புதுடில்லி: பஞ்சாபில் பிரதமருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பான வழக்கில், பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஜன.,5ம் தேதி பஞ்சாப் சென்றிருந்தபோது, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரா்கள் சிலா் சாலையை மறித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களால் சுமார் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் மேம்பாலத்திலேயே நின்றிருந்தது. பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜன.,7) விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து உச்ச நீதிபதிகள், ‛பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல், அனைத்து பயண பதிவுகளையும் தனது பாதுகாப்பில் வைத்திருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். மேலும் பஞ்சாப் காவல்துறை, சிறப்பு பாதுகாப்பு குழு (என்பிஜி) மற்றும் பிற மத்திய மற்றும் மாநில அமைப்புகள் அவருக்கு ஒத்துழைத்து மற்றும் தேவையான உதவிகளை வழங்க வேண்டும்,' என தெரிவித்தனர்.

மத்திய அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‛இச்சம்பவம் பிரதமரின் பாதுகாப்புக்கு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியது. பிரதமரின் பஞ்சாப் பயண மற்றும் பாதுகாப்பு ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட வேண்டும். பஞ்சாப் அரசும், காவல்துறையும்தான் பாதுகாப்புக் குறைபாட்டிற்குக் காரணம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் நடக்க வாய்ப்புள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று, இது சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE