சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

எம்.ஜி.ஆர்., பாடல் மட்டும் போதுமா?

Updated : ஜன 09, 2022 | Added : ஜன 09, 2022 | கருத்துகள் (1)
Advertisement
டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதல்வர் ஸ்டாலின், மழை வெள்ளம் மற்றும் கொரோனா நிவாரண பணியை நேரில் சென்று ஆய்வு செய்த நிகழ்ச்சிகளை தொகுத்து, 'காலத்தை வென்றவன் நீயே' என்ற தலைப்பில், அவரை வானளாவ புகழ்ந்து, தி.மு.க., நாளேடு, 'முரசொலி'யில் ஒரு பக்க கட்டுரை வெளியானது.அதன் முடிவில், 'காலத்தை வென்றவன் நீயே, காவியமானவன் நீ...' என்ற பாடல், திரைப்படம்
 இது உங்கள் இடம்

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதல்வர் ஸ்டாலின், மழை வெள்ளம் மற்றும் கொரோனா நிவாரண பணியை நேரில் சென்று ஆய்வு செய்த நிகழ்ச்சிகளை தொகுத்து, 'காலத்தை வென்றவன் நீயே' என்ற தலைப்பில், அவரை வானளாவ புகழ்ந்து, தி.மு.க., நாளேடு, 'முரசொலி'யில் ஒரு பக்க கட்டுரை வெளியானது.
அதன் முடிவில், 'காலத்தை வென்றவன் நீயே, காவியமானவன் நீ...' என்ற பாடல், திரைப்படம் ஒன்றில் கதாநாயகனுக்கு எழுதப்பட்டது. அந்தப் பாடல் வரிகளுக்கு நிஜ நாயகனாக, இன்று நம் முதல்வர் விளங்குகிறார். படத்தில் கதாநாயகி பாடுவது போல வரும் இந்த வரிகளை, இன்று நாட்டு மக்கள் முதல்வர் ஸ்டாலினை பார்த்து பாடி மகிழ்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. இந்த பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் என்ன? கதாநாயகன், கதாநாயகி யார், யார்? என்ற விபரமெல்லாம் குறிப்பிடப்படவில்லை.
எம்.ஜி.ஆர்., சொந்தமாக தயாரித்து, கதாநாயகனாக நடித்த அடிமைப்பெண் படத்தில், அவரை பார்த்து கதாநாயகி ஜெயலலிதா பாடுவது போல, இப்பாடல் உருவாக்கப்பட்டது.தி.மு.க.,வால், 'துரோகி, மலையாளி' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட அக்கட்சியின் அரசியல் எதிரி ஆயிற்றே எம்.ஜி.ஆர்.அவரது படப்பாடலை ஏன் முதல்வர் ஸ்டாலினுக்கு உதாரணம் காட்ட வேண்டும்?
எம்.ஜி.ஆரைப் போல அரிதாரம் பூசி, சிகை அலங்காரம் செய்து, அவரது ஸ்டைலில் உடை அணிந்து, கருணாநிதியின் மகன் மு.க.முத்து நடித்த, பிள்ளையோ பிள்ளை படத்தில் வரும் பாடலையே உதாரணம் காட்டியிருக்கலாமே.அப்படத்தில் கதாநாயகி லட்சுமி பாடுவது போல, 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ, நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ...' என்ற பாடலை ஏன் உதாரணம் காட்டவில்லை?
மு.க.முத்துவை முன்னிலைப்படுத்துவதற்காகவே எழுதப்பட்ட இந்த பாடலை, மக்கள் ஏற்கவில்லை. 'காலத்தை வென்றவன் நீ...' என்ற பாடல் தான் காலம் உள்ளவரை நிலைத்திருக்கும். டிச., 24ல், ஈ.வே.ரா., நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார், முதல்வர் ஸ்டாலின். ஆனால் அதே நாளில் அனுசரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?எம்.ஜி.ஆர்., வேண்டாம்; ஆனால் அவரின் செல்வாக்கு, பாடல் மட்டும் தி.மு.க.,வுக்கு தேவையா?


புகார் பெட்டி பிரச்னையை தீர்க்காது!-


வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாநிலம் முழுதும் பள்ளிகளில், 'மாணவர் மனசு' என்ற பெயரில் புகார் பெட்டி வைக்கவும், 'மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு' என்ற குழுவும் அமைத்து, மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும் என்றும், அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவியருக்கு பள்ளியில் ஏற்படும் பாலியல் தொல்லைக்கு, இந்த புகார் பெட்டி மற்றும் குழு தீர்வாக அமையாது!பாடம் கற்பிப்பதோடு மட்டுமல்லாது, மாணவியரின் உளவியல் பிரச்னைக்கு, தீர்வு காண வேண்டியது, ஆசிரியரின் கடமை!மாணவரின் உளவியல் பிரச்னையை புரிந்து கொள்ளாமல், பாடத்தை நடத்தி முடித்து, வகுப்பறையில் இருந்து வெளியேறுவதையே, பெரும்பாலான ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
பெற்றோரை அழைத்து, மாதம் ஒருமுறையாவது கூட்டம் நடத்த வேண்டும். மாணவ - மாணவியருக்கு பாலியல் கல்வி, விழிப்புணர்வு, உதவி எண்கள், சமூக வலைத்தளங்களின் போக்கு, மருத்துவம், தன்னம்பிக்கை ஆலோசனை மற்றும் 'சைபர் கிரைம்' குற்றங்கள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.பள்ளியில் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து, எத்தனை மாணவியர் புகார் எழுதி பெட்டியில் போடுவர் என்பது தெரியாது.
இதை பொதுவெளியில் பகிர, பெரும்பாலான மாணவியர் விரும்புவதில்லை.புகார் பெட்டி, ஒருபோதும் மாணவியரின் பிரச்னையை தீர்த்து விடாது; அதையும் தாண்டி, அரசும், ஆசிரியர்களும் இணைந்து நிறைய மெனக்கெட வேண்டும்.கணிக்க தவறியது குற்றமே!


அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மழையை முன்கூட்டியே சரியாக கணிக்க முடியாத அளவிற்கு, சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் இருப்பது, மிகவும் கவலையளிக்கிறது.வானிலை ஆராய்ச்சி மையம், காலநிலை குறித்து கணிப்பு வெளியிட்டால் தான், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
உலகம் முழுதும் மழை, புயல், வெப்பநிலை போன்ற இயற்கை சீற்றங்களை, 'சாட்டிலைட்' உதவியுடன் துல்லியமாக கணிக்கப்படுகிறது.கடந்த 2021 நவ., 16 மற்றும் டிச., 30ல், சென்னையில் அதி தீவிர கனமழை கொட்டி தீர்த்தது. இதை முன்கூட்டியே கணிக்க தவறியதால், மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.'வானிலை ஆராய்ச்சிக்காக பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் செயலிழந்து கிடக்கின்றன' என பலமுறை புகார் அனுப்பியும், மத்திய அரசு ஏன் அலட்சியமாக இருந்தது என தெரியவில்லை.
பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் தொழில்நுட்ப கருவிகளை, முறையாக பராமரிப்பது மிக அவசியம்.அரசின் அலட்சியத்தால், அதிகாரிகளின் தவறால் உயிரிழப்பும், பெரும் சேதமும் ஏற்படுகிறது. எனவே, சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தை உடனடியாக மேம்படுத்த வேண்டும்.

முருங்கை மரம் ஏற தயாரா?


சா.விசு, பாளையங்கோட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பேய்க்கு வாக்கப்பட்டால், முருங்கை மரம் ஏறித் தானே ஆக வேண்டும்' எனக் கூறுவர். தமிழக மக்கள் இப்போது தான், முருங்கை மரம் ஏறத் துவங்கியுள்ளனர்; அடுத்த நான்கு ஆண்டுகளில் சுத்தமாக பழகி விடுவர்.
தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலரும், எம்.எல்.ஏ.,வுமான துரை.சந்திரசேகரன், 2022ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் ஒன்றை மக்களுக்கு, வினியோகித்து இருக்கிறார்.அதன் பின்புறத்தில், பிற மத பண்டிகை தினங்களை விபரமாக அச்சிடச் சொல்லி அறிவுறுத்தி உள்ளார். ஆனால், ஹிந்து பண்டிகைகளை மட்டும், 'அரசு விடுமுறை நாட்கள்' என்று அச்சிடச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார்.
நிச்சயமாக, அந்த காலண்டர் அச்சகத்தார், தங்கள் விருப்பம் போல இந்த செயலை செய்திருக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம்.எதிர்ப்பு அதிகமானால், அச்சகத்தின் மீது பழியை போட்டு, தப்பித்துக் கொள்ளலாம். எதிர்ப்பு எழவில்லையானால், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கும் இதே வழிமுறையை பின்பற்றுவோம் என்பதன் வெளிப்பாடே, இந்த பரிசோதனை முயற்சி.
எம்.ஜி.ஆர்., நடித்த, நம் நாடு படத்தில், 'துரை... உனக்கு சட்டமும் தெரியலை; ஒரு மண்ணும் தெரியலை' என்ற வசனம் இடம்பெற்றிருக்கும்.அது போல, தி.மு.க., - எம்.எல்.ஏ., துரை.சந்திரசேகரனுக்கு, தமிழும் தெரியலை போலும். ஏனெனில், கடவுள் மற்றும் மனிதரின் பெயரை எழுதும் போது தான், 'திரு' மற்றும் 'ஸ்ரீ' என குறிப்பிடுவர்.'திரு கருணாநிதி' அல்லது 'ஸ்ரீ கருணாநிதி' என்றால் சரி. 'திரு.அறிவாலயம், ஸ்ரீ அறிவாலயம்' என்பது தவறு.
துரை.சந்திரசேகரன் ஆலோசனைக்கு இணங்க அச்சடிக்கப்பட்டுள்ள, அந்த தி.மு.க.,வின் காலண்டரில் தமிழ் ஆண்டுகளின் பெயர்களை, 'ஸ்ரீ பிலவ, ஸ்ரீ சுபகிருது' என்று அச்சிட்டுள்ளனர். என்னே அறிவு?இது ஒன்றிலேயே, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் வண்டவாளம், தண்டவாளம் ஏறி இருக்கிறது.
இந்த, 2022 காலண்டரில் ஹிந்து பண்டிகைகளை திட்டமிட்டு தவிர்த்தோர், அடுத்து வரும் ஆண்டுகளில் சீன மற்றும் பாகிஸ்தான் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களை அச்சிட்டு வழங்குவர். சத்தியமாக ஹிந்து பண்டிகை நாட்களை அச்சிடவே மாட்டார்கள்.
ஏனெனில், அவர்கள் வந்த வழி அப்படி; அவர்களின் வார்ப்பு அப்படி. இது முடிவல்ல; ஆரம்பம் தான்.மக்களே... அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, மனதை தேற்றி, முருங்கை மரத்தில் ஏற பழகிக் கொள்ளுங்கள். வேறு வழி.அமிர்தமும் விஷமாகும்!


சி.மோகன், பொட்டல்புதுார், தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி தற்போது ஸ்டாலின் என்று, இத்தனை முதல்வர்களின் ஆட்சி நிர்வாகத்தை பார்த்து இருக்கிறோம்.
அன்றாடம் ஒரு அறிவிப்பை வெளியிடும் பழக்கம், அ.தி.மு.க., முன்னாள் பொதுச்செயலர் ஜெயலலிதா காலத்தில் இருந்து தான் துவங்கியது.அதிலும் அந்த அறிவிப்புகள் குறித்து, எதிர்க்கட்சிகள் ஏதும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காக, '110' விதியின் கீழ் தான் அறிவிப்பார். அந்த அறிவிப்பு குறித்த விபரங்கள், நாளிதழ், 'டிவி' ஊடகங்களில் விஸ்தாரமாக வெளியாகும்.
அதை காணும் போதே மக்கள், அப்போதே அத்திட்டம் அமலுக்கு வந்து நிறைவேற்றப்பட்டு விட்டதை போன்று ஆனந்தத்தில் மிதப்பர்.ஆட்சியாளர்கள் எதிர்பார்ப்பது இதைத் தானே?ஆனால், பிரமாதமாக அறிவிக்கப்பட்ட அந்த திட்டங்களில், 1 சதவீதம் கூட நிறைவேறி இருக்காது. ஆனால் அந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை முழுதும், 'ஸ்வாஹா' ஆகி இருக்கும்.
மழைக்காலங்களில் சென்னையும், தமிழகத்தின் ஏனைய பகுதிகளும் நீரில் மிதப்பதற்கு காரணமே, இந்த, '110' விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்டு, செயல்படாத அறிவிப்புகள் தான் என்றால் மிகையில்லை.இப்போது அதே பாதையில், 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியில் அமர்ந்துள்ள தி.மு.க.,வும் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
ஆட்சியில் அமர்ந்த பின், அன்றாடம் ஒரு அறிவிப்பு. சில நாட்களில் காலை, மதியம், மாலை என வேளைக்கு ஒன்று வீதம் மூன்று அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இதுவரை, 200க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன.அனைத்து அறிவிப்புகளும் சிலை நிறுவ, மணிமண்டபம் கட்ட, நுாலகம் அமைக்க போன்றவை தானே தவிர, பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு உபயோகமாகும் திட்டங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
இந்த திட்டங்களில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கும் என்றால் அதுவும் கேள்விக்குறியே!'அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் விஷம்' என்று ஒரு சொலவடை உண்டு. இந்த அன்றாட அறிவிப்புகள், அந்த மனோபாவத்தைத் தான் மக்கள் மனதில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.


பகுத்தறிவு பச்சோந்திகளே...


முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சில வாரங்களுக்கு முன், சென்னை பிராட்வே புறநகர் அரசு பேருந்தில் பயணிக்க, ஒரு நரிக்குறவ தம்பதி, 7 வயது மகனுடன் ஏறியுள்ளனர். அந்த பேருந்தின் நடத்துனர் சற்றும் இரக்கம் இன்றி, அந்த தம்பதியை பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளார். இது இணையத்தில், 'வீடி யோ'வாக வலம் வந்தது.
இதைக் கண்டு நெஞ்சு பொறுக்காத, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, 'என் அண்ணனின் சமத்துவ ஆட்சி நடக்கும் போது, அரசு பேருந்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது மிகவும் வேதனை' என தெரிவித்துள்ளார்.
அடுத்த நாளே மாநகர பேருந்தில் பயணிக்க வந்த ஒரு நரிக்குறவ குடும்பத்தினரை, நடத்துனர் மற்றும் ஓட்டுனர் வரவேற்று, அவர்களுக்கு காலில் பாலுாற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, மாலை சூட்டி, கற்பூரம் ஏற்றி, பாத பூஜை செய்துள்ளனர்.
மாநகர பஸ் ஊழியர்கள் இப்படி, நரிக்குறவ குடும்பத்துக்கு பாலாபிஷேகம் செய்து, 'ஓவர் பில்ட் அப்' கொடுத்து வரவேற்றது எதற்காக?தன் தங்கை கனிமொழி வருந்தினார் என்பதற்காக, அவரது அண்ணனும், முதல்வருமான ஸ்டாலின், அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகளுக்கு, 'டோஸ்' விட்டிருப்பாரோ?முந்தைய அடாவடிச் செயலுக்கு, பிராயச்சித்தம் தான் இந்த விபரீத பாலாபிஷேகமோ?
'நீட்டலும் வேண்டாம்; மழித்தலும் வேண்டாம்' என, வள்ளுவர் சொன்னது போல, நரிக்குறவர் தம்பதியை பேருந்தில் இருந்து துாக்கி எறிவானேன்... பின், அவர்களுக்கு பாத பூஜை செய்வானேன்?இது ஒரு கோமாளித்தனம் என்பதில் சந்தேகமில்லை.
'சமத்துவ தினம், சமூக நீதி நாள்' என்றெல்லாம் வாய்கிழிய பேசினோமே... இன்று நரி குறவருக்கு அநீதி நடந்தது என்றால், மக்கள் கைகொட்டிச் சிரிப்பரே என்பதால், இந்த 'பாலாபிஷேக' கபட நாடகம் அரங்கேற்றப்பட்டு உள்ளது.
பகுத்தறிவு வாதம் பேசும் பச்சோந்திகளே... மக்கள், உங்களிடம் எதிர்பார்ப்பது பாத பூஜையோ, பாலாபிஷேகமோ அல்ல... பக்குவமான மனிதாபிமானத்தை மட்டும் தான்!Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-ஜன-202219:28:29 IST Report Abuse
D.Ambujavalli இந்த 'பேய்க்கு வாழ்க்கைப்பட்ட ' நிலை, பேய்களே பாமர மக்களை மயக்கி திருமணம் செய்துகொண்டு, குடும்பம் நடத்த முருங்கைமரம், புளியமரம் என்று இழுத்தடிக்கும் நிகழ்ச்சிதான் இன்று பேய்கள் ஆட்சி, நேற்று பிசாசுகள் ஆட்சி வெறுத்துப்போய்விட்டது மக்களுக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X