நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்த... தீர்மானம்!| Dinamalar

'நீட்' தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்த... தீர்மானம்!

Updated : ஜன 10, 2022 | Added : ஜன 08, 2022 | கருத்துகள் (111) | |
சென்னை:'நீட்' தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவது என, சென்னையில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தவிவகாரத்தில், சட்டசபை கட்சி தலைவர்களின் ஏகோபித்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். விரைவில் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவும், அதன் அடிப்படையில்
'நீட்' தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்த... தீர்மானம்!

சென்னை:'நீட்' தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவது என, சென்னையில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தவிவகாரத்தில், சட்டசபை கட்சி தலைவர்களின் ஏகோபித்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். விரைவில் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பாக ஆலோசிக்க, தமிழக சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம், தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சுப்பிரமணியன்; அ.தி.மு.க., - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்; காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை; பா.ஜ., - வானதி சீனிவாசன்; பா.ம.க., - ஜி.கே.மணி; இந்திய கம்யூனிஸ்ட் - ராமச்சந்திரன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - நாகை மாலி; ம.தி.மு.க., - சதன்திருமலைகுமார்; விடுதலை சிறுத்தைகள் கட்சி - சிந்தனைச் செல்வன்; கொ.ம.தே.க., - ஈஸ்வரன்; தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன்; மனிதநேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா; புரட்சி பாரதம் கட்சி - ஜெகன்மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.


பறிக்கிறது

கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது:நீட் தேர்வு கூடாது என்பதில், நாம் அனைவரும் ஒருமித்த கருத்து உடையவர்கள். இது, தமிழக மாணவர்களின் பிரச்னை.இதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற கருத்துருவாக்கம் தேவைப்படுகிறது.ஜாதியின் பெயரால் சமத்துவமற்ற தன்மை இருக்கும் நாட்டில், கல்வி அனைவருக்கும் கிடைப்பது சிரமமான காரியமாக இருக்கிறது.அதனால் தான் தமிழகத்தில் இருந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப் பட்டது; ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அங்கீகாரமும் பெறப்பட்டது.
இந்தக் கல்வி உரிமையை, நீட் தேர்வு பறிக்கிறது. தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடை போடும், நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். பிளஸ் 2 வரை கற்ற கல்வியை விட மேலானதாக, நீட் என்ற இரண்டு மணி நேர தேர்வு அமைவதை, எப்படி ஏற்க முடியும்; இது சமூக அநீதி.
லட்சக்கணக்கில் பணம் செலுத்தி, எத்தனை பேர் நீட் தேர்வு எழுத பயிற்சி பெற முடியும்; அதனால் தான் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், முதலில் பிரதமரை சந்தித்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். எம்.பி.,க்களும், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் வலியுறுத்தினர்.


அனுப்பவில்லை

அடுத்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவை, ௨௦௨௧ செப்., 13ம் தேதி சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றினோம்.அந்த சட்ட முன்வடிவை ஜனாதிபதி ஒப்புதலுக்காக, கவர்னருக்கு அனுப்பி வைத்தோம்; ஆனால், கவர்னர் அனுப்பாமல் வைத்திருக்கிறார்.சட்டசபையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றும் போது, அதை கவர்னர் மதித்து ஒப்புதல் அளிப்பது தான், மக்களாட்சியின் தத்துவம்.
நான் நேரில் சென்று கவர்னரை வலியுறுத்தியும், ஜனாதிபதிக்கு அவர் அனுப்பவில்லை. சட்டசபையின் சட்டம் இயற்றும் அதிகாரம் கேள்விக்குறியாகும் சூழ்நிலை உருவானதால் தான், அவசரமாக இந்த கூட்டத்தை கூட்டினோம்.இவ்வாறு அவர் பேசினார்.


பறித்துவிட்டது

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:மருத்துவ துறையில் தமிழகம், இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கி வருகிறது.ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு திருத்த சட்டம், அதன்பின் கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய சட்டம் ஆகியவை, மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வை முன்னிறுத்தி, நம் மாணவர்களை பெருமளவில் பாதித்து உள்ளன.
மாநில அரசு நிதியில் இருந்து, மாநில அரசுகள் துவக்கி நடத்தும் மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர்கள் எந்த முறையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமையை, மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்து விட்டது. இது, மாநில சுயாட்சிக்கு எதிரானது.நீட் தேர்வானது, சிறப்பு பயிற்சிகளை பெறுவதற்கு வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது.
மருத்துவர் மாணவர் சேர்க்கையில், 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளி கல்வியால் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கி, பள்ளிக் கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கி உள்ளது. இந்த நீட் தேர்வு, மாணவர்களின் கல்வி கனவை சிதைப்பதாகவும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள, கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதாகவும் அமைந்து விட்டது.
எனவே, மாநில உரிமைகளை நிலை நாட்டவும், நம் மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றவும், தமிழக சட்டசபையில் ஒருமனதாக சட்டமுன்டிவு நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்காக, கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருப்பது, சட்டசபையின் இறையாண்மைக்கு ஏற்றதல்ல.


சட்ட முன்படிவு

தமிழக மாணவர்களின் நலன் கருதி, முதல்வர் நேரடியாக கவர்னரை சந்தித்து, நீட் சட்ட முன் வடிவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக, டிசம்பர் 28ம் தேதி, தமிழக எம்.பி.,க்கள், ஜனாதிபதியை சந்திக்க சென்றனர். அவரை சந்திக்க இயலாததால், அவரது அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனு அன்று மாலையே, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் வலியுறுத்த, மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கோரி, பல நாட்களாகியும் சந்திக்க மறுத்து விட்டார். எனவே, அவரது அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. தமிழக எம்.பி.,க்களை, மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்தது, மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது.


உடன்பாடில்லை

மத்திய உள்துறை அமைச்சரிடம் ஏற்கனவே அளித்த கோரிக்கையை பரிசீலிக்க, அவரிடமிருந்து அழைப்பு வந்தால் அனைத்து கட்சிகளின் சார்பில் சந்திக்கலாம்.நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்க, தேவையான சட்ட நடவடிக்கைகளை, மூத்த சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்த பின், தமிழக சட்டசபையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்வோம்.
நீட் தேர்வின் பாதகங்ளை, மற்ற மாநிலங்களும் உணரும் வகையில், ஒருமித்த கருத்தை உருவாக்க தேவையான, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ., சார்பில் பங்கேற்ற வானதி சீனிவாசன், ''அனைத்து கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் உடன்பாடில்லை,'' எனக்கூறி வெளிநடப்பு செய்தார். மற்றவர்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X