புதுடில்லி:'நம் நாட்டில் கோவிட் வைரஸ் பரவல் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வைரஸ் பரவும் வேகம் உயர்ந்துள்ளது. பிப்., 1 - 15ம் தேதிக்குள் வைரஸ் பரவல் உச்சத்தை எட்டும்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கோவிட் வைரஸ் மூன்றாவது அலை நம் நாட்டில் தீவிரமாக உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி ஒரே நாளில், 1 லட்சத்து 41 ஆயிரத்து 986 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.53 கோடியைத் தாண்டியுள்ளது. புதிதாக உருவாகியுள்ள 'ஒமைக்ரான்' வகை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,071 ஆக உயர்ந்துள்ளது.
'ஆர் நாட்'
நம் நாட்டில் கோவிட் வைரஸ் பரவல் குறித்து, சென்னை, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தின் கணிதத் துறை பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர்.
இது குறித்து, கணிதத் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் ஜெயந்த் ஜா கூறியுள்ளதாவது:
கோவிட் வைரஸ் பரவல் குறித்து கணிதத்தின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளோம். அதன்படி, 'ஆர் நாட்' எனப்படும் பரவல் வேகம் குறித்து கணித்ததில், கடந்த டிச., 25 - 31 தேதி காலத்தில், 2.9 அளவாக இருந்த பரவல் வேகம், ஜன., 16 வரையிலான காலத்தில், 4 ஆக உயர்ந்துள்ளது. அதாவது வைரஸ் பரவல் வேகம் மிகவும் தீவிரமாக உள்ளது.
ஆர் நாட் அளவு, 1ஐ விடக் குறைவாக இருந்தால் தான் பரவல் வேகம் முடிவுக்கு வருவதாக கூற
முடியும்.கோவிட் வைரஸ் பரவல் இரண்டாவது அலையின்போது கூட உச்சத்தை எட்டிய நிலையில், 1.69 என்ற அளவுக்கே ஆர் நாட் அளவு இருந்தது. தற்போது அதைவிட மிக அதிகமாக உள்ளது.எங்கள் கணிப்புகளின்படி பிப்., 1 - 15ம் தேதிக்குள் மூன்றாவது அலை உச்சத்தை எட்டும். அது மிகத் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தற்போது பெரும்பாலான மாநிலங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால், வரும் வாரங்களில் ஆர் நாட் அளவு சற்று குறையலாம். நாட்டில் 50 சதவீதத்தினருக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பாதுகாப்பு கவசமாக இருக்கலாம்.
இருப்பினும் முதல் அலையின்போது முழு கட்டுப்பாடு இருந்ததால் மக்கள் அதிகளவில்
கூடுவது தவிர்க்கப்பட்டது.
முக்கிய காரணம்
தற்போது சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் பெருமளவில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. வைரஸ் பரவல் வேகம் அதிகம் உள்ளதற்கு இதுவே முக்கிய காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விபரங்களின்படி, ஒமைக்ரான் வகை பரவல் அதிகரித்து வருவதே மூன்றாவது அலைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
நாட்டின் மேற்கு பகுதி களில் முதலில் தீவிரமாக இருந்த ஒமைக்ரான் வகை வைரஸ் பரவல், தற்போது நாடு முழுதும் பரவியுள்ளது. வரும் நாட்களில் இதன் வேகம் அதிகரிக்கும் என
எச்சரிக்கப்பட்டு உள்ளது.
வேகம் தொடரட்டும்!
சிறார்களுக்கு இரண்டு கோடி 'டோஸ்' தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வாழ்த்துகள், இளம்
நண்பர்களே. இந்த வேகத்தைத் தொடருவோம். அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள்
உடனடியாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவும்.
நரேந்திர மோடி, பிரதமர்
தடுப்பூசி ஆர்வம்
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:நாடு முழுதும் 15 - 18 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. சிறார்களும், பெற்றோரும் மிகுந்த ஆர்வத்துடன் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுவரை ஒருவாரத்துக்குள் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட சிறார்கள் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 91 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 66 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் போடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று ஒரே நாளில் இரவு 8:00 மணி வரை செலுத்திய கோவிட் தடுப்பூசி 'டோஸ்' எண்ணிக்கை 85 லட்சத்தை கடந்திருந்தது.இதையடுத்து ஒட்டுமொத்தமாக 151.46 கோடிக்கும் அதிகமான டோஸ் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE