விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது.கலெக்டர் மோகன் பேசுகையில், 'தமிழர் திருநாளான பொங்கல் விழாவை ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என அனைவரும் கொண்டாடும் வகையில், 'சமத்துவ பொங்கல் விழா'வாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தது, மிகவும் பொருத்தமான ஒன்றாகும்...' என, தி.மு.க., தலைவர்களை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார்.
அங்கிருந்த அக்கட்சிக்காரர் ஒருவர், 'இதை கேட்கும் போது, புதுசா அமைச்சர் பதவி வாங்கினவரின் பேச்சு போல இருக்கே... ஒருவேளை, நம் கட்சி உறுப்பினர் அட்டை வாங்கிட்டாரோ...' எனக் கேட்டதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
'அதெல்லாம் இருக்கட்டும்...'
மறைந்த, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, 'நல்லாட்சி தின கருத்தரங்கு' பா.ஜ., சார்பில் சமீபத்தில் மதுரையில் நடந்தது. இதில் மாநில பொது செயலர் பேராசிரியர் சீனிவாசன் பேசுகையில், 'நேரு பிரதமராக இருந்த போது, பா.ஜ.,வின் தாய் இயக்கமான ஜனசங்கத்திற்கு ஒன்றிரண்டு எம்.பி.,க்கள் தான் இருந்தனர். அவர்களை பார்த்து நேரு, 'இவர்களை சாதாரணமாக எடை போட கூடாது. நாளைக்கு ஆட்சியை பிடித்து விடுவர்' என்றார்.
அதுபோல வாஜ்பாயை பார்த்து,'ஒரு நாள் இவர் பிரதமராவார்' என கணித்து கூறினார்...' என்றார். அங்கிருந்த பா.ஜ., நிர்வாகி ஒருவர், 'அதெல்லாம் இருக்கட்டும்... தமிழகத்துல பா.ஜ., கட்சி பெரிய அளவுல வளருமுன்னு யாராச்சும் சொல்லி இருக்காங்களா...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
'இவங்களும் ஆரம்பிச்சுட்டாங்களா?'
கிருஷ்ணகிரியில், பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வினியோகத்தை, கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.பின் அவர் பேசுகையில், ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ் பெயரை, 'ஓம்.பிரகாஷ்' என்றும், கிருஷ்ணகிரி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பரிதா நவாப்பை, 'பிரதாப் நவாப்' எனவும் மாற்றிக் கூறினார்.
இதை கேட்டு, கூட்டத்தில் இருந்தோர் சிரித்தனர். அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'தப்பும், தவறுமாய் ஏதாவது பேசினால் தான், விளம்பரம் கிடைக்கும்... அதன் மூலம், கட்சி தலைமையின் கவனத்தை ஈர்க்கலாமுன்னு, கடந்த ஆட்சியில, அ.தி.மு.க., அமைச்சர்கள் சிலர் செய்ததை போல, இப்போ இவங்களும் ஆரம்பிச்சுட்டாங்களா...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement