உடுமலை:உடுமலை பழமை வாய்ந்த, செல்லாண்டியம்மன் கோவிலை புதுப்பித்து, கும்பாபிேஷகம் நடத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில், பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. பல நுாற்றாண்டுகளுக்கு முற்பட்ட, இக்கோவிலுக்கு, நீண்ட காலமாக கும்பாபிேஷகம் நடத்தப்படாமல் உள்ளது. இதனால், கோவில் பொலிவிழந்து காணப்படுகிறது. கோவில் சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.நுழைவாயில் மற்றும் கோவில் முன்மண்டபத்தில், கற்களால் அடுக்கப்பட்ட கட்டுமானம், கீழிறங்கி வருகிறது. கோபுரத்திலுள்ள சிற்பங்கள், படிப்படியாக சிதைந்து, சுண்ணாம்பு பூச்சால் தற்காலிகமாக பாதுகாக்கப்படுகிறது. இக்கோவில் பராமரிப்புக்கும், சிறப்பு பூஜைகளுக்கும், தளி பாளையக்காரர்களால், நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.கோவில் வளாகத்தில், அவர்களது சிலைகள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் மேற்கூரையும், அருகில், பழங்கால சிலைகள் வைக்கப்பட்டுள்ள கட்டடமும் சேதமடைந்துள்ளது. சுற்றுச்சுவரும் இல்லாமல், கற்கள் மட்டுமே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.முன்பு, சுற்றுப்பகுதி கிராம மக்களால், பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு, பிரசித்தி பெற்றிருந்த கோவில், தற்போது பொலிவிழந்து காணப்படுவது மக்களை வேதனையடையச்செய்துள்ளது.இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலை புதுப்பித்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பல நுாற்றாண்டுகளை கடந்த கோவில் என்பதால், தொல்லியல் துறை, வழிகாட்டுதல் பெற்று, அதன்படி, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE