இந்திய நிகழ்வுகள்:
இருவர் அடித்துக் கொலை
ஷாம்லி: உத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டம் லாங்க் கிராமத்தை சேர்ந்தவர்கள் பல்லா, 50, மற்றும் வினோத் குமார், 45. விவசாய வேலை முடித்து வீடு திரும்பிய இருவரையும், மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக படுகொலை நடந்துள்ளதாக கூறிய போலீசார், மூவரை கைது செய்துள்ளனர்.
மனைவி படுகொலை: கணவர் கைது
லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோவின் கோசைகஞ்ச் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சஞ்சீவ் குமார், 36. இவரது மனைவி நீது, 32. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சம்பவத்தன்று நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த சஞ்சீவ், 8வது மாடியில் இருந்து மனைவியை கீழே துாக்கி வீசினார். படுகாயமடைந்த நீது, சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார், கணவரை கைது செய்தனர்.
அடித்து கொன்று தீ வைத்து எரிப்பு
சிம்தேகா: ஜார்க்கண்ட் மாநிலம் சிம்தேகா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சஞ்சு பிரதான் என்பவரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்து தீ வைத்து எரித்தது. தகவல் அறிந்து போலீஸ் சென்ற போது அந்தக் கும்பல் தப்பியது. சட்டவிரோதமாக மரம் வெட்டியதால் அவர் தாக்கப்பட்டதாக கூறி, உடலை தர கிராம மக்கள் மறுத்தனர். அவர்களுடன் கடும் வாக்குவாதம் நடத்திய போலீசார் எரிந்த நிலையில் உடலை மீட்டனர். தலைமறைவான கொலைக் கும்பலை தேடி வருகின்றனர்.
திருமலையில் போலி டிக்கெட்; 7 பேர் மீது வழக்கு
திருப்பதி: திருமலையில் போலி தரிசன டிக்கெட்டுகளை விற்கும் கும்பல் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலியான டிக்கெட்டுகளை சிலர் விற்பனை செய்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இந்த கும்பலில் ஒரு கான்ஸ்டபிள் உட்பட இடைத்தரகர்களும், சில சிறுவர்களும் இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் அளித்த புகார் அடிப்படையில் திருமலை போலீசார் விசாரித்து வந்தனர்.
இதில் ஆங்கில புத்தாண்டு அன்று வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு போலி டிக்கெட்டுகளை விற்ற ஏழு பேர் குறித்த அடையாளம் தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இவர்களில் சிலர் திருமலையில் லட்டு கவுன்டரில் பணியாற்றுவோர் என தெரியவந்துள்ளது.
உலக நிகழ்வுகள்:
ஹெலிகாப்டர் விபத்து 2 விமானிகள் பலி
ஜெருசலேம் : இஸ்ரேல் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் இரு விமானிகள் பலியாயினர்.
இஸ்ரேலின் கடற்கரை நகரமான ஹைபா அருகே நேற்று முன்தினம் கடற்படை ஹெலிகாப்டரில் விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டனர்.அப்போது எதிர்பாராத வகையில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் இரு விமானிகள் பரிதாபமாக பலியாயினர். காயங்களுடன் மீட்கப்பட்ட மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து விமான பயிற்சிக்கு உடனடியாக தடை விதித்துள்ள இஸ்ரேல் விமானப்படை தளபதி, விபத்தில் சிக்கிய ரகத்தை சேர்ந்த ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
சீனாவில் நிலச்சரிவு: 14 பேர் பலி
பீஜிங்: சீனாவின் குய்ஸோ மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகினர்.நம் அண்டை நாடான சீனாவின் குய்ஸோ மாகாணத்தில் உள்ள பிஜி நகரில், கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த இடத்தில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் இடிபாடுகளில் சிக்கினர். இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயங்களுடன் மீட்கப்பட்ட மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணிகள் முடிவடைந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கொலம்பியாவில் மோதல்: 23 பேர் சுட்டுக் கொலை
போகோடா: கொலம்பியா நாட்டில் போதை பொருள்கடத்தல் கும்பலுக்கு இடையே ஏற்பட்டமோதலில் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொலம்பியாவின் அரகா மாநிலத்தில் போதை பொருள் கடத்தல் தொடர்பாக இரு குழுக்களுக்கு இடையே ஒருவாரமாக சண்டை நீடித்து வருகிறது. இது குறித்து டேம் நகர மனித உரிமை அதிகாரி ஜூவன் கார்லோஸ் வில்லேட் கூறியதாவது: கொலம்பியாவின் அரகா மாகாணத்தில் இருந்து அண்டை நாடான வெனிசுலாவிற்கு போதை பொருள் கடத்தப்படுகிறது. இதில் கடத்தல் நடக்கும் பகுதியின் அதிகாரம் தொடர்பாக இ.எல்.என்., மற்றும் 'பார்க்' ஆகிய இரு கும்பல்களுக்கு இடையே சண்டை நீடிக்கிறது.
இரு தரப்பினரும், தங்களை காட்டிக் கொடுப்பதாக சந்தேகிக்கும் அப்பாவி மக்களை வீடுகளில் இருந்து வெளியே இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில், இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேரை காணவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே மோதல் நடக்கும் பகுதிக்கு ராணுவம் விரைந்துள்ளது.
தமிழக நிகழ்வுகள்:
சிறுமியிடம் சில்மிஷம்; மதபோதகர் கைது
திருப்பூர்: திருப்பூர், வீரபாண்டியைச் சேர்ந்தவர் சாமுவேல், 31; மதபோதகர். அதே பகுதியில் சிறிய 'சர்ச்' ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பிரார்த்தனைக்கு வந்த 16 வயது சிறுமி ஒருவரிடம், பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்தார். இது தொடர்பாக, கடந்த செப்., மாதம், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில், சாமுவேல் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில், சாமுவேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அவரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.
![]()
|
லாரி மோதி மாணவி பலி
பல்லடம்: பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் அல்லாலபுரத்தை சேர்ந்த கருணாநிதி மகள் ரூபசத்யாதேவி, 18; பிளஸ் 2 முடித்துவிட்டு, 'நீட்' தேர்வு எழுதியுள்ளார். நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு, டூவீலரில் விநாயகர் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, லாரி மோதி, டூவீலருடன் துாக்கி வீசப்பட்டார். பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மனைவியை தாக்கிய கணவன் கைது
உடுமலை: உடுமலை அருகே, தளி மங்கலபுரம் பகுதியில், சுரேஷ், லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளாகிறது. சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மனைவி லதா குடும்பச்செலவுக்கு பணம் கேட்ட போது, அருகிலிருந்து இரும்பு கம்பியை எடுத்து, லதாவின் தலையில் தாக்கி, இனி பணம் கேட்டால், கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.காயமடைந்த லதா, உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்குபதிவு செய்து சுரேைஷ கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மூதாட்டியிடம் 14 பவுன் திருட்டு
திருநெல்வேலி: மூதாட்டியை ஏமாற்றி 14 பவுன் நகைகளை பறித்த மதுரை வாலிபர் போலீசில் சிக்கினார்.
திருநெல்வேலி என்.ஜி.ஓ., காலனியில் வசிப்பவர் வேலம்மாள் 63. இவர் மளிகை கடைக்கு சென்றபோது, போலீசார் போல இருந்த இருவர் அவரிடம் நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இதோ இந்த தாளில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என கூறி தாளை கொடுத்தனர். அவரும் கழுத்தில், கையில் அணிந்திருந்த நகைகளை கழற்றி அவர்கள் தந்த தாளில் பொதிந்து பைக்குள்வைத்துக் கொண்டார்.
வீட்டுக்கு சென்று பார்த்தபோது அந்த தாளில் நகைகளை காணோம். சிறு சிறு கற்கள் இருந்தன. பெருமாள்புரம் போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் மூலம் நகை பறித்த நபர் மதுரையை சேர்ந்தவர் எனவும் தற்போது அவர் மதுரை போலீசில் சிக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ரூ. 3,500 லஞ்சம்; வங்கி செயலர் கைது
அரூர்: என்.ஓ.சி., வழங்க, 3,500 ரூபாய் லஞ்சம் பெற்ற வங்கி செயலர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ், 87; விவசாயி. இவர், அரூர் பாட்சாபேட்டையில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண் மற்றும் நிலவள வங்கியில் பெற்ற டிராக்டர் கடனை முழுமையாக செலுத்தியுள்ளார்.வங்கியின் செயலர் முருகன், 50, என்பவரிடம், என்.ஓ.சி., எனும் தடையில்லா சான்று கேட்டுள்ளார்.
அவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத நாகராஜ், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்துள்ளார். நேற்று மதியம் 3,500 ரூபாயை, அலுவலகத்தில் இருந்த முருகனிடம், நாகராஜ் கொடுத்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., இமானுவேல் ஞானசேகரன் தலைமையிலான போலீசார், முருகனை கைது செய்தனர்.
முன்னதாக பணம் வாங்கிய முருகன், லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும், அலுவலக கழிப்பறையில் அதை வீசியுள்ளார். இதையடுத்து, அரூர் டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள் மூலம், கழிப்பறையில் வீசப்பட்ட பணம் மீட்கப்பட்டது.
பெண்ணிடம் அத்துமீறல் 'காமுக' நபர் கைது
கிண்டி : வீடு புகுந்து, மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காமுகனை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர்.
கிண்டி, வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் ரோஜா, 68; பூ வியாபாரம் செய்கிறார். இவருக்கு, 30 வயதில் மனவளர்ச்சி குன்றிய மகள் உள்ளார்.கடந்த மாதம் 16ம் தேதி, ரோஜா பூ வாங்க கோயம்பேடு சந்தைக்கு சென்றார். வீட்டில் மகள் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டுக்குள் புகுந்த, அதே பகுதியைச் சேர்ந்த சந்தா, 55, என்பவர், அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி, கிண்டி மகளிர் போலீசார், 30ம் தேதி, சந்தா மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த சந்தாவை, நேற்று கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE