சென்னை: நீட் தேர்வை நீக்க சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பது எனவும், மத்திய உள்துறை அமைச்சர் அனுமதி அளித்தால், அனைத்து கட்சி தலைவர்களுடன் சென்று சந்திப்பது எனவும் என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானம் இன்னும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இது தொடர்பாக விவாதிக்க இன்று( ஜன.,08) அனைத்து கட்சி கூட்டம் நடக்கும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க.,வின் துரைமுருகன், அ.தி.மு.க.,வின் விஜயபாஸ்கர், காங்கிரசின் செல்வப்பெருந்தகை, பா.ஜ.,வின் வானதி சீனிவாசன், பா.ம.க.,வின் ஜி.கே.மணி, ம.தி.மு.க.,வின் சதன் திருமலைக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிந்தனை செல்வன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.
பின்னர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: மருத்துவ துறையில், இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. நீட் தேர்வினால், தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நீட் தேர்வை முழுமையாக நீக்கிட சட்ட ரீதியான நடவடிக்கைகளை, மூத்த சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, தமிழக சட்டசபையில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்வது எனவும், மத்திய உள்துறை அமைச்சரிடம் நாம் ஏற்கனவே அளித்த கோரிக்கையை பரிசீலிக்க அவரிடம் இருந்து அழைப்பு வந்தால், அனைத்து கட்சி குழுவினரும் சென்று சந்திப்பது எனவும், இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நீட் தேர்வு பாதகங்களை அனைத்து மாநிலங்களும் உணரும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.நீட்தேர்வை நீக்க சட்டப்போராட்டம் முக்கியமானது. இந்த தேர்வில் அரசியல் உள்ளது என்பதை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்பு கொண்டுள்ளார். தமிழக மக்கள் மட்டுமின்றி , மற்ற மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தீர்மானத்திற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை முதல்வர் பதிவு செய்தார். மருத்துவ சேர்க்கையில் , தமிழ் வழியில் படித்த 15 சதவீத மாணவர்கள் பயன்பெற்ற நிலையில், நீட்தேர்விற்கு பிறகு 2 சதவீதமாக குறைந்துவிட்டதாக ஏ.கே.ராஜன் குழு அறிக்கை அளித்துள்ளது. நீட்தேர்வை ரத்து செய்வது என்பது தமிழக மக்களின் விருப்பம்.
இன்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அதிமுகவின் விஜயபாஸ்கர் முழுமையான ஆதரவு தெரவித்து மீண்டும் அமித்ஷாவை சந்திக்க வேண்டும் என கூறினார். இதனை முதல்வர் ஏற்று கொண்டார். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE