ஸ்ரீவில்லிபுத்துார் : வலைதளங்களில் பரவும் ஆபாச ஆடியோ பதிவால், ஸ்ரீவில்லிபுத்துார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மான்ராஜ் சர்ச்சையில் சிக்கி உள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரும் இதில் இடம் பெறுவதால், கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தின் ஒரே அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மான்ராஜ். இவரும் கட்சி மகளிரணியை சேர்ந்த பெண் ஒருவரும், அலைபேசியில் ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆடியோவில் தங்களின் தனிப்பட்ட பேச்சு மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த சில அ.தி.மு.க., பிரமுகர்களின் செயல்பாடுகள் குறித்த ஆபாச உரையாடலும் பதிவாகியுள்ளது.

கட்சியினர் கூறியதாவது: மான்ராஜ் எம்.எல்.ஏ., ஆனது, கட்சி நிர்வாகிகள் சிலருக்கு பிடிக்கவில்லை. மனைவி வசந்தியும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக உள்ளார். தற்போது, வெளியான ஆடியோ பேச்சு பல மாதங்களுக்கு முன் பதிவானது. இதையறிந்த பிளாக்மெயில் கும்பல், எம்.எல்.ஏ.,விடம் பேரம் பேசியது. பேரம் படியாததால் தற்போது சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மான்ராஜ் கூறுகையில், ''இது முழுக்க செட்டப் செய்யப்பட்ட ஆடியோ பதிவாகும். கட்சி நிர்வாகி ஒருவரின் சதியே,'' என்றார். இதுபோல், பல ஆடியோ பதிவுகள் இருப்பதாகவும், அவை விரைவில் வெளியாகும் என வதந்தி பரவுவதால் அ.தி.மு.க ., பிரமுகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE