புதுச்சேரி: தமிழக பாடத்திட்டத்தில் புதுச்சேரி வரலாற்றை சேர்க்க வேண்டும் என, ஸ்டாலினுக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசம், இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றாலும், தமிழ் தேசிய இனத்தில் பண்பாட்டு கூறுகள் அனைத்தும் தன்னகத்தே கொண்டதாக விளங்குகிறது.
கல்வியில் தமிழகத்தின் பாடத்திட்டத்தையே புதுச்சேரி பின்பற்றி வருகிறது. எனவே தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் புதுச்சேரியின் வரலாற்றை சேர்க்க வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. பிரெஞ்சு ஆளுகையில் இருந்து மீண்ட புதுச்சேரி போராட்ட வரலாறு, தமிழகத்தின் போராட்ட வரலாற்றில் இருந்து வேறுபட்டது.
தமிழ்நாடு பாட திட்டத்தில் புதுச்சேரியின் வரலாற்றையும் சேர்ப்பது புதுச்சேரியின் வரலாற்றை புதுச்சேரி மற்றும் தமிழ் மாணவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
எனவே தமிழ்நாட்டு பாட திட்டத்தில் புதுச்சேரி வரலாற்றை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்கான பாடத்திட்டங்களை தயாரிக்கவும், அதற்கான நுால்களை எழுதவும் தேவையான கல்வியாளர்களை புதுச்சேரி அரசின் கல்வித் துறை பரிந்துரை செய்யும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE