ஒரே சால்வையில் உத்தமராகலாம்!
எஸ்.மணிகண்டன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனிப்படை போலீசார் மூலம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.எட்டு தனிப்படைகள் அமைத்து வலை வீசி தேடி கண்டுபிடிக்கும் அளவுக்கு, அவர் அப்படி என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார்?கொலை செய்தாரா, கொள்ளை அடித்தாரா, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாரா, இல்லை போதைப் பொருள் கடத்தினாரா?அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, 3 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார்; அவ்வளவு தான்.இதே தவறைத் தானே, தற்போது மின் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியும் செய்திருந்தார். இவரை கட்சியில் இணைத்து, அமைச்சர் பதவி கொடுத்து கவுரவித்த தி.மு.க., அரசுக்கு, ராஜேந்திர பாலாஜி செய்தது மட்டும், மிகப் பெரிய குற்றமாக தெரிவது ஆச்சரியமாக உள்ளது.
நம் பார்வையில், ராஜேந்திர பாலாஜி பிழைக்க தெரியாத அப்பாவியாகவே காட்சி அளிக்கிறார். 2016 டிச., 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார்.இதனால், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தினகரனுக்கு ஆதரவாக சென்றார், செந்தில் பாலாஜி.ஆனால் தினகரனால், அ.தி.மு.க.,வை கைப்பற்றவோ, காப்பாற்றவோ முடியாது என்று தெரிந்தவுடன், ஒரு சால்வை எடுத்துச் சென்று, ஸ்டாலினுக்கு போர்த்தி, தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவ்வளவு தானுங்க. அது நாள் வரை, தி.மு.க., கண்களுக்கு ஊழல்வாதியாக காட்சியளித்த செந்தில் பாலாஜி, ஒரே ஒரு சால்வை மூலம் உத்தமராகி விட்டார்; அவருக்கு எதிராக புறப்பட்ட மோசடி வழக்கும், 'புஸ்வாணம்' ஆனது.இது தானுங்க அரசியல்!கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து, எதிர் முகாமில் இருக்கும் ஊழல்வாதி, அணி மாறி வந்து ஒரு சால்வையை போர்த்தி விட்டால், உடனே உத்தமராகி விடுவார்!செந்தில் பாலாஜிக்கு இந்த சூட்சுமம் தெரிந்திருந்தது; தப்பித்து விட்டார்.
ராஜேந்திர பாலாஜிக்கு இந்த சூட்சுமம் தெரியவில்லை; சிக்கி விட்டார்!
வேறென்ன செய்ய வேண்டும்?
அ.சரவணன், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நகைக்கடன் தள்ளுபடி பெற வேண்டும் என்ற உள்நோக்கத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவரின் குடும்ப அட்டை, 'ஆதார்' அட்டையை வாங்கிச் சென்று, நகை அடகு கடைக்காரர்கள் கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் கடன்
பெற்றுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில், ரத்தன்லால் என்பவர், 672 கணக்குகளில் நகைக்கடன் வாங்கியுள்ளார். அனைத்தும், 5 சவரனுக்கும் கீழே உள்ளவை. இவருக்கு எப்படி நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடியும்? இவர், மக்களின் பணத்தை திருட முயற்சித்துள்ளார்.ரத்தன்லால் செய்தது சரி என்கிறாரா, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்?
நகையே இல்லாமல் வெறும் பொட்டலத்தை மட்டும் பையில் வைத்து, துாத்துக்குடி மாவட்டம் குரூம்பூரில், 2 கோடி ரூபாய் அளவுக்கு சிலர் கடன் பெற்றுள்ளனர். சில இடங்களில் கவரிங் நகையை வைத்தும் கடன் வாங்கியுள்ளனர்.இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டோருக்கு எப்படி நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடியும்?தமிழக அரசு நகைக்கடன் தள்ளுபடியை குறைவாக கொடுத்து விட்டது போல், ஒரு பிம்பத்தை எதிர்க்கட்சிகள் சித்தரிக்க முயல்கின்றன; இது உண்மைக்கு மாறானது. கூட்டுறவு சங்கங்களில் மொத்தம், 48.85 லட்சம் நகைக்கடன்கள் பெறப்பட்டுள்ளன.
