மதுரை: ஹிந்து கடவுள்கள், பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த வழக்கில், 'கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலை செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என உறுதியாக நம்புகிறேன்' என்ற கருத்தை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவு செய்தது.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை.
மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை; ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எனில் அது கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை.பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக, பா.ஜ., - எம்.எல்.ஏ., காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம், பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக 'ஷூ' போட்டு மிதிக்கிறோம்.

இவ்வாறு பேசியவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவர் மீது ஜாதி, மத விரோத உணர்வுகளை துாண்டுதல் உட்பட சில பிரிவுகளில், அருமனை போலீசார் வழக்கு பதிந்தனர். ஜார்ஜ் பொன்னையாவை 2021 ஜூலை 24ல் கைது செய்தனர். அவருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆக., 10ல் ஜாமின் அனுமதித்தது.
அவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:சமூக பணியில் ஈடுபட்டுள்ளேன். என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு ஆளுங்கட்சி தந்த தேர்தல் வாக்குறுதிகள் புறக்கணிப்பு பற்றி கருத்துக்களை வெளியிட்டது சட்டவிரோதமல்ல. கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டே பேசினேன். வழக்கை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: இந்த தேசத்தில் பூமி, 'பூமா தேவி' என வணங்கப்படுகிறது. அவள் தெய்வீகத்தின் துணையாக பார்க்கப்படுகிறாள். தேசம், அன்னை தெய்வத்திற்கு சமமானது. அவள் காவி உடை அணிந்து, புத்தகம், நெற்கதிர்கள், வெள்ளைத் துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை நான்கு கைகளில் ஏந்தியிருக்கிறாள்.

தேசத்தந்தை மகாத்மா காந்தி, 1936ல் வாரணாசியில் பாரத மாதா கோவிலை திறந்து வைத்தார். நாடு முழுதும் பல ஹிந்து கோவில்களின் வளாகத்தில் பாரதமாதா ஒரு தெய்வமாக நிறுவப்பட்டுள்ளார். கன்னியாகுமரி எசக்கியம்மன் தேவி கோவில் வளாகத்திலும் காணப்படுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, தர்மபுரி மாவட்டம், பப்பாரபட்டியில் அத்தகைய ஒரு கோவிலை எழுப்ப விரும்பினார். அந்நுாற்றாண்டுக் கனவை நிறைவேற்ற, தமிழக அரசு ஒப்புக் கொண்டது.
ஹிந்து சமூகம் மீது இலக்கு
பூமி அன்னைக்கு மரியாதை செலுத்தி, வெறுங்கால்களுடன் நடப்பவர்களை மனுதாரர் கேலி செய்துள்ளார். பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்று மற்றும் அழுக்கு படிந்திருப்பதாக சித்தரித்துள்ளார். மனுதாரர், ஹிந்து சமூகத்தை ஒரு இலக்காகக் கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் ஹிந்து சமூகத்தை இழிவுபடுத்துகிறார்.
பழைய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள பல கோவில்களில், ஆண் பக்தர்கள் மேலாடை அணியாமல் நுழைய வேண்டும். பாரம்பரியமான வேஷ்டியை அணிந்து, ஒரு துண்டால் உடலை சுற்றிக் கொள்கின்றனர். இப்பாரம்பரிய நடைமுறையை மனுதாரர் கேலி செய்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில், அரசு வாயை மூடி, பார்வையாளராக இருக்க முடியாது. அரசியலமைப்பின் புனிதத்தை நிலைநிறுத்த மற்றும் பொது ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், மத அமைதி மற்றும் நல்லுறவை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.
ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சியை துாண்டுதல், மத உணர்வு, நம்பிக்கையை அவமதித்தல், இரு வகுப்பினரிடையே பகை உணர்வை துாண்டுதல் பிரிவுகளில், மனுதாரர் மீது வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது. தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக கூடியதாகவும், தொற்றுநோயை பரப்பும் வகையில் செயல்பட்டதாகவும் கூற முடியாது. யாரும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை.
சட்டவிரோதமாக கூடியது, தொற்றுநோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டது, மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிந்தது பொருந்தும் வகையில் இல்லை. அப்பிரிவுகளில் வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன். மனுதாரரின் கோரிக்கை பகுதியாக அனுமதிக்கப்படுகிறது.
பால் ஜான்சனின் 'ஒரு விசுவாசியிடம் இருந்து ஒரு வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகத்தைப் படித்த பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நான் அன்பு செலுத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவர், 'பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் நேசிப்போம், ஏனெனில் அன்பு கடவுளிடம் இருந்து வருகிறது. நேசிக்கும் அனைவரும் கடவுளிடம் இருந்து பிறந்து, கடவுளை அறிந்திருக்கின்றனர்' என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புத் தலைவரான ரெவ்.டெஸ்மண்ட் டுட்டு மறைந்தார். இதற்கு, கோபாலகிருஷ்ண காந்தி செலுத்திய அஞ்சலியை மனுதாரர் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நியாயத் தீர்ப்பு நாளில், மனுதாரரை கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE