சென்னை : ''அம்மா உணவகத்தை மூடினால் என்ன,'' என, அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்ப, ''அதன் பலனை அனுபவிப்பீர்கள்,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பதில் அளித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: அம்மா உணவகத்தில் பணியாளர் எண்ணிக்கை; அவர்கள் ஊதியம்; பொருட்கள் அளவு எல்லாம் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கிய அளவு பொருட்கள்; ஊதியம் வழங்க வேண்டும். அதே பணியாளர் எண்ணிக்கை தொடர வேண்டும்.
அமைச்சர் நேரு: அம்மா உணவகம் எங்கும் மூடப்படவில்லை. 1,700 ரூபாய் விற்பனையாகும் இடத்தில், 30 பேர் வேலை செய்கின்றனர்; 9,000 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளது. எனவே, சுழற்சி முறையில் பணி வழங்குகிறோம். பணியாளர்களை குறைக்கவில்லை. உங்கள் ஆட்சியில் நடந்தது போல நடக்கிறது.
அமைச்சர் துரைமுருகன்: அதை மூடினால் தான் என்ன; நீங்கள் எத்தனையை மூடி உள்ளீர்கள். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வந்தவர் பெயர் இல்லை. கருணாநிதி பெயரில் இருந்ததை, எத்தனை மூடி உள்ளீர்கள். நாங்கள் ஒன்றைதானே மூடி உள்ளோம்.
பழனிசாமி: நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். மூடினால் பலனை அனுபவிப்பீர்கள். ஏழை மக்கள் தகுந்த தண்டனை கொடுப்பர்.
முதல்வர்: உங்கள் ஆட்சியில் கருணாநிதி பெயரை மூடி மறைத்ததால், மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பழனிசாமி: எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE