சென்னை: சென்னையில் இரண்டு வாரங்களுக்கு முன் வரை, தினசரி கொரோனா தொற்று, 150க்கு கீழ் தான் பதிவாகி வந்தது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் வைரஸ், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணியர் வாயிலாக தமிழகத்திலும் பரவியது.
இதன் காரணமாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சென்னை மாநகராட்சியில், தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற சென்னை மாநகராட்சி, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளுடன் இணைந்து மண்டலத்துக்கு இரண்டு அமலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர், பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உடனடி அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் ஒரே நாளில், 1,022 பேரிடமிருந்து, 2 லட்சத்து 18 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.டிசம்பர் 31ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, 2,603 பேரிடமிருந்து, 5.45 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, கொரோனா விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணித்து, நடவடிக்கையை தீவிரப்படுத்த, மண்டல அமலாக்க குழுவினருக்கு மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரைகுறைசென்னையில் தொற்று அதிகரித்து வந்தாலும், பொதுமக்கள் வழிக்காட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. சிலர் முக கவசத்தை, தாடைக்கு கீழ் அணிகின்றனர். இவர்கள், தொற்றிலிருந்து தப்பிக்க முடியாது. எனவே, இதுபோன்று அரைகுறையாக அணிவோருக்கும் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திறந்தவெளிகளை விட உள் அரங்குகளில் அதிவேகமாக கொரோனா தொற்று பரவுகிறது. எனவே, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் போன்றவற்றில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை, திடீர் சோதனையாக நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திடீர் சோதனை நடத்தப்படும் என்பதால், பல நிறுவனங்கள், கல்வி நிலையங்களில், அனைவரும் முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் கடைப்பிடிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் ஜன்னல், கதவுகளை திறந்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒமைக்ரான் வைரசால், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே, மக்கள் அலட்சியம் காட்டாமல், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்; தடுப்பூசி போடுவோருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இந்நிலையில், நந்தம்பாக்கத்தில் 504 ஆக்சிஜன் படுக்கை, 400 சாதாரண படுக்கை உட்பட, 904 படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின், நேற்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
தீவிர கண்காணிப்பு
தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மாநகராட்சி மட்டுமின்றி, காவல் துறை சார்பிலும் தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், முக கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கும் பணியை, நேற்று முதல் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும், மூன்று இடங்களில் கூடாரம் அமைத்து, ஒலிபெருக்கி வாயிலாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க, அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதற்காக, நாடகம் மற்றும் தெருக்கூத்து வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருவதால், முக கவசம், சமூக இடைவெளி என, கொரோனா விதிகளை தனிக்குழு அமைத்து கண்காணிக்கின்றனர்.
வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு?சென்னை, பிராட்வே, பாரதி மகளிர் கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று அறிகுறி உள்ளோருக்கான முதற்கட்ட உடல் பரிசோதனை மையத்தை, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
தமிழகத்திலேயே முதன்முதலாக, சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளோருக்கான முதல்கட்ட உடல் பரிசோதனை மையம், மாநகராட்சி சார்பில் துவங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் அனைத்து வகையிலும் மேம்படுத்தப்பட்ட முன்கள பணியாளர்கள் 1000 பேர் உள்ளனர். வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, மருத்துவ வல்லுனர்களுடன் பேசி முதல்வர் முடிவெடுப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.
எச்சரிக்கையாக இருங்கள்!
மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: சென்னையில் 35 சதவீத மக்கள் மட்டுமே முககவசம் அணிகின்றனர். அதிகரித்து வரும் தொற்றை பொதுமக்கள் உணர்ந்து, தாங்களாக முககவசம் அணிய வேண்டும். தொற்று பாதித்த பகுதிகளை வார்டு வாரியாக கண்டறிந்து, விரைவில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
எந்தெந்த பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வடைந்துள்ளதோ, அங்கு வரும் நாள்களில் 'மெகா' தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்படும். தற்போதைய காலகட்டத்தில், கொரோனா மற்றும் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நோய் தொற்று பாதித்து, வீட்டு தனிமையில் இருப்பவர்கள் 044 -2538 4520, 044 -4612 2300 என்ற மாநகராட்சி எண்களை தொடர்பு கொண்டு, மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE