கோவை:''அரசியல் காரணங்களால், திருக்குறள் ஆன்மிகத்தில் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளது,'' என கவர்னர் ரவி பேசினார்.
கோவை கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் குறள்மலை சங்கம் சார்பில் உலக திருக்குறள் மாநாடு நேற்று நடந்தது.தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்து பேசியதாவது:தமிழகம் ஒரு புண்ணிய பூமி. இங்கு திருவள்ளுவர், அகத்தியர் உள்ளிட்ட சான்றோர் பலர் பிறந்துள்ளனர். திருக்குறள் முதல் குறளில், 'ஆதிபகவன்' என கூறப்பட்டுள்ளது.
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள பரமாத்மாவும், ஆதிபகவனும் ஒன்று தான். இந்த உலகம் முழுதும் ஆதிபகவனின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருக்குறளில் ஆன்மிக தொடர்பு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக, திருக்குறளை ஆன்மிகத்தில் இருந்து பிரித்து வைத்துள்ளதோடு, உலகம் முழுதும் கொண்டு செல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள தர்மம், நீதி குறித்த கருத்துக்களை கூறினாலே, அது உலகம் முழுதும் செல்லும். திருக்குறளில் எவ்வாறு முறையாக வாழ வேண்டும் என கூறப்பட்டுள்ளது.அதன் மகிமை பாதுகாக்கப்பட வேண்டும். நாம் நல்ல மனிதராக வாழ, திருக்குறளை தினமும் படித்து, வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மலரஞ்சலி
தமிழக கவர்னர் ரவி, கடந்த 5ம் தேதி ஊட்டி வந்து ராஜ்பவனில் தங்கினார்.குன்னுார் நஞ்சப்பா சத்திரத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்த இடத்துக்கு, நேற்று முன்தினம் சென்று மலரஞ்சலி செலுத்தினார். ஊட்டி ராஜ்பவனில் இருந்து காரில் கோத்தகிரி, மேட்டுப்பாளையம் வழியாக கோவை சென்றார். அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்பினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE