ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவில் இந்த ஆண்டு இசை விழாவையொட்டி நடந்த ஒரு நிகழ்வில், வித்வான்கள் பேபி ஸ்ரீராம், அருண் பிரகாஷ் மற்றும் பரத் சுந்தர் ஆகியோர், மெட்டமைத்தல் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தந்துள்ளது என்பது குறித்து, அவரவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதலில் ஆரம்பித்த இசைக் கலைஞர் பேபி ஸ்ரீராம், ''மெட்டமைத்தல் இரண்டு வகை, ஒன்று தானே இயற்றி மெட்டமைத்தல், மற்றொன்று பிறரின் பாடல்களுக்கு மெட்டமைத்தல். இதில் இரண்டாவதில் சிலர், இன்ன தாளம், இன்ன ராகம் என்ற தேவையைக்கூடத் தெரிவித்து விடலாம். ''என்ன விதமான உருப்படி என்பது, அது தில்லானாவா, வர்ணமா, கீர்த்தனையா என்பதும் இங்கு நோக்கப்பட வேண்டும். தில்லானா என்றாலே ஜதிகள், அவற்றுக்குள் உள்ளார்ந்த கணக்கு வழக்குகள் இருந்தாக வேண்டும்,'' என்றார்.அடுத்து பேசிய பரத், ''கம்போசிங்க் என்பது ஒரு இசை வடிவம் மூலம், ஒரு எண்ணத்தை நீங்கள் சொல்ல நினைக்கிறீர்கள். இந்த சொல்லுதலில், இசைக்கும், சாஹித்யத்திற்கும் சமபங்கு இருக்க வேண்டும். அப்போது தான் ஒருவித 'கனெக்ட்' ஏற்படும்,'' என்றார். அருண் பிரகாஷ் பேசுகையில், ''இசையமைத்தல் என்பது தானாக உதிக்க வேண்டிய ஒன்று. இதே வீச்சில் ஒரு கரஹரப்ரியாவில் வரும் சக்கனி ராஜ மார்க்கத்திற்கோ அல்லது ஒரு காம்போதியில் உள்ள ஓ ரங்கசாயிக்கோ உள்ள சங்கதிகள் எல்லாவற்றையும், தியாகராஜர் தான் போட்டிருப்பாரா என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்ல இயலாது,'' என்றார். அவரவர்களின் அறிமுக உரை நிறைவடைந்ததும், இது தொடர்ந்து ஒரு கலந்துரையாடலாக நடத்தப்பட்டது. அநேகமாக ஒருவர் கருத்தில் இருந்து மற்றவரின் கருத்து எடுத்துச் செல்லப்பட்டது.டி.எம்.தியாகராஜன், டி.எம்.டி., எவ்வாறு 'நொடேஷன்' அமைத்து, அதை இம்மி கூட அசைக்காமல் பின்பற்றுவார் என்றும், நொடேஷன் வகை என்று பார்த்தால், மிகக் கடினமாக உள்ளது டி.ஆர். சுப்பிரமணியத்தினுடையது. கேதாரனாதனுடையது இன்னும் கடினம் என்றார்கள் அனைவரும். இந்த வாக்கேயக்காரர் பணியில் ஈடுபடுவதற்கு ஏன் விருத்தத்தில் இருந்து ஆரம்பிக்கக் கூடாது என்றும் விருத்தம் தாளத்திற்குள் கட்டுப்படுத்தப் படாத ஒன்று என்றும் தெரிவித்து, விருத்தம் சரியாகப் பதம் பிரித்துப் பாடாவிட்டால் அது வருத்தமாகத்தான் முடியும் என்றும் கூறினர். விருத்தம் பாடுவதில் ஒரு ஜீனியஸ் செதலபதி பாலசுப்பிரமணியன். அவரிடம் கற்க நிறையவே இருக்கிறது என்றனர் மூவருமே. அவர் பாடிய பாடல்கள் உதாரணங்களாக நிறைய வந்தன.சங்கதிகள் எப்படி அமைப்பது என்று பாடிக் காட்டினர் ஒவ்வொருவரும். ஒருவித கிரமத்துடனேயே சங்கதிகள் ஏன் என்பதையும் விளக்கிப் பேசினர். செம்மங்குடி எத்தனயோ பாடல்களுக்கு மெட்டமைத்து இருந்தாலும் பெருமையாகச் சொல்லாமல், செட் பண்ணியிருக்கிறேன் என்ற ஒரு பதத்தையே உபயோகிப்பார் என்றனர். கடையநல்லுார் வெங்கட்ராமன் எவ்வாறு எம்.எஸ்.,சுப்புலட்சுமியின் பெருவாரியான பாடல்களுக்கு மெட்டமைத்துள்ளார் என்பதை நன்றியுடன் தெரிவித்தனர். எம்.எஸ்., எந்தவித இறுமாப்பும் இல்லாமல் கற்கும் ஒரு மாணவியாக தன்னை பாவித்து, கடையநல்லுாரிடம் பணிவுடன், சிரம் தாழ்த்தி கற்றுக் கொண்டதைப் பற்றிச் சிலாகித்துப் பேசினர். முக்கியமாக இவர்கள் கோடிட்டுக் காட்டியது. ஒவ்வொரு கம்போசரும் ஒரு நல்ல ரசிகராக முதற்கண் இருந்தால் தான் மற்றதெல்லாம் அமையும் என்பதையே.நிகழ்ச்சிக்கு முன்னுரையும் முடிவுரையும் அளித்த வித்வான் சசிகிரண், ''இது ஒரு தொடர் நிகழ்வாகவே நடத்தப்பட வேண்டும் என்றும், தேவையென்றால் வரும் நாட்களில், இது குறித்த ஒரு பயிற்சிப் பட்டறை கூட நடத்தலாம்,'' என்றார்.-எஸ்.சிவகுமார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE