பொள்ளாச்சி: உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், நெடுஞ்சாலை துறையினர், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை, ஆளுங்கட்சியினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி நெடுஞ்சாலைகளில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற, பொதுநல வழக்கு ஒன்றில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக, மீன்கரை ரோடு சீனிவாசபுரத்தில் இருந்து, நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, பொள்ளாச்சி கோட்ட நெடுஞ்சாலை துறையினர் கனரக வாகனங்களின் உதவி கொண்டு, போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற துவங்கினர்.

நேற்று, தேர்நிலையத்தில் இருந்து, நியூ ஸ்கீம் ரோடு சந்திப்பு வரையிலான பல்லடம் நெடுஞ்சாலை பகுதியில், அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில், தி.மு.க.,வின் நகர மற்றும் மாவட்ட அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடத்தின் முன்புள்ள ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டன.
இந்நிலையில், அதிகாரிகளை சுற்றி வளைத்த தி.மு.க.,வினர், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை உடனே நிறுத்த நிர்பந்தித்தனர்.கட்சியின் மாவட்ட பொறுப்பாளரான டாக்டர் வரதராஜன் உள்ளிட்ட கட்சியினர், பல்லடம் ரோடு மதுரை வீரன் கோவில் முன், பணியில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை துறை வாகனங்களை முற்றுகையிட்டனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, போலீசார் தலையிட்டு சமரசம் பேசினர். அப்போது தி.மு.க.,வினர், 'பாலக்காடு ரோடு மற்றும் பல்லடம் ரோட்டில் முன்னறிவிப்பு கொடுத்து விட்டு தான் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். திடீரென நெடுஞ்சாலை துறையினர் கனரக வாகனம் கொண்டு கட்டுமானங்களை அகற்றுவதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து, துறை அதிகாரிகள் மீது போலீஸ் புகார் அளிக்க உள்ளோம்,' என்றனர்.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம். இது குறித்து, ஏற்கனவே முன்னறிவிப்பு அளித்தும், வாகன ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகே, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்கிறோம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE