கோவை: இரவு மற்றும் ஞாயிறன்று முழு நேர ஊரடங்கை, தமிழக அரசு அறிவித்துள்ளதையடுத்து, தொழில்துறைக்கு முழு ஊரடங்கை எச்சூழலிலும் அறிவித்து விட வேண்டாம் என்று, கோவை தொழில் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எல்லோரும் பயந்தது போலவே, இதோ வந்து விட்டது கொரோனா மூன்றாவது அலை. ஆனால் அனைவரும் பயப்படுவது போல், உயிருக்கு பாதிப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை செல்லாது என்று தைரியம் அளிக்கின்றனர் டாக்டர்கள்.தொழில்துறையினரோ, தொழில் இப்போதுதான் சீரடைந்து வரும் நிலையில், ஊரடங்கு அறிவித்து விடக்கூடாதே என பயப்படுகின்றனர். அரசின் விதிமுறைகளை பின்பற்றி, தொற்று பரவாமல் பார்த்துக் கொள்வதாக உறுதியளிக்கின்றனர்.

கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு: முதல் இரு அலைகளையும் கடந்து விட்டோம். அதனால் எப்படி எதிர்கொள்வது என்ற படிப்பினை எங்களுக்கு நன்கு தெரியும். 90 சதவீத தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அரசு தொழிற்சாலைகளை இயக்க அனுமதித்துள்ளது. அது தொடர வேண்டும்.இல்லாவிட்டால் வடமாநில தொழிலாளர்கள் இடம்பெயரும் நிலை ஏற்படும். உற்பத்தி பாதிப்பு ஏற்படும். வங்கிகள் தொழிற்கடனுக்கு தளர்வுகளை அறிவிக்க வேண்டும். இக்கட்டான காலகட்டத்தில் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா)தலைவர் கார்த்திக்: தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்காவிட்டால், தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாவர்.முழு ஊரடங்கை எதிர்கொள்ளும் நிலையில் தொழிலாளர்களோ, உரிமையாளர்களோ இல்லை. நிலைமை மிக மோசமாக உள்ளது. தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள, முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனை வோர் சங்கம் (டேக்ட்) அமைப்பு தலைவர் ஜேம்ஸ்: தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கிலிருந்து தொழில்துறைக்கு விலக்கு அளித்துள்ளதை வரவேற்கிறோம். தொழிலாளர்கள் பாதிக்காத வகையில், தடையின்றி தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கான அடையாள அட்டைகளை, மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.
கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு இயக்குனர், நந்தகுமார்: தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும், இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளோம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றி வருகிறோம். தொழில் நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளில் தவித்து வரும் சூழலில், தொழில் நிறுவனங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதை அரசு தவிர்க்க வேண்டும்.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்க தலைவர் (காட்மா) சிவக்குமார்: தொழிலாளர்கள் அனைவரும் இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோம். தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தினாலும், அதில் தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது கடந்த காலங்களைப் போல தொடர வேண்டும்.அரசு தெரிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை, தொழிலாளர்கள் அனைவரும் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவோம். இரவு நேரத்தில் பணிக்கு வரும் தொழிலாளர்கள், வெளியே வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்போம்.
கோவை மாவட்ட குறு, சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் (காஸ்மோபேன்) தலைவர், சிவசண்முககுமார்: முழு ஊரடங்கு அமல்படுத்தினால், ஒட்டுமொத்த சங்கிலித் தொடரில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படும். மக்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, தொழில் நிறுவன உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும். எனவே முழு ஊரடங்கு அமல்படுத்துவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும். புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தினாலும் தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
கோவை 'சிட்கோ' தொழிற் பேட்டை உரிமையாளர்கள் நல சங்கத்தின் (கொசிமா) தலைவர், நல்லதம்பி: அலுமினியம், ஸ்டீல், காப்பர் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை உயர்ந்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ள சூழலில், மூன்றாம் அலை வந்துவிட்டது. இதிலிருந்து எப்படியும் மீள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் நாங்கள் பின்பற்றுவோம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE