சென்ன: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வரும் ஞாயிறன்று முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இரவு நேர ஊரடங்கும் அமலுக்கு வருகிறது. ஞாயிறு மற்றும் வார நாட்களில் இரவு, வணிக வளாகம், கடைகள், உணவகங்கள் செயல்படாது. மூன்று நாட்கள் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஒன்று முதல் ஒன்பது வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கிடையாது. வரும் 20ம் தேதி வரை கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக நேற்று முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:மாநிலம் முழுதும், இன்று முதல் வார நாட்களில், இரவு 10:00 மணி முதல் காலை 5:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நேரத்தில், அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை. எனினும், இந்த இரவு நேர ஊரடங்கின் போது, சில அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
அதன் விபரம்:
* மாநிலத்திற்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே, பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள்; பால், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், மருத்துவத் துறை சார்ந்த பணிகள்; ஏ.டி.எம்., மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள், இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்
* பெட்ரோல், டீசல் பங்க்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும்
* உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்படலாம்
* பணிக்கு செல்லும் பணியாளர்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள், வீட்டிலிருந்து பணிபுரிய
அறிவுறுத்தப்படுகின்றனர்.
முழு ஊரடங்கு
* வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்
* அன்று அத்தியாவசிய பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் வினியோகம், ஏ.டி.எம்., மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து, பெட்ரோல், டீசல் பங்க்குகள் இயங்க அனுமதிக்கப்படும்
* பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில்கள் இயங்காது
* முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் 'பார்சல்' சேவை மட்டும், காலை 7:00 முதல் இரவு 10:00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள், அந்த நேரத்தில் மட்டும் செயல்படலாம். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை
* ஞாயிறு மற்றும் வார நாட்களில், இரவு 10:00 முதல் காலை 5:00 மணி வரை, விமானம், ரயில் மற்றும் பஸ்களில் பயணிப்பதற்காக, ரயில் மற்றும் பஸ் நிலையங்களுக்கு செல்ல, சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படும். அவ்வாறு செல்லும் போது பயணச்சீட்டு வைத்துக் கொள்ள வேண்டும்
இதர கட்டுப்பாடுகள்
* மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை
* அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல் ஒன்பது வரை, நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது
* பொதுத் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் நலன் கருதி, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடக்கும்
* அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லுாரிகள் தவிர, அனைத்து கல்லுாரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள், தேர்வு எழுதுவதற்காக ஜனவரி 20 வரை விடுப்பு அளிக்கப்படுகிறது
* பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது
* பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்துவது, தற்போது ஒத்தி வைக்கப்படுகிறது
* பொது பஸ்கள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில், 50 சதவீதம் மட்டும் பயணியர் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்
* மெட்ரோ ரயிலில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிக்கலாம்
* அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன
* அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது
* அனைத்து கடற்கரைகளிலும், பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும்
* அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
* சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்
* மீன் மற்றும் காய்கறி சந்தைகளில், குறிப்பாக வார இறுதி நாட்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்கப்படும்
* தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையங்களில் இருந்து செல்லும் பஸ்களை, மண்டலம் வாரியாக பிரித்து, வெவ்வேறு இடங்களில் இருந்து இயக்க, போக்குவரத்து துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது
* கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அனைத்து சேவைத் துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும், இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்
* அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், வரும் 9ம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்
* ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், இரவு நேர பணிக்கு செல்லும் போது, தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்துக் கொள்ள வேண்டும்
அனுமதி
* உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில், 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து, உணவு அருந்த அனுமதிக்கப்படும்
* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளை, அதிகபட்சம் 100 பேருடன் மட்டும் நடத்தலாம்
* இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 50 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம்
* துணிக் கடைகள் மற்றும் நகைக் கடைகளில் ஒரு நேரத்தில், 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்
* கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்
* உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்
* அனைத்து திரையரங்குகளும் அதிக பட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்படலாம்
* திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம்
* உள் விளையாட்டு அரங்குகளில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சியும், 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்
* அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை, 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்தலாம்
* அழகு நிலையங்கள், சலுான்கள் போன்றவை, ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்
* விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்து உள்ளார்.
முதல்வர் வேண்டுகோள்!
* இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும்
* கடைகளில் பணிபுரிவோர் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதை, சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்; தவறும்பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
* வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிவோர், உரிமையாளர்கள், கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
* அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
* கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை மூட, சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE