செல்லுார் ராஜு பதவிக்கு 'பங்கம்' வருமா?
நாயர் தந்த ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''என்ன செய்றதுன்னு தெரியாம திணறிண்டு இருக்கா ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார், குப்பண்ணா.
''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தமிழகத்துல, சிறப்பு நிலை அந்தஸ்துல இருந்த சில பேரூராட்சிகளை, இரண்டாம் நிலை நகராட்சியா தரம் உயர்த்தியிருக்கால்லியோ... இதுல, முதல் கட்டமா கமிஷனர் பணியிடங்களை மட்டும் நிரப்பியிருக்கா... சில இடங்கள்ல, பதவி உயர்வுலயும் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டிருக்கா ஓய்...
''புதுசா கமிஷனர் பதவிக்கு வந்த பலரும், நிர்வாக அனுபவம் இல்லாம திக்கி திணறிண்டு இருக்கா... சில நகராட்சிகள்ல, தேவைக்கேற்ப பணியாளர்கள் இல்லாததும், இவாளுக்கு பெரிய சிக்கலா போயிடுத்து ஓய்...
''கொரோனா மூணாவது அலை பரவற நேரத்துல, சுகாதார பணிகளை முடுக்கி விடுறது மாதிரி நிறைய வேலைகள் குவிஞ்சு கிடக்குது...
''அதனால, புதிய நகராட்சிகள்ல தேவையான கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் செய்து தரணும்... முக்கியமா, போதிய பணியாளர்களை நியமிக்கணும்னு இவாள்லாம் எதிர்பார்க்கறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''பாலாறு, தேனாறு கேள்விப்பட்டிருப்பிய... சரக்கு ஆறு தெரியுமா வே...'' எனக் கேட்டு நிறுத்தினார், அண்ணாச்சி.
''எந்த ஊருலங்க இந்த அநியாயம்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் சிட்டி மற்றும்புறநகர் பகுதிகள்ல 24 மணி நேரமும் பார்கள்ல மது விற்பனை நடக்கு... குடிக்கிற தண்ணிக்கு கூட தட்டுப்பாடு இருக்கும் போல... இந்த தண்ணிக்கு
பஞ்சமே இல்ல வே...
''தொழில் நகரான திருப்பூர்ல பல தொழிலாளிகள், சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் குடிச்சே அழிக்குறாங்க... சட்டவிரோத பார்கள் பத்தி, 'டாஸ்மாக்' அதிகாரிகளிடம் போலீசார்
பல முறை புகார் சொல்லிட்டாவ வே...
''ஆனா, பார்கள் பின்னணியில ஆளுங்கட்சியினர் இருக்கிறதால, டாஸ்மாக் உயர் அதிகாரி எதையும் கண்டுக்கிறது இல்லை...
''சொல்லப் போனா, 'சட்டவிரோத பார்கள் நடத்துறவங்களிடம் இருந்து அதிகாரிக்கு வரவேண்டியது முறையா வந்துடுது... அதனால தான் அவரு வாயே திறக்க மாட்டேங்காரு'ன்னு, போலீசார் புலம்புதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''அன்வர்பாய்... உம்ம தம்பி தாஜுதீன் குவைத்ல இருந்து வந்துட்டாரா ஓய்...'' என குப்பண்ணா கேட்க, ''ஒமைக்ரான் பீதி எல்லாம் போனதும் வர்றேன்னு சொல்லிட்டாரு பா...'' என்ற அன்வர்பாயே, ''செல்லுார் ராஜு பதவிக்கு வேட்டு வைக்க பார்க்கிறாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு வந்தார்.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''மதுரை அ.தி.மு.க., மாநகர், புறநகர் கிழக்கு, மேற்குன்னு மூணு மாவட்டங்களா செயல்படுது... மாநகர் செயலரா செல்லுார் ராஜு, கிழக்குல ராஜன் செல்லப்பா, மேற்குல உதயகுமார் இருக்காங்க பா...
''இப்ப, மத்த கட்சிகளை மாதிரி மாநகர் மாவட்டத்தையும் ரெண்டா பிரிக்கணும்னு ஒரு கோஷ்டி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை வலியுறுத்திட்டு இருக்குது பா...
''வைகையை மையமா வைத்து தெற்கு, வடக்குன்னு மாநகரை பிரிச்சு, ரெண்டு செயலர்களை நியமிக்கணும்னு கேட்கிறாங்க...
''அப்படி பிரிச்சா, வடக்கு மாவட்டத்துக்கு செல்லுார் ராஜும், தெற்கு செயலர் பதவியை பிடிக்க, மாநகராட்சி மண்டல 'மாஜி' தலைவர் சாலைமுத்து, 'மாஜி' எம்.எல்.ஏ., சரவணன்னு பலரும் இப்பவே துண்டு போட்டுட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.அரட்டை முடிய பெரியவர்கள் கிளம்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE