சென்னை : 'சேவை பெறும் உரிமை சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்' என கமல் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை:அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைப்பதில்லை. பொது மக்கள் எவ்வளவு முறை மனு கொடுத்தாலும் சரியான பதில் இல்லை. அரசின் சேவைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் பெறுவதற்கு, சேவை பெறும் உரிமை சட்டம் வழிவகுக்கிறது. இச்சட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

சேவை பெறும் உரிமைச் சட்டத்தின்படி, அரசு மக்களுக்கு அளிக்கும் சேவைகளுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை உள்ளது. இந்த அபராதத் தொகை, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்படவும், குறித்த காலத்திற்குள் சேவையளிக்கத் தவறிய அலுவலர்கள் தண்டிக்கப்படுவதற்கும் கூட வாய்ப்பு இருக்கிறது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட 20 மாநிலங்களில் சேவை பெறும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் என, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அது செயல்படுத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE