ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் தேதிகளை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.உத்தர பிரதேசத்தில் ஏழு கட்டங்களாகவும், மணிப்பூரில் இரண்டு கட்டங்களாகவும் ஓட்டுப் பதிவு நடக்கிறது. கோவா, பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாக நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக நேரடி பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
முடிவடைகிறது
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபைகளின் பதவிக் காலம் மார்ச்சுடன் முடிவடைகிறது. இதையடுத்து, இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. தற்போது கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. அத்துடன் உருமாறிய கொரோனா வைரசான, 'ஒமைக்ரான்' தொற்றும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஐந்து மாநிலங்களிலும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. 'ஐந்து மாநிலங்களிலும் தேர்தலை தள்ளி வைப்பது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசித்தது. 'ஐந்து மாநிலங்களிலும் தேர்தலை குறித்த காலத்தில் நடத்த வேண்டும்' என, அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. இதையடுத்து, தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டது.
690 தொகுதிகள்
இந்நிலையில் டில்லி யில் நிருபர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நேற்று கூறியதாவது:ஐந்து மாநிலங்களிலும் 690 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா தொற்று, தேர்தலை நடத்துவதில் பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய - மாநில சுகாதார செயலர்கள், நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அரசியல் கட்சிகளின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன. இதன் அடிப்படையில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிப்., 10-ல் துவங்கி, மார்ச் 7- வரை நடத்தப்பட உள்ளது.உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாகவும், வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகவும் தேர்தல்கள் நடக்க உள்ளன.
மார்ச் 10ல் முடிவு
கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரகண்டில் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஐந்து மாநிலங்களிலும் பதிவாகும் ஓட்டுகள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இவர்களில் 8.55 கோடி பேர் பெண்கள். ஒரு ஓட்டுச்சாவடியில் 1,250 - 1,500 பேர் வரை மட்டும் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஐந்து மாநிலங்களிலும் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 368 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுச்சாவடிகளும் தரைதளத்தில் அமைக்கப்படும்.ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு ஓட்டுச்சாவடி முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படும் வகையில் அமைக்கப்படும்.
கொரோனோவால் பாதிக்கப்பட்டோர், 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் வாயிலாக ஓட்டளிக்கலாம். தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 900 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். வேட்பாளர்கள் நேரடியாகவும், 'ஆன்லைன்' வழியாகவும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்பாளர்களைத் தேர்வு செய்த 48 மணி நேரத்துக்குள், அந்த வேட்பாளர் குறித்த விபரங்கள், அவர் மீது நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள் குறித்த விபரங்களை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும்.ஏன் இந்த வேட்பாளரைத் தேர்வு செய்தோம், கிரிமினல் வழக்கு இருந்தும், அவர் தேர்வு செய்யப்பட காரணம் என்ன, வழக்கு இல்லாதவர்களை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதற்கான விளக்கத்தையும் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சியின் இணையதளத்தின் முகப்பில் இந்த விபரங்கள் இடம் பெற வேண்டும்.
ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் பற்றி, 'இ விஜில்' செயலி வழியாக பொது மக்கள் புகார் செய்யலாம்.
‛வீடியோ கான்பரன்ஸ் பிரசாரம்'
வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், இலவசப் பொருட்கள் வழங்குதல் பற்றி புகார் தெரிவிக்கலாம். புகார் செய்யப்பட்ட 100 நிமிடங்களில் அந்த இடத்துக்குத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்று விசாரணை நடத்துவர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும்.தேர்தல் பணியாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்பட்டு முன்னெச்சரிக்கை தடுப்பூசி எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் நடக்க உள்ள ஐந்து மாநிலங்களிலும், 15 கோடி பேர் முதல் டோசும், ஒன்பது கோடி பேர் இரண்டாவது டோசும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
ஓட்டுப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரங்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கான விரிவான வழிகாட்டல்கள் வெளியிடப்படும். சாலையில் ஊர்வலம், சைக்கிள் ஊர்வலம் செல்வது உள்ளிட்ட அனைத்து நேரடி பிரசாரத்துக்கும் ஜனவரி 15-ம் தேதி வரை அனுமதியில்லை. அதன்பின் சூழலை ஆய்வு செய்து தேர்தல் ஆணையம் நேரடி பிரசாரம் பற்றி அறிவிக்கும். வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிக்க ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களும் கண்காணிக்கப்படும். தேர்தல் பிரசாரத்தின்போது மத ரீதியாக, இன ரீதியாக தூண்டிவிடும் வகையில் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ஓட்டு எண்ணிக்கையின் போதோ, முடிந்த பின்போ, யாரும் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டுப்பதிவு எப்போது?
உத்தர பிரதேசத்தில் பிப்., 10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மணிப்பூரில் பிப்., 27, மார்ச் 3ம் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்., 14ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

அனைத்து மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் மார்ச் 10 ம் தேதி எண்ணப்படும்.
பா.ஜ.,வுக்கு சவால் காத்திருக்கு
தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில் பஞ்சாபை தவிர மற்ற நான்கிலும் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. உத்தர பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ., உள்ளது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் கடந்த முறை பா.ஜ., 312 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை தக்க வைப்பதில் பா.ஜ.,வுக்கு கடும் சவால் காத்துள்ளது.
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த 30 ஆண்டுகளாக அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பா.ஜ., இம்முறை முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் துவக்கியுள்ள புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரசை பொறுத்தரை ஐந்து மாநில தேர்தல்களும் அந்த கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரசுக்கு இந்த ஐந்து மாநிலங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் பா.ஜ.,வுக்கு எதிராக கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் முன்வரும்.அதனால் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை பா.ஜ., காங்கிரஸ் மட்டுமின்றி நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE