கும் பூசாத மாதிரியும் ஒரு அறிக்கை விடுகிறார் ட்விட்டரில் வருஷத்தைக் காட்டாத சாமர்த்தியத்திலேயே தெரிகிறதே பாமரன் வருஷத்தையும் காலத்தையுமா பார்க்கப்போகிறான் என்ற அலட்சியம்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X