புதுடில்லி: 'ஆப்ரிக்க நாடுகளில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் இன்னும் சில வாரங்களில் இங்கும் அது முடிவுக்கு வரும் என்று நம்பலாம். அதே சமயம் ஒமைக்ரான் வேகமாக பரவக்கூடியதாக இருப்பதால் நமது பாதுகாப்பை தளர்த்திக்கொள்ள கூடாது' என எய்ம்ஸ் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் சந்திரா தெரிவித்தார்.
இந்தியாவில் சுமார் 200 நாட்களுக்கு பிறகு தினசரி கோவிட் தொற்று எண்ணிக்கை ஒரு லட்சமாக பதிவாகியுள்ளது. 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3,007 பேரிடம் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களில் 1,199 பேர் இன்றைய நிலவரப்படி குணமடைந்துள்ளனர். பாதிப்பு அதிகரித்து டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா போன்ற நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள், கட்டாய முகக்கவசம் ஆகியவை நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்நிலையில் ஒமைக்ரான் பற்றிய புதிய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் சந்திரா. அவர் கூறியதாவது: அதிகரித்து வரும் கோவிட் தொற்றுகள் சில வாரங்களில் குறையத் தொடங்கும். ஒமைக்ரான் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்காவில் உச்சக்கட்டத்தை எட்டிய ஒமைக்ரான் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதனை ஒரு நம்பிக்கையாக பார்க்கலாம். இருப்பினும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம், இது வேகமாக பரவக்கூடியதாக இருக்கிறது. எனவே முகக்கவசம், தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

ஒமைக்ரான் தொற்றுக்காளாவோர் பெரும்பாலும் பாதிப்பற்றவர்களாக உள்ளனர். இது நல்லது. இதனால் மக்களிடையே எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்படி உண்டானால் ஒமைக்ரான் பரவுவது தடைப்படும். நம்மிடையே அதிக மக்கள்தொகை உள்ளது. மக்கள்தொகையில் ஒரு சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தாலும் அது மிகப்பெரிய எண்ணிக்கையாக இருக்கும். எனவே ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்னவென்றால் ஒமைக்ரான் லேசான தொற்று என முகக்கவசம் அணியாமல் இருக்கக் கூடாது. இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE