கோவிட்டை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னிலை: கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது| Dinamalar

கோவிட்டை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னிலை: கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது

Updated : ஜன 06, 2022 | Added : ஜன 04, 2022 | கருத்துகள் (13) | |
சென்னை :கவர்னர் உரையுடன், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி, முதல் முறையாக சட்டசபையில் உரையாற்றினார். அப்போது, கோவிட்டை கட்டுப்படுத்துவதில், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.அவரது உரையில், புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் பிரச்னைகள் தொடர்பாக, காரசாரமான விவாதங்கள் நடத்த, பிரதான
தமிழக சட்டசபை ,கூட்டத்தொடர்,

சென்னை :கவர்னர் உரையுடன், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி, முதல் முறையாக சட்டசபையில் உரையாற்றினார். அப்போது, கோவிட்டை கட்டுப்படுத்துவதில், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.


அவரது உரையில், புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் பிரச்னைகள் தொடர்பாக, காரசாரமான விவாதங்கள் நடத்த, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தயாராக உள்ளது.தமிழக சட்டசபை கூட்டம், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், தலைமை செயலக கட்டடத்தின் தரைதளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடப்பது வழக்கம். கடந்த 2010ல் தி.மு.க., ஆட்சியில், அண்ணா சாலையில் உள்ள ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. அதன்பின் சட்டசபைகூட்டம் அங்கு நடந்தது.அடுத்து, 2011ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு, சட்டசபை கூட்டத்தை, மீண்டும் கோட்டையில் நடத்தியது.


பட்ஜெட் தாக்கல்கடந்த 2020ம் ஆண்டு, கொரோனா நோய் பரவல் துவங்கியதும், சமூக இடைவெளியுடன், சட்டசபை கூட்டம் நடக்க வேண்டும் என்பதற்காக, தற்காலிகமாக வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில், சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது.கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றது. புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல், பட்ஜெட் தாக்கல் என, முதல் சட்டசபை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் தற்காலிக சட்டசபை கூட்டரங்கில் நடந்தது.

கடந்த மாதம் துவக்கத்தில், கொரோனா தொற்று பரவல் குறைந்ததால், மீண்டும் கோட்டையில் உள்ள அரங்கில், சட்டசபை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை, சபாநாயகர் அப்பாவு முறைப்படி வெளியிட்டார். அங்கு சட்டசபையை நடத்த, அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால், கடந்த மாதம் இறுதியில், 'ஒமைக்ரான்' பரவல் துவங்கியது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது தினமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கோட்டை அரங்கில் சட்டசபை கூட்டம் நடத்தும் திட்டம் கைவிடப்பட்டது.

புத்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர், இன்று காலை 10:00 மணிக்கு, கலைவாணர் அரங்கில் உள்ள தற்காலிக சட்டசபை கூட்ட அரங்கில் துவங்குகியது. முதல் முறையாக சட்டசபையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

கவர்னர் பேசியதாவது: கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. மெகா முகாம்கள் நடத்தி அதன் மூலம் தடுப்பூசி போடும் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 86.95 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒமைக்ரானை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. ஒமைக்ரான் மற்றும் அதன் சவால்களை சமாளிக்க அரசு தயாராக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் பரிசோதனை ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழகத்தில்தான்.

கொரோனா நிவாரண நிதியாக 543 கோடி ரூபாய் வந்த நிலையில் 541.64 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்த 27,432 குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மாநில பொருளாதாரம், மக்கள் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் கொரோனாவை தமிழக அரசு வெற்றிகரமான கட்டுப்படுத்தியது.

மழை வெள்ளத்தால் சாலை உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மழை வெள்ள காலங்களில் அணையில் இருந்து நீர் திறப்பதை அரசு முறையாக கையாண்டுள்ளது. நிவாரண பணிகளை முதல்வரே முன்னின்று முடுக்கிவிட்டுள்ளார். சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தரமான செயல்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சமாளிக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். 2030ம் ஆண்டில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் பணியாற்றுகின்றன.

அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு இருக்கும். அதேநேரத்தில் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். முல்லை பெரியாறு அணையில் முழு கொள்ளளவான 152 அடிக்கு நீரை தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு ஒரு போதும் மத்திய அரசு அனுமதி தரக்கூடாது.

தமிழகம் முழு அரசு பள்ளிகளை நவீனப்படுத்தும் சிறப்பு திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். 24344 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வியில் தரமான பாடத்திட்டத்தை சேர்த்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும்.

இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது.தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் இலவச பஸ்களில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர்.அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


ஜெய்ஹிந்த்


கவர்னர் தனது உரையை, 'நன்றி' 'வணக்கம்' 'ஜெய்ஹிந்த்' எனக்கூறி முடித்தார்.


தீர்மானம்
கவர்னர் உரையாற்றியதும், அவரது ஆங்கில உரையின் தமிழாக்கத்தை, சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அத்துடன் இன்றைய கூட்டம் நிறைவடைந்தது. பின், சபாநாயகர் அப்பாவு தலைமையில், அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 2 நாட்கள் விவாதம் நடத்தவும், 2 நாட்களுக்கு கூட்டத்தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.


பரிசோதனைகூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், போலீசார் என, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு இல்லாதவர்களுக்கு, தனித்தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் .

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால், தேர்தல் நேரத்தில் தி.மு.க., அளித்து நிறைவேற்றப்படாமல் உள்ள வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, மக்களுக்கு வெள்ள நிவாரணம் அளிக்கப்படாதது, பொங்கல் பரிசு தொகுப்பில், ரொக்கப் பணம் இடம்பெறாதது, 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படாதது என பல்வேறு பிரச்னைகளை எழுப்ப, அ.தி.மு.க.,வினர் தயாராக உள்ளனர். இதனால், விவாதத்தின் போது அனல் பறக்க வாய்ப்புள்ளது.


2 எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு வர தடை


சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்கியதால், கூட்டத்தில் பங்கேற்கவிருந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில், பெரம்பலுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகரன்; அறந்தாங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோருக்கு, கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. அதைத் தொடர்ந்து, அவர்கள் சட்டசபை கூட்டத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சட்டசபையில் செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார், சட்டசபை அலுவலகப் பணியாளர்கள், கூட்டத்தை கவனிக்க வரும் அதிகாரிகள் போன்றோருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X