சண்டிகர்: பஞ்சாப்பில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டுமென்ற பா. ஜ.,வின் கருத்துக்கு காங்., முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
![]()
|
முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமர் மோடியின் வாகனத்தை வழிமறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு அவரது வாகனம் டில்லி நோக்கிச் சென்றது.
உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய மாநில அரசு மற்றும் காவல் துறை ஆகியவை மெத்தனம் காட்டியதாக உச்சநீதிமன்றத்தில் பா.ஜ., சார்பாக வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் இதுகுறித்து வருத்தம் தெரிவித்த மாநில முதல்வர் சரண்ஜித் சிங் பிரதமரை காப்பதற்காக தனது உயிரையும் தியாகம் செய்யத் தயார் என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த விவகாரம் பெரிதாகியதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் சரண்ஜித் சிங் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். நாடு முழுவதும் பாஜ., தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு நீண்ட ஆயுள் வேண்டி யாகங்கள் மற்றும் பூஜைகள் செய்யத் தொடங்கினர்.
இன்று தமிழகத்தில் பா.ஜ., உறுப்பினர்கள் இச்சம்பவத்தை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரம் தற்போது பஞ்சாப் காங்கிரஸுக்கு மிகப் பெரும் சிக்கலாக அமைந்துள்ளது மறுப்பதற்கில்லை.
அதே சமயத்தில் பா.ஜகவினர் பஞ்சாப் காங்கிரஸ் ஆட்சியை கலைத்துவிட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டுமென்று கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் சரண்ஜித் சிங் பஞ்சாப்புக்கும் மாநில குடிமக்களுக்கும் இது பெருத்த அவமானம் ஏற்படுத்தும் செயல் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜ., இதனை செய்துவருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பிரதமர்மீது துளைக்கப்படும் குண்டு முதலில் தனது மார்பில் பாய வேண்டும் என்று முன்னதாக சரண்ஜித் சிங் தெரிவித்திருந்தார். இவ்வளவு கூறியும்கூட பாஜகவினர் இந்த விஷயத்தில் மீண்டும் மீண்டும் அரசியல் செய்து வந்தால் அதனால் என்ன பயன் என்று தற்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
![]()
|
பிரதமர் மோடியை கொலை செய்யும் நோக்கில் பஞ்சாப் காங்கிரஸ் செயல்பட்டு வருவதாக பாஜ., காட்டமாக விமர்சித்துள்ளது. பிரதமருக்கு எதிராக கற்கள் வீசப்பட்டதா அல்லது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தனவா, நிலைமை இவ்வாறு இருக்க பாஜ., உறுப்பினர்கள் கடுமையான வார்த்தைகளை பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு சரண்ஜித் சிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement