பனி காலத்தில் வரும் உடல் உபாதைகளை சரி செய்வது எப்படி என கூறுகிறார், சித்த மருத்துவர் சோ.தில்லைவாணன்: இது பனிக் காலம். வழக்கமாக, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உண்டாகும் பின்பனிக் காலம் பலருக்கும் மிகுந்த சவாலானது. பல விதமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்; சரும நோய்களும், சுவாச மண்டல நோய்களும் அதிகரிக்கும்.குறிப்பாக, தோல் ஒவ்வாமை, 'எக்சீமா' எனப்படும் கரப்பான் நோய், 'சோரியாசிஸ்' எனப்படும் சிரங்கு, பாத வெடிப்பு போன்றவை ஏற்படும். மேலும், ஒவ்வாமையால் மூக்கடைப்பு, அடுக்கு தும்மல், இருமல், ஆஸ்துமா போன்ற சுவாச மண்டல நோய்களும் வாட்டும். இந்த கோளாறுகளை, எளிய சித்த மருத்துவ முறைகளால் குணப்படுத்தலாம். பனி வறட்சிக்கு நீர்ச்சத்தை இழப்பதும், தவறான உணவு முறையும், உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவு பழக்க வழக்கங்களும், மறந்து போன எண்ணெய் குளியலும் தான் காரணம்.வாயு கோளாறை ஏற்படுத்தும் கிழங்கு வகைகள், மசாலா சேர்த்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். குடலில் வறட்சியை போக்க, நெய் ஒரு தேக்கரண்டி அளவு உணவில் சேர்க்கலாம்.டீ, காபி போன்ற உஷ்ணமான பானங்களை தவிர்க்க வேண்டும். வாரம் இரு முறை நெய், விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. குளித்து முடித்தவுடன் ஒரு முறையும், இரவில் ஒரு முறையும் உடலில் எண்ணெய் தடவுதல் அவசியம். பனிக்காலத்தில் சுவாச பாதையில் ஏற்படும் ஒவ்வாமை, தும்மல், இருமல் நோய்களுக்கு மஞ்சள் நல்ல பலனை தரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் பொடியை தேனிலோ, பாலிலோ கலந்து குடிக்கலாம்.இதில் உள்ள, 'குர்குமின்' என்ற பொருள், 'அலர்ஜி'க்கு காரணமான உடல் செல்களை நிலைப்படுத்தி ஒவ்வாமையை குறைக்கும். சுக்கு அல்லது இஞ்சி சேர்த்த தேநீர் எடுப்பதும், அடிக்கடி தும்மல் ஏற்படுவதை தடுக்கும்.சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்த, 'திரிகடுக சூரணம்' என்ற சித்த மருந்தை, தேனில் கலந்து எடுக்க, பனிக்கால சுவாச மண்டல நோய்களை வர விடாமல் தடுக்கலாம்.ஆஸ்துமாவால் அவதிப்படும் குழந்தைகளுக்கு கற்பூரவள்ளி இலை சாறும், பெரியவர்களுக்கு துாதுவளை ரசமும் நல்ல பலனை தரும்.துளசி, அதிமதுரம், சுக்கு, மிளகு, மஞ்சள் சேர்ந்த தேநீர் குடிப்பது, சுவாசப் பாதை நோய்கள் வராமல் தடுக்கும்; சுவாசப் பாதை தொற்று கிருமிகளையும் கொல்லும்.மேலும், நீர் சத்து அதிகம் உள்ள காய்கள், பழங்கள், அதிக எண்ணெய் சேர்ந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.ஆஸ்துமாவால் அவதிப்படும் நபர்கள், திப்பிலியை பொடித்து, தேனில் கலந்து சாப்பிட்டு வர, மீண்டும் ஆஸ்துமா வராமல் தடுக்கும். நீர்க்கோவை மாத்திரை எனும் சித்த மருந்தை, நெற்றியில் பற்று போட, பனியால் வந்த தலைவலி குறைந்து, நிம்மதியான துாக்கம் வரும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE