'சஸ்பெண்ட்' அதிகாரி போட்ட சபதம்!
''ஒரே மாசத்துல ஒன்றரை லட்சம் பேரை சேர்க்கணும்னு இலக்கு நிர்ணயம் செய்திருக்காரு பா...'' என்றபடியே வந்தார் அன்வர்பாய்.
''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''மதுரை புறநகர் தி.மு.க., வடக்கு, தெற்குன்னு ரெண்டு மாவட்டங்களா செயல்படுது... வடக்கு மாவட்ட செயலரா, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி இருக்காரு பா...
''ஆளுங்கட்சியில இப்ப உறுப்பினர் சேர்க்கை நடக்குது... மூர்த்தியின் வடக்கு மாவட்டத்துல, மதுரை கிழக்கு, மேலுார், சோழவந்தான் சட்டசபை தொகுதிகள் வருது பா... இந்த தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை, சமீபத்துல, தன் திருமண மண்டபத்துல அமைச்சர்
நடத்துனாரு...
''அப்ப, 'தொகுதிக்கு தலா 50 ஆயிரம் பேர் வீதம், ஒன்றரை லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்து, அதை கம்ப்யூட்டர்ல பதிவு செய்து காட்டணும்... அதிகம் உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளை சென்னைக்கு அழைச்சிட்டு போய், முதல்வர் ஸ்டாலின் கையால பரிசு வாங்கி தருவேன்'னு உற்சாகப்படுத்தி அனுப்பியிருக்காரு பா...'' என்றார் அன்வர்பாய்.
''பெண் அதிகாரியின் அடாவடி தாங்க முடியலைங்க...'' என, அடுத்த தகவலுக்கு நகர்ந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா ஆபீஸ்ல ஒரு பெண் ஆர்.ஐ., இருக்காங்க... இங்க வந்து மூணு மாசம் தான் ஆகுதுங்க...
''தன்னிடம் வர்ற எந்த மனுக்கள்லயும் அவ்வளவு ஈசியா கையெழுத்து போட்டுட மாட்டாங்க... இவங்களுக்கு கீழே, 10 வி.ஏ.ஓ.,க்கள் இருக்காங்க... இவங்களிடம் கறாரா 'கமிஷன்' கேட்டு வாங்கிட்டு தான், எந்த மனுவையும் திறந்து பார்ப்
பாங்களாம்...
''குறிப்பா, வாரிசு சான்று, சொத்து மதிப்பு சான்றுகள்ல வரும் படி அதிகம்கிறதால, அந்த சான்றுகளை வழங்குறதுல மட்டும் தான் கூடுதல் கவனம் காட்டுறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''பூவே பூச்சூட வா பட நாயகி நதியா, திரும்பவும் படங்கள்ல நடிச்சாங்களே... அப்புறம் ஆளையே காணுமே...'' என, திடீரென கவலைப்பட்ட அண்ணாச்சியே, ''வந்துருவேன்... திரும்ப வந்துருவேன்னு சவால் விடுதாரு வே...'' என, கடைசி தகவலுக்கு
வந்தார்.
''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சென்னையை ஒட்டியிருக்கிற மாநகராட்சியில கட்டடங்கள் ஆய்வாளரா இருந்த அதிகாரி மேல ஏகப்பட்ட புகார்கள் குவிஞ்சிட்டே இருந்துச்சு... இதனால, சமீபத்துல அவரை 'சஸ்பெண்ட்' செஞ்சிட்டாவ வே...
''ஆனாலும் அசராத அதிகாரி, 'திருவள்ளூர் மாவட்ட தி.மு.க., முக்கிய புள்ளியும், அவரது வாரிசும் எனக்கு நெருக்கம் தெரியுமா... மறுபடியும் இதே சீட்டுல வந்து உட்கார்றேனா இல்லையா, பாருங்க'ன்னு சவால் விட்டுட்டு இருக்காரு வே...
''அதே நேரம், உப்பு தின்னவர் தண்ணி குடிச்சாகணும்னு, அவர் மறுபடியும் பணியில சேர எடுக்கிற முயற்சிகளுக்கு, நகர்ப்புற வளர்ச்சி துறையில இருக்கிற ஒரு அதிகாரி முட்டுக்கட்டை போட்டுட்டு இருக்காரு வே...'' என முடித்தார் அண்ணாச்சி.
எப்.எம்., ரேடியோவில், 'ஆவடியில் இருந்து தினகரன் என்ற நேயர் விரும்பி கேட்ட பாடல்...' என்ற அறிவிப்புடன், 'நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான், நான்...' என்ற பாடல் ஒலிக்க, பெரியவர்கள் ரசிக்க ஆரம்பித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE