தனியார் ஓட்டலில் நிறுத்த பஸ் டிரைவர்களுக்கு கெடுபிடி!
''ஊராட்சி பத்தி, முதல்வர் வரைக்கும் புகார் போயிட்டுல்லா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''முதல்வர் வரைக்கும் புகார் போற அளவுக்கு முக்கியமான ஊராட்சி எதுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''நீலகிரி மாவட்டம், சேரங்காடு ஊராட்சி, தென் மாநிலங்கள்லயே பெரிய ஊராட்சின்னு பேரு வாங்கியிருக்கு... இங்க, காங்., கட்சியைச் சேர்ந்த பெண் தான், தலைவரா இருக்காங்க வே...
''இவங்க, தன் பர்மிஷன் இல்லாம ஊராட்சியில ஒரு அணுவும் அசையக் கூடாதுன்னு, துணை தலைவர், கவுன்சிலர்களுக்கு கடிவாளம் போட்டிருக்காங்க வே...
''எந்த வளர்ச்சி பணியா இருந்தாலும், தனக்கு வேண்டியவங்களுக்கு மட்டும் தர்றது, 100 நாள் பணித்தள பொறுப்பாளர்கள் நியமனத்துல தலையிடுறதுன்னு அக்கப்போர் பண்ணிட்டு இருக்காங்க... இவங்க நடவடிக்கையால வெறுத்து போன கவுன்சிலர்கள், ஆதாரங்களோட முதல்வர், காங்., தலைமைக்கு புகார்களை தட்டி விட்டிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
'லில்லி மலருக்கு கொண்டாட்டம்...' என, டீக்கடை ரேடியோவில் கசிந்த பாடலை ரசித்தபடியே, ''வந்தது தெரியாம போயிட்டாருங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''யாரை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''அரசு துறைகளின் செயலர், இயக்குனர்கள் எந்த மாவட்டத்துக்கு விசிட் அடிச்சாலும், அந்த மாவட்ட எல்லையில, துறையின் அதிகாரிகள் காத்து கிடந்து பூங்கொத்து குடுத்து, தடபுடலா வரவேற்பு தருவாங்க...
''சமீபத்துல, திருநெல்வேலியில ஆய்வுக் கூட்டத்துக்காக பள்ளிக்கல்வி துறை கமிஷனர் நந்தகோபால், கார்ல மதுரை வழியா போனாருங்க... அப்ப, மதுரை எல்லையில இருக்கிற தும்பைப்பட்டியில, இல்லம் தேடி கல்வித் திட்டம் மையத்துக்கு, அத்திட்டத்தின் சிறப்பு அதிகாரி இளம்பகவத்துடன் 'சர்ப்ரைஸ் விசிட்' அடிச்சிருக்காருங்க...
''நான் தான் கமிஷனர்னு அறிமுகப்படுத்தி, திட்ட செயல்பாடுகளை பார்த்தவர், மாணவர்களுக்கு புத்தகங்கள், சாக்லேட் எல்லாம் குடுத்துட்டு போனாருங்க... அவர் வந்துட்டு போனதும் தான், மாவட்ட அதிகாரிகளுக்கே தகவல் தெரிஞ்சிருக்குதுங்க...
''சில அதிகாரிகள், கமிஷனரை அலைபேசியில அழைச்சப்ப, 'நீங்க சிரமப்பட வேண்டாம்... நான் திருநெல்வேலி போறேன்... உங்க வேலைகளை பாருங்க'ன்னு சொல்லிட்டாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''எந்த ஆட்சி வந்தாலும், 'கல்லா' கட்டறவா கட்டிண்டு தான் இருக்கா ஓய்...'' என, சலித்தபடியே கடைசி தகவலுக்கு வந்தார்
குப்பண்ணா.
''யாரு, என்னன்னு விபரமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''திருப்பூர்ல இருந்து பவானி பைபாஸ் ரோடு வழியா சேலம் போற அரசு பஸ்கள், தேசிய நெடுஞ்சாலையில, குறிப்பிட்ட காலேஜ் முன்னாடி இருக்கற ஓட்டல்ல கட்டாயம் நின்று போகணும்னு உத்தரவு போட்டிருக்கா ஓய்...
''சில நேரங்கள்ல, லேட்டாகிடுத்துன்னு டிரைவர்கள் நிறுத்தாம போயிட்டா, ஓட்டல் நிர்வாகம் தரப்புல இருந்து போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் போயிடறது ஓய்... இதனால, காலேஜ் பெயர், ஓட்டல் பெயர்களை குறிப்பிட்டு தனி லெட்ஜரே
பராமரிக்கறா...
''அதுல, பஸ் எண், பணியில இருக்கற டிரைவர், கண்டக்டர் பெயர்களை எழுதி, மேற்கண்ட ஓட்டல்ல நிறுத்துறதா கையெழுத்து வாங்கிண்டு தான் அனுப்புறா... எல்லாம் ஓட்டல் நிர்வாகத்தின் கவனிப்பு தான் காரணம்னு டிரைவர்கள், கண்டக்டர்கள் புலம்பறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''நம்ம மித்திலேஸ் எங்கவே இன்னும் காணும்...'' என, தெருவை பார்த்து அண்ணாச்சி முணுமுணுக்க, அரட்டை தொடர்ந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE