தமிழக நிகழ்வுகள்:
மகளை கொன்று தாய் தற்கொலை
கோவை: கோவை அருகே மகளை கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை, துடியலுார் அருகே அப்பநாயக்கன்பாளையம், ஜல்லிக்காடு பகுதியில் வசித்தவர் தனலட்சுமி, 58; கணவர் 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது 30 வயது மகள் மனவளர்ச்சி குன்றியவர். நேற்று காலை மகன் சசிகுமார், தனலட்சுமிக்கு போன் செய்துள்ளார். யாரும் எடுக்கவில்லை என்பதால், வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சகோதரி ஹாலில் இறந்து கிடந்தார்.படுக்கை அறையில் தாய் தனலட்சுமி, துாக்கில் சடலமாக தொங்கினார். மகளுக்கு எலி மருந்து கொடுத்து கொலை செய்து, தாய் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கி தாய், மகன் பலி
திருநெல்வேலி: கல்குவாரி நீரில் மூழ்கி தாய்,- மகன் பலியாகியினர்.
திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரம் அருகே கும்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துகுமார் மனைவி பேச்சியம்மாள், 40. நேற்று மாலை் அங்குள்ள கல்குவாரி நீரில் குளிக்க சென்றார். அவருடன் மகன்கள் கார்த்திக், 14; சுபாஷ், 12, உடன் சென்றனர். சிறுவன் சுபாஷ், நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதியில் நீரில் மூழ்கினார். மகனை காப்பாற்ற, நீரில் குதித்த தாய் பேச்சியம்மாளும் மூழ்கினார். வெளியே நின்ற கார்த்திக், ஊருக்குள் சென்று உறவினர்களை அழைத்து வந்தார். இருப்பினும் தாய், மகன் நீரில் மூழ்கி பலியாகினர். உடல்கள் மீட்கப்பட்டன.
அண்ணி சாவு: கொழுந்தனிடம் விசாரணை
ஏற்காடு:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி மஞ்சு, 26. பிரபுவின் தம்பி விஜய், 30. இவரும், மஞ்சுவும் நேற்று முன்தினம் மாலை ஏற்காடு வந்தனர். அங்குள்ள தனியார் விடுதியில் இரவு தங்கினர். இந்நிலையில், மஞ்சு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து, போலீசார் கூறியதாவது: இரவு விஜய் மது அருந்தியுள்ளார். அப்போது, மஞ்சுவின் மொபைல் போனை பார்த்து, சில ஆண் நண்பர்களிடம் இருந்து குறுந்தகவல் வந்தது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டு, லேசாக அடித்துள்ளார். காலை 3:00 மணிக்கு விஜய் விழித்தபோது மஞ்சு இல்லை. கழிப்பறை கதவை உடைத்து பார்த்தபோது, மஞ்சு நிர்வாண நிலையில் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். வரும் 23ம் தேதி விஜய்க்கு திருமணம் நடக்க இருந்தது. இதனால், மஞ்சு தற்கொலை செய்தாரா, விஜய் கொலை செய்தாரா என விசாரணை தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
75 சவரன் நகைகள் ரூ.1 லட்சம் கொள்ளை
மேலுார்: மதுரை மேலுாரில், நள்ளிரவு கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த நான்கு பேர் ஆயுதங்களை காட்டி 75 சவரன் நகைகள், ஒரு லட்சம் ரூபாய், மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பினர்.
மதுரை மாவட்டம், மேலுார் சத்தியபுரத்தில் வசிப்பவர் கோபி, 27; வெளிநாடு சென்று திரும்பியவர். நேற்று வீட்டில் ஒரு அறையில் மனைவி கவுசல்யா, குழந்தை யுவாவுடன் துாங்கினார். மற்றொரு அறையில், அவரது தாயார் இந்திரா, சகோதரி இந்து, அவரது மகன் ரோகித், பெண் குழந்தையுடன் துாங்கினர்.
நள்ளிரவு 12:00 மணிக்கு, முன்பக்க கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த நான்கு பேர், இரு அறைகளில் இருந்தவர்களை, ஆயுதங்களை காட்டி மிரட்டி, ஒரே அறையில் அடைத்தனர். பின், ரோகித் கழுத்தில் அரிவாளை வைத்து கொலை செய்வதாக மிரட்டி, பெண்கள் அணிந்திருந்த தாலி செயின், பீரோவில் இருந்த 75 சவரன் நகைகள், ஒரு லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இந்திரா ஜன்னலை திறந்து சத்தமிட, பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கதவை திறந்தனர். கொள்ளையர்கள் அங்கு நிறுத்தியிருந்த காரில் ஏறி தப்பினர்.பழக்கமானவர்கள் இதில் ஈடுபட்டனரா, கோபியின் தந்தை முருகேசனிடம் கடன் வாங்கியவர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பிளஸ் 2 படித்த போலி டாக்டர் கைது
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த துாசி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம், 54; இப்பகுதியில் கிளினிக் வைத்து, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார். வெம்பாக்கம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபு, மருத்துவ குழுவினருடன், சங்கரலிங்கம் கிளினிக்கில் சோதனை நடத்தினார்.இதில், அவர் பிளஸ் 2 மட்டும் படித்திருப்பது தெரிந்தது. துாசி போலீசார் சங்கரலிங்கத்தை கைது செய்தனர்.
ஒரு கோடி ரூபாய் கொள்ளையடிக்க முயன்ற தி.மு.க., நிர்வாகி சிக்கினார்
சென்னை : திருப்பூர் தொழிலதிபரிடம் 1 கோடி ரூபாய் கொள்ளையடிக்க முயற்சித்த சென்னை தி.மு.க., நிர்வாகியை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் குமார், 46. தொழிலதிபர். இவருக்கு சென்னை திரு.வி.க., நகர் தி.மு.க., பகுதி பிரதிநிதியான சென்னை, நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த சங்கர், 44 என்பவர் அறிமுகம் கிடைத்துள்ளது.குமாரிடம் இருந்த கணக்கில் காட்டாத 5 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றி தருவதாக சங்கர் கூறியுள்ளார். முதற்கட்டமாக 1 கோடி ரூபாய் பணத்துடன், குமார் இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்துள்ளார்.
அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணத்தை மாற்றுவதற்காக, அண்ணா நகர் 3வது பிரதான சாலை மற்றும் நியூ ஆவடி சாலை சந்திப்பில் சங்கரும், குமாரும் நேற்று காத்திருந்தனர்.அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், குமார் பணம் வைத்திருந்த பையை பறிக்க முயற்சித்தனர். குமார் கூச்சலிட்டதால் கொள்ளைக் கும்பலுடன் சேர்ந்து சங்கரும் தப்பி ஓடினார்.
அங்கிருந்த மக்கள் சங்கரை மட்டும் விரட்டிப் பிடித்து, அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.தி.மு.க., பிரமுகரான சங்கரும் அவரது கூட்டளி விஜய்குமாரும் சேர்ந்து குமாரிடம் இருந்த 1 கோடி ரூபாய் பணத்தை அபகரிக்க திட்டமிட்டு இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சங்கர் கைது செய்யப்பட்டார்.
75 பவுன் நகைகள், ரூ.ஒரு லட்சம் கொள்ளை
மேலுார்: மதுரை மாவட்டம் மேலுார் சத்தியபுரத்தில் நள்ளிரவு கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த நான்கு பேர் ஆயுதங்களை காட்டி 75 பவுன் நகைகள், ரூ.ஒரு லட்சம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
சத்தியபுரம் கோபி 27, வெளிநாடு சென்று திரும்பியவர். நேற்று வீட்டில் ஒரு அறையில் மனைவி கவுசல்யா, குழந்தை யுவாவுடன் துாங்கினார். மற்றொரு அறையில் அவரது தாயார் இந்திரா, சகோதரி இந்து, அவரது மகன் ரோகித்,பெண் குழந்தையுடன் துாங்கினர். நள்ளிரவு 12:00 மணிக்கு முன்பக்க கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த நான்கு பேர் இரு அறைகளில் இருந்தவர்களை ஒரே அறையில் ஆயுதங்களை காட்டி மிரட்டி அடைத்தனர்.பிறகு ரோகித் கழுத்தில் அரிவாளை வைத்து கொலை செய்வதாக மிரட்டி பெண்கள் அணிந்திருந்த தாலி செயின், பீரோவில் இருந்த 75 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இந்திரா ஜன்னலை திறந்து சத்தமிட பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கதவை திறந்தனர். கொள்ளையர்கள் அங்கு நிறுத்தியிருந்த காரில் ஏறி தப்பினர். ஏ.டி.எஸ்.பி., சந்திரமவுலி சம்பவயிடத்தை ஆய்வு செய்தார். தடயவியல் சார்பு ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தடயங்களை சேகரித்தார். மேலுார் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடுகின்றனர். பழக்கமானவர்கள் இதில் ஈடுபட்டனரா, கோபியின் தந்தை முருகேசனிடம் தவணை வாங்கியவர்கள், நண்பர்களிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.10 ஆயிரம் லஞ்சம்; உணவு அலுவலர் கைது
தேனி: தேனியில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அலுவலர் கைது செய்யப்பட்டார்.
தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகம், 48. இவர் டிச., 30 காலை நகராட்சி அலுவலகம் பின்புறம் 'சி2' திட்ட சாலை மீன் கடைகளில் சோதனை செய்தார். திருமலை பால்பாண்டி என்பவரின் கடையில் சுகாதாரமற்ற, ரசாயனம் கலந்த மீன்கள் விற்பதாக சண்முகம் கூறினார்.
அபராதம் விதிக்காமல் இருக்க, 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு, இறுதியில் 10 ஆயிரம் தரும்படி கூறினார். இதுபற்றி திருமலை பால்பாண்டி, தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். 10 ஆயிரம் ரூபாயை, தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்த சண்முகத்திடம் வழங்கினார். பணத்தை வாங்கிய சண்முகத்தை, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வெடிகுண்டு வீசி செங்கை ரவுடி கொலை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு போலீஸ் நிலையம் அருகில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்டார். அவரது உறவினரையும் வீடு புகுந்து வெட்டி கொன்ற கும்பல் தப்பியது.
செங்கல்பட்டு, சின்னநத்தம் கே.கே., தெருவைச் சேர்ந்தவர் அப்பு கார்த்திக், 38. இவர் மீது இரண்டு கொலை வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில், தினமும் கையெழுத்து போட்டுவருகிறார். நேற்றும் வழக்கம் போல் கையெழுத்து போட்டு, அருகில் உள்ள டீ கடையில் மாலை 6:30 மணியளவில் நின்றிருந்தார். அப்போது, பல்சர் மோட்டர் சைக்கிளில் வந்த மூன்று பேர், அவர் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசினர். குண்டு வெடித்தில் படுகாயமடைந்த அப்பு கார்த்திக், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்துவந்த போலீசார், சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டர். சம்பவம் நடந்த இடத்தில், ஒரு பையில் வெடிக்காத நிலையில் ஐந்து நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. செங்கல்பட்டு மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் மகேஷ், 20. காய்கறி வியாபாரி. மனைவி, மகன் உள்ளனர். ரவுடி அப்பு கார்த்திக்கின் உறவினர். இவர், நேற்று வீட்டில் 'டிவி' பார்த்துக்கொண்டிருந்த போது, மூன்றுபேர் கும்பல் வீடு புகுந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பிச்சென்றது. அடுத்தடுத்து நடந்த இரட்டை கொலை, செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![]()
|
தேசிய நிகழ்வுகள்:
'புல்லி பாய்' வழக்கு: அசாம் மாணவர் கைது
புதுடில்லி: 'புல்லி பாய்' செயலி வழக்கு தொடர்பாக அசாமைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவரை, டில்லி போலீசார் கைது செய்தனர்.
முஸ்லிம் பெண்களை அவமதிக்கும் வகையில், அவர்களை ஏலம் விடும் புல்லி பாய் என்ற செயலியை மத்திய அரசு சமீபத்தில் முடக்கியது. இந்த செயலியை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பற்றி மஹாராஷ்டிர மாநிலம், மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் விஷால் குமார் ஜா, உத்தரகண்டைச் சேர்ந்த சுவேதா சிங், இன்ஜினியரிங் மாணவர் மயங்க் ஆகியோரை மும்பை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில் அசாம் மாநிலம் ஜோர்ஹட்டைச் சேர்ந்த நீரஜ் பிஷ்னோய் என்கிற இன்ஜினியரிங் மாணவரை, டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து வரும் பிஷ்னோய்க்கு, புல்லி பாய் செயல்பாட்டில் முக்கிய பங்கு உள்ளது என தெரிவித்த போலீசார், அவரை டில்லிக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை: ஒருவர் கைது
பாலக்காடு: ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலப்புள்ளியை சேர்ந்தவர் சஞ்ஜித். ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான இவரை நவ. 15ம் தேதி ஐந்து பேர் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.கொலையில் நேரடி தொடர்பு கொண்ட மூவரையும் உதவிய நால்வரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று மலப்புரத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம்45 என்பவரை கைது செய்தனர்.எஸ்.பி. விஸ்வநாதன் கூறுகையில் ''கைதான அப்துல் ஹக்கீம் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியுள்ளார். குற்றவாளிகளுக்கு தஞ்சம் அளித்து அனைத்து உதவிகளையும் செய்துள்ளார்'' என்றார்.
ஆலையில் ரசாயன கசிவு; 6 பேர் பலி
சூரத்: குஜராத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன கசிவால், ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் வண்ண சாயங்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.இங்குள்ள ஒரு ஆலையில், நேற்று அதிகாலை ரசாயன டேங்கரில் கசிவு ஏற்பட்டது. ரசாயனத்துடன் சேர்ந்து வெளியான புகை அந்த பகுதி முழுதும் சூழ்ந்தது. அந்த நச்சு புகையை முகர்ந்ததால், ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு படையினரும், போலீசாரும் டேங்கரில் ஏற்பட்ட ரசாயன கசிவை சரிசெய்தனர். மயக்க நிலையில் இருந்த 22 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டனர். இந்த ரசாயன கசிவால், அங்கிருந்த இரண்டு நாய்களும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலைக்கு அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
உலக நிகழ்வுகள்:
இந்திய மாணவர்களுக்கு சிறை
சிங்கப்பூர்: 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடிகளில் ஈடுபடும் சர்வதேச மோசடி கும்பல், ஏமாற்றி பறித்த பணத்தை நாடுவிட்டு நாடு மாற்ற, தங்கள் வங்கி கணக்குகளை அளித்து கமிஷன் பெற்று வந்த மூன்று இந்திய மாணவர்களுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. நந்தி நீலாத்ரி, ஆகாஷ் தீப்சிங், கிரி தேப்ஜித் ஆகியோருக்கு 7 - 18 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கஜகஸ்தானில் வன்முறை; 24 பேர் பலி
மாஸ்கோ: மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் வன்முறைகளில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் மீது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 12 போலீசாரும் உயிரிழந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE