புதுடில்லி: பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு விதிமீறல் நடந்தது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
நேற்று (ஜன.,5) பஞ்சாப் சென்றிருந்த பிரதமர் மோடி, ஹுசைனிவாலாவில் தேசிய போர் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்தார். மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டு, சாலை மார்க்கமாக சென்றார். அப்போது ஹுசைனிவாலா அருகே பிரதமரின் கான்வாயை போராட்டக்காரர்கள் மறித்தனர். பிரதமரின் பாதுகாப்பில் மாநில அரசு விதிமீறல் நடந்ததாகவும், அலட்சியமாக செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது.

பிரதமருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என பஞ்சாப் அரசு மீது பலரும் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு குறித்து கவலை தெரிவித்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியை, பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, பாதுகாப்பு விதிமீறல் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் விளக்கமளித்தார்.
துணை ஜனாதிபதி கவலை
பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி வெங்கையாநாயடு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குழு அமைத்தது பஞ்சாப் அரசு
பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக விசாரணை நடத்த 2 பேர் கொண்ட குழுவை பஞ்சாப் மாநில அரசு அமைத்துள்ளது. பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மெஹ்தாப் கில், உள்துறை மற்றும் நிதித்துறையின் முதன்மை செயலாளர் அனுராக் வர்மா ஆகியோர் கொண்ட இந்த விசாரணை குழு, மூன்று நாள்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது. தலைமை செயலாளர், டிஜிபியை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக்கூறியுள்ளார்.இ ந்த வழக்கு நாளை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE