லக்னோ: உ.பி., சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சி தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் தேதி அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் மார்ச் 10ல் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் உ.பி.,யில் பா.ஜ., ஆட்சி அமைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை எனக்கூறியுள்ளார்.

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வெளியிட்ட அறிக்கையில், உ.பி., மக்களின் ஆசி மீண்டும் பா.ஜ.,வுக்கு கிடைக்கும். பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் என தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்: பா.ஜ., அரசிற்கு வழியனுப்பு விழா நடத்த மக்கள் தயாராக உள்ளனர். தேர்தல் தேதிகள், மாநிலத்தில் பெருமளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். விதிமுறைகளை சமாஜ்வாதி கட்சி மதித்து நடக்கும். ஆளுங்கட்சி பின்பற்றுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

உ.பி., காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி, தேர்தலை சிறந்த முறையில் எதிர்கொள்வோம். 2022ல் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.