கொடி நாள் நிதி வசூலில் நடக்கும் கொள்ளை!
குளிருக்கு இதமாக சுக்கு காபியை சுவைத்தபடியே, ''எங்களை கவனிச்சா தான், பட்டா தர முடியும்னு இழுத்தடிக்கிறாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''தமிழகம் முழுக்க, பட்டா தொடர்பான சிறப்பு முகாம்களை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்காருங்க... மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட தேனுார் பிட்டு கிராம மக்களுக்கு பட்டா வழங்கும் முகாம் நடத்தியிருக்காங்க...
''ஆனா, இப்படி ஒரு முகாம் நடக்குதுன்னு முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கலை... முகாமுக்கு வந்தவங்களிடம் எல்லா ஆவணங்களும் சரியா இருந்தாலும், 'அது இல்லை, இது இல்லை'ன்னு அதிகாரிகள் அலைய விட்டிருக்காங்க...
''அதே மாதிரி, முகாம்ல தாசில்தார் கையெழுத்து போட்டு, பெயர் மாற்றம் செய்த பட்டாக்களையும் உடனே பயனாளிகள் கையில தராம, 'எங்களை கவனிச்சா தான் பட்டா தருவோம்'னு, வருவாய் துறை ஊழியர்கள் இழுத்தடிக்கிறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''பழி ஓரிடம்... பாவம் ஓரிடம்னு ஆயிட்டுல்லா...'' என்றார் அண்ணாச்சி.
''யார் ஓய் பழி சுமக்கறது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகத்துல இருக்கிற டிப்போக்கள்ல, அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களை, குறிப்பா, கிளை நிர்வாகிகளை பழிவாங்குதாவளாம்... ஆளுங்கட்சியின் தொ.மு.ச., உறுப்பினர்களுக்கு தாராளமா லீவ் தர்ற அதிகாரிகள், அண்ணா சங்கத்தை சேர்ந்தவங்களுக்கு தர மாட்டேங்காவ வே...
''அதுவும் இல்லாம, தொ.மு.ச., டிரைவர்கள் டூட்டியில இருக்கிறப்ப, பஸ் டயர்கள்ல லேசான கிராக், உதிரிபாகங்கள்ல பழுதுகள் ஏற்பட்டாலும், அடுத்து, பஸ்களை ஓட்டுற அண்ணா சங்கத்தினர் மேல பழியை போட்டு, அதற்கான தொகையை வசூல் பண்ணிடுதாவ... இதனால, அவங்க எல்லாம் புலம்பிட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''கொடி நாள் நிதின்னு கொள்ளை அடிக்கறா ஓய்...'' என்றபடியே, அவரது விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டியில, மோட்டார் வாகன பகுதி அலுவலகம் இருக்கு... இங்க லைசென்ஸ், முகவரி மாற்றம், எப்.சி., புதிய வாகனங்கள் பதிவுன்னு தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வரா ஓய்...
''ஆர்.டி.ஓ., ஆபீஸ்களின் எழுதப்படாத சட்டப்படி, பெரும்பாலும் புரோக்கர்களை வச்சு, காரியத்தை முடிச்சிண்டு போறா... இப்படி வர்றவாளிடம், ஆபீசுக்கு தரணும்னு சொல்லி, கொடி நாள் வசூல்னு, 100 முதல், 200 ரூபாய் வரைக்கு வசூலிக்கறா ஓய்...
''ஆனா, அந்த நிதிக்கு கொடிகள் தர்றது இல்லை... கேட்டா, 'ஸ்டாக்' இல்லைன்னு சொல்லிடறா... அந்தப் பணத்தை ஆபீஸ்லயும் கட்டாம, தங்களது பாக்கெட்டுல போட்டுக்கறா... இப்படி, தினமும் பல ஆயிரம் ரூபாயை சாப்பிடுறா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE