பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி பேட்டி: போதைப் பொருளை ஒழிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்தாலும், சர்வ சாதாரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில் கிடைக்கின்றன. கடுமையான சட்டங்களை பயன்படுத்தி, போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே, பா.ம.க.,வின் குறிக்கோள்.
எல்லாவற்றையும் அரசு தான் செய்ய வேண்டுமா; ஆட்சிக்கு வரத் துடிக்கும் கட்சிகள் செய்யக் கூடாதா... சர்வ சாதாரணமாக கிடைக்கும் போதை விவகாரம் குறித்து பேசும், பா.ம.க., தலைவர்கள் என்றாவது செயலில் இறங்கி, போதை விற்பவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனரா?
தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை: 'நீட்' தேர்வு விலக்கு தொடர்பாக, டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க, நம் எம்.பி.,க்கள் மூன்று முறை முயன்றும், அவர் மறுத்துள்ளார். அவரது செயல் கண்டனத்துக்கு உரியது.
'நீட்' தவிர்த்து, வேறு விவகாரமாக இருந்திருந்தால் சந்தித்திருப்பாரோ... தமிழக கட்சிகள் இந்த விவகாரத்தை, அரசியலுக்காக பயன்படுத்துவதை அவர் அறிந்திருப்பாரோ?
தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை: நவீனமயமான அரசு பள்ளிகள்-, கிராமம்தோறும் நுாலகம்-, பெரியார் சமத்துவபுரம் சீரமைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளுடன் கவர்னர் உரை அமைந்திருந்தது. முதல்வர் ஸ்டாலினின் சமூகநீதி சிந்தனைக்கு சான்றாக அவை இருந்தன.

அரசு பள்ளிகளை நவீனமயமாக்க வேண்டாம்; அடிப்படை வசதிகள் செய்தால் போதும். கிராமம்தோறும் நுாலகம் அமைத்து, அதில், ஈ.வெ.ரா., படம் வைத்து, தி.மு.க., ஆதரவு புத்தகங்களை தானே வைக்கப் போகிறீர்கள்?
விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., ஆளூர் ஷா நவாஸ் அறிக்கை: தமிழக சட்டசபையிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தோம். 'நீட்' தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா மீது நடவடிக்கை எடுக்காத கவர்னரை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.
தமிழக அரசு எழுதி கொடுத்ததை கவர்னர் வாசித்துள்ளார். நீங்கள் வெளிநடப்பு செய்ததன் மூலம், உங்கள் கூட்டாளியான, தி.மு.க., ஆளும் தமிழக அரசை எதிர்ப்பது போல ஆகாதா?
தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை: சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரையில், 'நீட்' தேர்வு கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக கூறியிருப்பது பாராட்டத்தக்கது. கவர்னர் உரை, அரசின் சமூக நீதியை பிரதிபலிக்கிறது.
நீங்கள் பாராட்டும் இதே கவர்னர் தான், நீட் விலக்கு கோரி, தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் வைத்துள்ளார் என்பதை மறந்து விட்டீர்களே!