ஜெனிவா: ஒமைக்ரான் தொற்று குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும் அதனை லேசாக கருதுவது தவறானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது: உலகம் முழுவதும் ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவிவருகிறது. பல நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த டெல்டா மாறுபாட்டை அடக்கி ஒமைக்ரான் பரவல் மேலோங்கி வருகிறது. டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும், முற்றிலுமாகவே லேசானது என கருதுவது தவறானது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மத்தியில் ஒமைக்ரான் வைரஸ் டெல்டாவை ஒப்பிடும்போது சற்றே மிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஆனாலும், இதற்கு முந்தைய உருமாற்றங்களைப் போல் ஒமைக்ரானாலும் மக்கள் அதிகளவில் மருத்துவமனைகளில் சிகிச்சையில் சேர்கின்றனர். இனியும் ஒமைக்ரான் வைரஸை லேசாகக் கருதுவது தவறானது. ஒமைக்ரான் தொற்று சுனாமி போல் மருத்துவக் கட்டமைப்புக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. முந்தைய வாரத்தை விட கடந்த வாரம் மட்டும் உலகம் முழுவதும் 71 சதவீதத்திற்கும் மேலாக கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.