இதில், 7.65 லட்சம் நகைக்கடன்கள் தனி நபர்கள், 40 கிராமுக்கு மேலாக வாங்கியவை. 21 லட்சம் நகைக்கடன் அனைத்தும், ஒரே குடும்ப அட்டையில் இடம்பெற்றோர் சேர்ந்து, 40 கிராமுக்கு மேலாக வாங்கியவை.வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினரின் குடும்ப அட்டையை முறைகேடாக பயன்படுத்தி, அடகு கடைக்காரர்கள், 2.21 லட்சம் நகைக்கடன்கள் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் பலன் அடைந்தோர், 2.14 லட்சம் நகைக்கடன் பெற்றுள்ளனர்.போலி நகை, காலி பொட்டலம் முதலான விதிமீறல்கள் மூலம், 2.34 லட்சம் நகைக்கடன்கள் பெறப்பட்டுள்ளன. இவை அனைத்தும், நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியில்லாதவை.
உண்மையில், 13.47 லட்சம் நகைக்கடன்கள் மட்டுமே தள்ளுபடிக்கு தகுதியானவை என கண்டறியப்பட்டுள்ளன.மேலும், 'நிராகரிக்கப்பட்ட பட்டியலில் தகுதியான பயனாளிகள் இருந்தால், அதற்கான உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகினால், அவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, தமிழக அரசு
அறிவித்துள்ளது.வேறென்ன செய்ய வேண்டும் மிஸ்டர் பன்னீர்செல்வம்?மோசடிக்காரர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமா?
முதியோர் தவறல்ல!
க.சிவசங்கரன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரேஷன் கடையில் பொருட்கள் பெற, 'பயோ மெட்ரிக்' என்ற பயனாளியின் கைரேகை பதிவு செய்தல் அவசியம்.மூன்று மாதத்திற்கு முன், ரேஷன் பொருட்கள் வாங்க சென்ற போது, வயது மூப்பு காரணமாக, இயந்திரத்தில் என் கைரேகை பதிவாகவில்லை; அதனால், என் மனைவியின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வாங்கினோம்.தற்போது, தவிர்க்க முடியாத காரணத்தால் என் மனைவி, ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று உள்ளார்; அவர் உடனடியாக இங்கு வர இயலாத நிலையில் உள்ளார்.
நான் ரேஷன் கடைக்கு இந்த மாதம் சென்றபோது, என் கைரேகை பதிவாகாததால் பொருட்கள் தர, ரேஷன் கடை ஊழியர் மறுத்து விட்டார்.'வயது மூப்பு காரணமாக கைரேகை பதிவாகவில்லை என்பது, என் குற்றம் அல்ல' என விளக்கினேன். 'கைரேகை பதிந்தால் தான் பொருட்கள் கொடுக்க இயலும்' என்று சொல்லி விட்டார்.
நான், அரசு சேவை மையத்திற்கு, பயோ மெட்ரிக் மூலம் மீண்டும் கைரேகை பதிவு செய்ய சென்றேன்; கைரேகை பதிவாகவில்லை. அங்குள்ள ஊழியர், '50 வயதுக்கு மேற்பட்ட சிலருக்கு, கைரேகை பதிவாகாது' எனக் கூறினார்.பயோமெட்ரிக் மூலம் விழிகளும் பதிவு செய்யப்படுகிறது. ரேஷன் கடையில், விழி பதிவு செய்து பொருட்களை வழங்க ஏற்பாடு
செய்யலாம். அந்த வசதி இல்லையெனில், கையெழுத்து பெற்று பொருட்கள் வழங்கலாம்.முதியோர் நிலை உணர்ந்து, அரசு நடவடிக் கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE