சென்னை: 'பொங்கல் பண்டிகைக்கு முன்பே, ரேஷனில் அனைத்து பொருட்களும் நல்ல முறையில் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சியில், 2020ம் ஆண்டு 1,000 ரூபாய் ரொக்கத்துடன், 2021ம் ஆண்டு, 2,500 ரூபாய் ரொக்கத்துடன், 5,604 கோடி ரூபாய் செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது, 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என தி.மு.க., கூறியது. ஆட்சியில் அமர்ந்த பின், ரொக்கம் இல்லாமல் வெறும் பொங்கல் தொகுப்பை, தி.மு.க., அரசு செயல்படுத்தி உள்ளது. அதிலும் பெரும் குளறுபடி நடந்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொருட்கள் தரமற்று இருப்பதாகவும், எல்லாருக்கும் 21 பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், பெரும்பாலானப் பைகளில், ஐந்து முதல் ஆறு பொருட்கள் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே, அனைத்து பொருட்களும் உள்ளதா என்பதை உறுதி செய்து, ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டிய கடமை, அரசுக்குதான் இருக்கிறது. இம்மாதம், 31ம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம் என்பது, எந்த நோக்கத்திற்காக பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டதோ, அதை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, முதல்வர் இதில் கவனம் செலுத்தி, பொங்கல் பண்டிகைக்கு முன்பே அனைத்து பொருட்களும், நல்ல முறையில் கிடைக்கவும், ஏற்கனவே வாங்கிய தொகுப்பில் குறைபாடு இருந்தால், அதை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE