புதுடில்லி: பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியின் வாகனம் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டது. இதனால் அவர் மீண்டும் டில்லி திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக நீதித்துறை விசாரணைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை இன்று (ஜன.,7) விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபில் பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளன. மத்திய அரசு கொண்டு வந்து பின்னர் ரத்து செய்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்ததில் பஞ்சாப் விவசாய தரகர்களுக்கு பெரும் பங்கு உண்டு.

இந்நிலையில் பெரோஸ்பூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நேற்று அங்கு சென்றார். ஹெலிகாப்டரில் செல்ல இருந்தவர், வானிலை சரியில்லாததால் சாலை மார்க்கமாக பயணித்தார். அவர் வந்துக் கொண்டிருந்த சாலையை போராட்டக்காரர்கள் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மாநில போலீசார் அவர்களை அப்புறப்படுத்தவில்லை. இதனால் பிரதமரின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. மத்திய அரசு அதிகாரிகளுடன் மாநில அரசு ஒருங்கிணைந்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் லாயர்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்ததது. அதில் எதிர் தரப்பாக பஞ்சாப் மாநில தலைமைச் செயலர், டி.ஜி.பி., ஆகியோரை சேர்த்துள்ளனர். இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யவும், இதற்கு காரணமானவர்களை தண்டிக்கவும் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் பதிந்தா மாவட்ட நீதிபதி விசாரிக்க வேண்டும் என அதில் கோரியுள்ளனர். மனுவின் நகலை பஞ்சாப் அரசுக்கு அனுப்பச் சொன்ன தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, அதனை வெள்ளிக்கிழமை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE