செங்கல்பட்டு: செங்கல்பட்டு காவல் நிலையம் அருகே, நாட்டு வெடி குண்டு வீசியும், வீடு புகுந்தும் இருவரை கொலை செய்த இரண்டு ரவுடிகளை, போலீசார் நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.வெடிகுண்டு சப்ளை செய்த பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் சின்னநத்தத்தை சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக், 38; ரவுடி. இவர் மீது, இரண்டு கொலை வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கு தொடர்பாக, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் கையெழுத்திட சென்றார். காவல் நிலையம் அருகேயுள்ள டீக்கடைக்கு சென்ற கார்த்திக் மீது, 'பல்சர்' இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கும்பல், இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் கார்த்திக் பலத்த காயமடைந்து, அதே இடத்திலேயே இறந்தார்.
அதே கும்பல், கார்த்திக் உறவினரான செங்கல்பட்டு மேட்டுத்தெருவைச் சேர்ந்த மகேஷ் என்பவரை, வீடு புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த கும்பலை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைத்து எஸ்.பி., அரவிந்தன் உத்தரவிட்டார்.செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிந்து, கொலைகளுக்கு உடந்தையாக இருந்ததாக மாதவன், ஜெசிகா என்ற இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், வெடிகுண்டு வீசிய கும்பல், செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி மலை பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில், ஏட்டு சுரேஷ்குமார், காவலர் பரத்குமார் உட்பட எட்டு போலீசார், நேற்று காலை 7:30 மணிக்கு அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் ரவுடி கும்பலில் இருவர், தப்பித்து செல்வதற்காக, போலீசார் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசினர். அதிலிருந்து தப்பிய போலீசாரை கத்தியாலும் வெட்டினர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், துப்பாக்கியால் ரவுடி கும்பலை நோக்கி சுட்டார். இதில், செங்கல்பட்டை சேர்ந்த ரவுடிகள் தினேஷ், 'பிஸ்கட்' மொய்தீன் ஆகியோர், தோட்டா பாய்ந்து அதே இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த போலீசார் சுரேஷ்குமார் மற்றும் பரத்குமார், செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வடக்கு மண்டல ஐ.ஜி., சந்தோஷ்குமார், டி.ஐ.ஜி., சத்யபிரியா, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், எஸ்.பி., அரவிந்தன் ஆகியோர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
வடக்கு மண்டல ஐ.ஜி., சந்தோஷ்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:ரவுடி கார்த்திக், அவரது உறவினர் மகேஷ் கொலையில் தொடர்புடைய ரவுடிகளான தினேஷ், 'பிஸ்கட்' மொய்தீன் ஆகியோரை பிடிக்க சென்ற போலீசார் மீது, ரவுடி கும்பல் தாக்குதல் நடத்தியது.இதனால், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், இருவரையும் தற்காப்புக்காக, 'என்கவுன்டர்' செய்துள்ளார். பிடிபட்ட மாதவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மற்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., சத்யபிரியா கூறியதாவது:கார்த்திக் நண்பர் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும், தினேஷின் தங்கை பவித்ராவுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை தினேஷ் கண்டித்துள்ளார். அப்போது, ஹரிகிருஷ்ணனுக்கு ஆதரவாக கார்த்திக், மகேஷ் இருந்துள்ளனர். இதனால், முன்விரோதம் ஏற்பட்டு தாக்கியதாக 2018ல் ஒரு வழக்கு உள்ளது. இந்த முன்விரோதத்தில் தற்போது கொலை நடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

செங்கல்பட்டு எஸ்.பி., அரவிந்தன் கூறியதாவது:ரவுடிகளிடம் இருந்து ஐந்து நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி உள்ளோம். கொலையில் தொடர்புடைய மாதவன், ஜெசிகா ஆகியோரிடம் விசாரணை நடத்துகிறோம். ரவுடிகளை ஒடுக்க, கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ரவுடிகள் - போலீசார் கள்ளத் தொடர்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில், முக்கிய ரவுடிகளுடன், தனிப்படை போலீசார் கைகோர்த்து உள்ளதாகவும், ரவுடிகளை கைது செய்ய, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டால், தனிப்படை போலீசார் அவர்களுக்கு தகவல் தெரிவிப்பதாகவும், பல ஆண்டுகளாக புகார் கூறப்பட்டு வருகிறது. இதற்காக, ரவுடிகளிடம் பல லட்சம் ரூபாய் மாமூல் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. மாவட்டத்தில் தற்போது, கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்கும், போலீசார் ஆதரவாக உள்ளதால் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரும்பாலான கொலைகள், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களை வைத்து நடத்தப்படுகின்றன.
வெடிகுண்டு சப்ளை ரவுடி மனைவி கைது
திருப்போரூரை சேர்ந்த அசோக்குமார் என்ற ரவுடியின் மனைவி ஜெசிகா என்பவர், ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டு விற்பனை செய்து வருகிறார். அசோக்குமார் நண்பரான மொய்தீனுக்கும், அவர் தான் நாட்டு வெடிகுண்டுகளை வழங்கியதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு நடந்த அசோக்குமார் பிறந்த நாள் விழாவில், மொய்தீன் பங்கேற்றுள்ளார். இதையடுத்து ஜெசிகா கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE