இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும்...
எ.அப்துல் மாலிக், வேல்வார் கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில நாட்களாக, பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாசும், அவரது மகன் அன்புமணியும், '32 ஆண்டுகளாக கட்சி நடத்தியும், ஆட்சியை பிடிக்க முடியலையே...' என கூக்குரலிடுகின்றனர்!அய்யா ராமதாஸ் அவர்களே...நீங்களும், உங்கள் மகனும் கொஞ்சம் நெஞ்சில் கைவைத்து யோசித்துப்பாருங்கள்.பா.ம.க., கட்சியால், உங்கள் குடும்பத்தை தவிர, வேறு யாராவது பலன் அடைந்திருக்கின்றனரா? ஜாதியை முன்வைத்து தான் கட்சியை வளர்த்தீர்... அந்த மக்களுக்காவது ஏதாவது செய்தீரா?படித்து முன்னேற வேண்டிய இளைஞர்களை, வன்முறை பாதையில் திருப்பியது தானே உங்கள், 'சாதனை!'உங்களையும், உங்கள் மகனையும் தவிர பா.ம.க.,வில் வலிமையான, ஆளுமைதிறனுள்ள யாருமே இல்லையா அல்லது வேறு யாரையும் முன்னிலைப்படுத்த மனமில்லையா?
லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த உங்கள் மகன் அன்புமணியை, ஏன் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்க வேண்டும்?நீங்களும், உங்கள் மகனும் மட்டும் பா.ம.க., என்றால், இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும், ஆட்சியை பிடிக்க முடியாது!'கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும், யாருடனும் கூட்டணி இல்லை' என, நீங்கள் கூறுவீர்... ஆனால், தேர்தல் வந்ததும் எவ்வித கூச்சமும் இல்லாமல் கட்சி மாறி, மாறி கூட்டணி வைத்து கொள்வீர்!உங்களை எப்படி மக்கள் நம்புவர்?இதில் அங்கலாய்ப்பு வேறு!தேர்தல் வர இன்னும் சில ஆண்டுகள் இருப்பதால், 'இனிமேல் யாருடனும் கூட்டணி இல்லை' என, நாடகம் போடுகின்றீர் என்பது அனைவருக்கும் தெரியும். தேர்தல் வந்ததும், 'சீட்டுக்கும், நோட்டுக்கும்' கூட்டணி அமைத்து விடுவீர்கள்.
தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும், பா.ம.க.,வை உதறித் தள்ளி விடும் காலம் வெகு தொலைவில் இல்லை!
எதுக்கு 'நுால்' விடணும்?
ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இனிமேல் என் மகனோ, மருமகனோ, குடும்பத்தாரோ அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறிக் கொள்கிறேன்' என, முதல்வர் ஸ்டாலின் உதிர்த்தார் உறுதிமொழி!
அது போல, 'அரசியல் பாரம்பரியம் உள்ள குடும்பத்திலிருந்து வந்ததால், நானும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை; அரசியல் எனக்கு சரிப்பட்டு வராது' எனக் கூறியவர் தான், உதயநிதி ஸ்டாலின்.'வாரிசு அரசியல் இல்லையென்றால், தி.மு.க., இவ்வளவு கட்டுக்கோப்பான கட்சியாக வளர்ந்திருக்க முடியாது' என்று, அக்கட்சியின் எம்.பி., ஒருவர் அறிவித்திருக்கிறார்.ஒரு காலத்தில் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்த காங்கிரசின் ஆணி வேரே அறுந்து போய் கிடப்பதற்கு காரணம், பாழாய்போன வாரிசு அரசியல் தான் என்பது, அக்கட்சியினர் உட்பட அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இந்த லட்சணத்தில் தான், உதயநிதியை தமிழகத்தின் துணை முதல்வராகவோ, சென்னை மேயராகவோ ஆக்க வேண்டும் என்று, காங்., தலைவர்களே முன்மொழிந்து வருகின்றனர்.பொதுவாக, ஒரு பரம்பரையில் மூன்று தலைமுறைக்கு மேல் வாழ்ந்தோரும் இல்லை; வீழ்ந்தோரும் இல்லை என்பர்; இதற்கு, பல வரலாற்றுச் சான்றுகள்
உள்ளன.தஞ்சை பெரிய கோவிலைத் தோற்றுவித்த ராஜராஜ சோழனை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. அவரின் மகன் ராஜேந்திர சோழனும், கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவி, வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர்.ஆனால் தந்தைக்கு நிகரான சிறப்பும், வீரமும் உடைய ராஜேந்திர சோழனின் மகன் ராஜாதிராஜ சோழனைப் பற்றி, பலருக்கும் தெரியாது. அதற்குப் பின் வந்த வாரிசுகள் பற்றிய பதிவுகள், வரலாற்றில் அதிகம் காணப்படவில்லை.சோழரை விட, தமிழகத்தை ஆண்டு வரும் கருணாநிதியின் பாரம்பரியம் வலிமையானதா என தெரியவில்லை.கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அடுத்தது இன்பநிதி என வாரிசுகளின் ஆதிக்கம் இன்னும் எத்தனை தலைமுறைக்கு நீளும்
என்பது யாருக்கும் தெரியாது.உதயநிதியின் பேரன், தி.மு.க., தலைவரானாலும், அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கப் போவதில்லை. ஏனெனில், அவர்கள் எல்லாருமே தங்கள் வாரிசுகளை, கட்சி பதவியில் அமர்த்திஉள்ளனர்.உதயநிதியை, துணை முதல்வராக்கினால் யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை; அப்புறம் எதுக்கு, கட்சியினரை பேசச் சொல்லி, 'நுால்' விட்டு பார்க்கிறார்,
முதல்வர் ஸ்டாலின்?
காப்பாற்றுவது கஷ்டம்!
மரகதம் சிம்மன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா மூன்றாவது அலை, 'ஒமைக்ரான்' அதிவேகமாக பரவுகிறதாம். இதை ஆரம்பக்கட்டத்திலேயே தடுக்க அரசும், மக்களும் நடவடிக்கை மேற்கொள்வது நல்லது.இரண்டு தடுப்பூசிகளும் போட்டதற்கான சான்றிதழ்களை சமர்ப்பித்த அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஊதியம் கொடுக்கப்படும் என, பஞ்சாபில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல, தமிழகத்திலும் சில அதிரடி அறிவிப்புகள் வெளியானால் மட்டுமே, மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருவர்.
'தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் காண்பிப்போருக்கு மட்டுமே, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்' என அறிவிக்கலாம்.ஹோட்டல், மளிகை கடை முதல் ஐ.டி., நிறுவனங்கள் வரை, தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும்.இஸ்ரேலில், ஏற்கனவே மூன்று தடுப்பூசிகள் எல்லாருக்கும் போட்டாகி விட்டது; இப்போது, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நான்காவது தடுப்பூசியும் போடப் போகின்றனராம்.நம் நாட்டு ஜனத்தொகைக்கு, அவ்வளவு தடுப்பூசி எல்லாம் கட்டுப்படியாகாது. குறைந்தபட்சம் எல்லாரும் இரண்டு தடுப்பூசிகளாவது போட்டிருக்க வேண்டும். தற்போது, இரவு நேர மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை அமல்படுத்துவதில் அரசு கண்டிப்புடன் நடந்து கொள்ளா விட்டால், நம் நாட்டை
மூன்றாவது அலையில் இருந்து காப்பாற்றுவது கஷ்டம்.