விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 4 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இன்று (ஜன.,5) காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் 15க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆலை உரிமையாளர் கருப்பசாமி, செந்தில் ஆகிய இருவரும் பட்டாசுக்கு தேவையான மருந்துகள் கலக்கும் பணியில் ஈடுபட்ட போது உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டு ஒரு அறை தரைமட்டமானது.
இந்த வெடிவிபத்தில் விஜயகரிசல்குளத்தை சேர்ந்த செந்தில்,38, கருப்பசாமி,46, கண்ணகுடும்பன் பட்டியைச் சேர்ந்த காசி, கொம்மிங்காபுரத்தை சேர்ந்த அய்யம்மாள் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், முனியசாமி, சரஸ்வதி, பெருமாள் ஆகிய மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE