இஸ்லாமாபாத் : 'தனி முகாமில் அடைக்கப் பட்டுள்ளவரை நேரில் ஆஜர்படுத்தத் தவறினால் பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு 'சம்மன்' அனுப்பப்படும்' என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஆரிப் குல் என்பவர் ஆப்கன் எல்லையில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தனி முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு பாக். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ''ஆரிப் குல் ஆஜராகி உள்ளாரா'' என நீதிபதி குல்சார் அகமது கேட்டார். அதற்கு ' இஸ்லாமாபாத்தில் இருந்து நெடுந்தொலைவில் உள்ள கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் ஆரிப் குல் உள்ளதால் அவரை ஆஜர்படுத்துவது சிரமம்' என கூடுதல் அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.
இந்த பதிலைக் கேட்டு கோபமடைந்த தலைமை நீதிபதி குல்சார் அகமது உத்தரவிட்டதாவது: ஆரிப் குல்லை ஆஜர்படுத்த வில்லையெனில் நீதிமன்றத்தை இழுத்து மூடுங்கள். இந்த வழக்கில் பாக். பிரதமருக்கு 'சம்மன்' அனுப்பி ஆஜராக வைக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE