சாதாரணமாக பயன்படுத்திவிட்டு துாக்கி எரியும் பல் குத்தும் குச்சியில், அழகிய வரலாற்று சின்னங்களை உருவாக்கி பிரமிக்க வைக்கிறார், திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியை சேர்ந்த, பி.எஸ்.சி.,வேதியியல் பட்டதாரி, எம்.ஏ.பினோ ஷாஜன், 25. சிறுவயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் காட்டிய இவர், தர்மாகோலில் பல்வேறு பொருட்களை உருவாக்கினார்.கல்லுாரி படிப்பிற்கு பின், பினோ ஷாஜனின் கற்பனை சிறகடித்தது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற சொலவடையை, பல்குத்தும் குச்சியும் கலைப் பொருட்களாக மாறும் என்று நிரூபித்தார்.
தாஜ்மஹால், சிட்னி டவர், லண்டனின் டவர் பிரிட்ஜ் என, பல்வேறு வரலாற்று சின்னங்களும், சிறு பல் குத்தும் குச்சியில் உருவாக்கி உள்ளார். இப்படி, 40க்கும் மேற்பட்ட மினியேச்சர் வரலாற்று சின்னங்களை படைத்துள்ளார். இதைத் தவிர படகு, இறால், கித்தார்.கப்பல் கலங்கரை விளக்கம் போன்றவையும், பல் குத்தும் குச்சியில் இருந்து கலைப்பொருட்களாக உருவெடுத்துள்ளன. பழவேற்காடு வரும் சுற்றுலா பயணியர் பார்வையிடும் வகையில் சிறிய கண்காட்சியும் நடத்தியுள்ளார்.ஐந்து ஆண்டுகள் இதில் அனுபவம். நான்கே மணி நேரத்தில் உருவான ராட்டினம், ஏழு மாதங்கள் மெனக்கெட்டு தயாரித்த மெக்கா ஆகியவை, இவரது நினைவில் பசுமையாக உள்ளன.
எம்.ஏ.பினோ ஷாஜன் கூறியதாவது: சிறு வயதில் இருந்தே கற்பனை அதிகம். கல்லுாரி படிப்பிற்கு பின், கிரியேட்டிவ் ஆர்வம் மேலும் அதிகரித்தது; அதிக முதலீடு செய்ய முடியாத குடும்ப சூழல். அதனால், குறைந்த செலவிலும், யாரும் செய்யாததை செய்யவும் திட்டமிட்டேன்.அப்படி உருவானதுதான் பல் குத்தும் குச்சியில் கலைப் பொருட்கள் வடிக்கும் முயற்சி. முதன் முதலில் வீணை ஒன்றை உருவாக்கினேன். பெற்றோர் மற்றும் நண்பர்கள் தந்த ஊக்கத்தால், பல கலைப்பொருட்களை உருவாக்கினேன்.நடமாடும் கண்காட்சி ஏற்படுத்தி பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களின் பார்வைக்கு வைக்க திட்டமிட்டு உள்ளேன். மாநில அளவிலும், தேசிய அளவிலும், இது வித்தியாசமான முயற்சி. எனவே, அரசின் உதவி கிடைத்தால் மாநில, தேசிய அளவில் கண்காட்சி நடத்தவும் விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE