போன நுாற்றாண்டைப் போல இல்லாமல், 21ம் நுாற்றாண்டில் சீனா தொழில்நுட்ப ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் பலனாக, இப்போதே அமெரிக்காவின் தொழில்நுட்பத் திறன்களை சீனா முந்திவிட்டது என்கிறது, ஹார்வர்டு கென்னடி கல்லுாரி வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு.
அந்த ஆய்வை மேற்கோள் காட்டி 'சவுத் சீனா மார்னிங் போஸ்ட்' இதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது. அதன்படி, சிலிக்கன் சில்லு தயாரிப்பு, 5ஜி பயன்பாடு. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி, உயிரித் தொழில்நுட்பம் மற்றும் பசுமைத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா பல சாதனைகளைச் செய்திருக்கிறது.
ஏழை நாடு, காப்பியடிக்கும் நாடு போன்ற பட்டங்களை சீனா கடந்த 20 ஆண்டுகளில் பொய்யாக்கியிருக்கிறது. புரட்சிகரமான குவாண்டம் கணினி தயாரிப்பில் சீனா, அமெரிக்காவைவிட வெகு துாரம் முன்னேறியுள்ளது.
மேலும் செயற்கை நுண்ணறிவில் பல புதுமைகளை, சீன மொழியிலேயே ஆய்வுக் கட்டுரைகளை பதிப்பித்து நிறுவியுள்ளது. அமெரிக்காவில் 5ஜி பயனாளிகள் இன்று 60 லட்சம் பேர் தான். ஆனால், சீனாவில் கடந்த மாதமே, 1.5 கோடிபேர் 5ஜி போன்களுடன் வலம் வந்தனர். அடுத்த 10 ஆண்டுகளில், அமெரிக்காவைவிட, பல அறிவியல் துறைகளில் சீனா முன்னணியில் இருக்கும் என ஹார்வர்டு ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE