சென்னை :மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த மசோதாவை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பாமல், கவர்னர் கிடப்பில் வைத்துள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு தீர்வு காண, தமிழக எம்.பி.,க்கள் டில்லியில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேச முயற்சித்தனர். அதற்கு அமித்ஷா அனுமதி அளிக்காததால், தி.மு.க., மற்றும் அதன்
கூட்டணி கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன. இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், நீட் விலக்கு விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கவும், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை, தமிழக அரசு நாளை சென்னையில் கூட்டியுள்ளது. சட்டசபையில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள், இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக, சட்டசபையில் நேற்று, 110 விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:எந்தவொரு கல்லுாரி சேர்க்கையாக இருந்தாலும், அதற்கு வைக்கப்படும் நுழைவு தேர்வானது, ஏழை, கிராமப்புற விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தை பாதிக்கும். அதனால், அந்த தேர்வுகளை தவிர்த்து, பள்ளிக் கல்வித்திறனை மட்டும் அடிப்படையாக கொண்டதாக மாணவர் சேர்க்கை அமைய வேண்டும். அதாவது, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், கல்லுாரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.இதன் அடிப்படையில் தான் கருணாநிதி, நுழைவுத் தேர்வுகளை 2007ம் ஆண்டு அகற்றி, அதற்காக தனி சட்டம் இயற்றினார். அதன்படி பல ஆண்டுகளாக, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.கடந்த காலத்தில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கான திருத்த சட்டம், அதன்பின் கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய சட்டம் ஆகியவை, மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வை முன்னிறுத்தி, நம் மாணவர்களை வெகுவாக பாதித்துள்ளன.
மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து முடிவு செய்யக்கூடிய உரிமையை, மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்து விட்டது. மேலும், 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளிக் கல்வியால் எவ்வித பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கி, பள்ளிக் கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக ஆக்குவதாகவும் இந்த நீட் தேர்வு முறை உள்ளது.
மாணவர்களின் கல்விக் கனவை சிதைப்பதுடன், கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைப்பதாக இந்த செயல்கள் அமைந்து விட்டன. இதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. மாணவர்களின் எதிர்காலம் பாழாகி வருவதை கண்டும் காணாமல் இருந்து விட முடியாது. இதை சரி செய்து, மாநில உரிமைகளையும், நம் மாணவர்களுடைய நலனையும், மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கத்தோடு, ௨௦௨௧ செப்டம்பர் 19ம் தேதி ஒரு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்த சட்டமுன்வடிவு இன்னமும், கவர்னரால் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படாமல் இருக்கிறது. கடந்த டிசம்பர் 28ம் தேதி பார்லிமென்ட் தி.மு.க., தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், தமிழக எம்.பி.,க்கள், ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனு, மேல் நடவடிக்கைக்காக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் வலியுறுத்த, அனைத்து கட்சி எம்.பி.,க்களும், மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டனர்; அவர் மறுத்து வருகிறார். இது மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது.
மத்திய உள்துறை அமைச்சர், நேரில் சந்திக்க நேரம் ஒதுக்காத நிலையில், அவரிடம் கொடுக்கப்பட வேண்டிய மனு, அவரது அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
நாமும், நம் மாநிலமும் இன்று அடைந்துள்ள வளர்ச்சியை, போராட்டங்களின் வழியாகத் தான் பெற்றுள்ளோம். எனவே, 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்தின் அடுத்தக் கட்டப் போராட்டம் எனக் கருதி, முன்னெடுத்து செல்வோம்.இந்த சூழ்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, நாம் ஒருமித்த நிலைபாட்டை எட்ட, சட்டசபை கட்சிகளின் கூட்டத்தை, நாளை கூட்ட முடிவு செய்திருக்கிறோம். அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE