தபால் அலுவலகங்களில் உள்ள, 'டைம் டிபாசிட்' திட்டத்தின் சிறப்பு கள் பற்றி கூறுகிறார், நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன்: தபால் அலுவலக டிபாசிட்டை, 'டைம் டிபாசிட்' என்பர். இந்த டிபாசிட்டுகளுக்கு, அசல் மற்றும் அதற்கான வட்டி சேர்த்து வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் மூலதனத்துக்கு முழுக்க, மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கிறது என்பதால், எந்த பொருளாதார சூழலிலும் முதலீடு செய்த பணத்திற்கு பங்கம் வராது.
எனவே, 'ரிஸ்க்' எடுக்க விரும்பாதவர்கள் துவங்கி, மூத்த குடிமக்கள், குடும்பத் தலைவியர் என பலரும் இந்த முதலீட்டை மேற்கொள்ளலாம்.டைம் டிபாசிட்டைப் பொறுத்தவரை, டிபாசிட் ஆரம்பிக்கும்போது இருக்கும் வட்டி வீதம், முதலீட்டுக் காலம் முழுக்க வழங்கப்படும். நடுவில் வட்டி வீதம் மாறினாலும், டிபாசிட்தாரருக்கு கிடைக்கும் வட்டி வீதத்தில் மாற்றம் இருக்காது.
இந்த டைம் டிபாசிட், ஓராண்டு, இரண்டாண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு முதிர்வு காலத்தை கொண்ட நான்கு திட்டங்களாக உள்ளன. டிபாசிட் வாயிலாக கிடைக்கும் வட்டி வருமானம், பணவீக்க வீதத்தை விட, 0.5 - 1 சதவீதம் அதிகமாகத் தான் இருக்கும்.எனவே, ஒருவர் தன் மொத்த முதலீட்டையும் இந்த திட்டத்தில் போடுவது லாபகரமாக இருக்காது. மேலும், வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பதும் ஒரு சிக்கல்.
இந்த டிபாசிட்டுக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறை வட்டி, கணக்கில் சேர்க்கப்படும்; ஆனால், ஆண்டுக்கு ஒரு முறை தான் தரப்படும்.இந்தியர்கள் யார் வேண்டுமானாலும், இந்த டிபாசிட்டுகளில் முதலீடு செய்ய முடியும். தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு இருந்தால் முதலீட்டை ஆரம்பித்து விடலாம். 10 வயதுக்கு மேற்பட்டோர், அவர்களே இந்த டிபாசிட்டை பராமரிக்கவும் முடியும். அதற்கு குறைவான வயது உள்ளோர், பெற்றோர் அல்லது காப்பாளர் வாயிலாக டிபாசிட் செய்ய வேண்டும்.
குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாய். அதன் பின், 100 ரூபாயின் மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.'பான் கார்டு, ஆதார் கார்டு' இருந்தால் டிபாசிட்டை ஆரம்பித்து விடலாம். டிபாசிட்டை ஆரம்பிக்கும்போது இந்த ஆவணங்களின் ஒரிஜினலைக் கையோடு கொண்டு செல்லவும்; 'நாமினி'யை நியமிக்கத் தவறாதீர்கள்.
எந்த ஒரு தபால் அலுவலக கிளையிலும் டிபாசிட் கணக்கை துவங்க முடியும். சேமிப்புக் கணக்கை விட சற்று கூடுதல் வருமானம்; மூலதனத்துக்கு பாதுகாப்பு விரும்புவோர்; ஓராண்டு முதல் மூன்றாண்டு கழித்து பணம் தேவைப்படுவோர், இந்த டிபாசிட்டை தேர்வு செய்யலாம்!
தோடர்களின் பாரம்பரியம் 'பூத்துக்குளி!'
ஊட்டி போன்ற நீலகிரி மலை பகுதிகளில் வாழும் தோடர் பழங்குடியின மக்களின், 'பூத்துக்குளி' எனப்படும், 'எம்ப்ராய்டரி' கைத்தையல் பற்றி கூறுகிறார், தோடர் இனத்தைச் சேர்ந்த சாய் லட்சுமி: தோடர் பழங்குடியினப் பெண்களின் கைவண்ணத்தில் உருவாகும் பூத்துக்குளி எனப்படும் தோடர் எம்ப்ராய்டரிக்கு, 2013ல் புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில், புவிசார் குறியீடு பெற்ற ஒரே உற்பத்தி பொருளாக தோடர் பழங்குடியின பெண்கள் தயாரிக்கும் பூத்துக்குளி மட்டும் தான் தற்போது வரை இருக்கிறது.
பொதுவாக, குளிர் நிறைந்த மலை உச்சிகளில் வாழ்விடங்களை கொண்டிருக்கும் தோடர் பழங்குடியின ஆண்களும், பெண்களும் நீண்ட போர்வை போன்ற மேலாடை ஒன்றை எப்போதும் போர்த்திக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள்.பருத்தியால் நெய்யப்பட்ட நீண்ட போர்வையை வெறுமனே போர்த்தாமல், அதில் சிவப்பு மற்றும் கறுப்பு நுால்களை கொண்டு பூ வேலைப்பாடுகளை செய்து போர்த்தி வருகின்றனர்.
ஆரம்ப காலங்களில் பெரிய அளவிலான போர்வைகளுக்கு மட்டுமே பூ வேலைப்பாடுகள் செய்து வந்தனர். தற்போது, மொபைல் போன் கவர் முதல் முககவசம் வரை, 35க்கும் அதிக வகையிலான பொருட்களை உற்பத்தி செய்து, சந்தைப் படுத்தி வருகின்றனர்.இந்த எம்ப்ராய்டரி கலையை இயற்கை எங்களுக்கு கொடுத்த பெரிய கொடையாகவே நினைக்கிறோம்.
தோடராய் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும், இந்த எம்ப்ராய்டரி இயல்பாகவே தெரிந்திருக்கும்; யாரும் சொல்லித் தர தேவையில்லை. வீட்டில் இருப்போரை பார்த்து தாமாகவே கற்றுக் கொள்வர்; யார் தயவையும் எதிர்பார்த்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.பெரும்பாலான பெண்கள் இதையே முழு நேரத் தொழிலாக செய்கின்றனர். மற்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களும், ஓய்வு நேரத்தில் எம்ப்ராய்டரியும் கையுமாக இருப்பர்.
பூத்துக்குளிக்குத் தேவையான காட்டன் மெட்டீரியலை கரூர் அல்லது ஈரோடு மாவட்டத்தில் இருந்து மொத்த விலைக்கு வாங்கி, எங்களுக்குள் பிரித்துக் கொள்வோம். காட்டனில் எம்பிராய்டரி பின்னுவதற்கான தரமான உல்லன் நுால்கள், ஊட்டி மார்க்கெட்டில் கிடைக்கின்றன.கறுப்பு மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு வண்ணத்தை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இந்த இரண்டு நிறங்கள் தான் ரொம்ப எடுப்பாக இருக்கும் என்பதால், இந்த நிறத்தை தேர்வு செய்கிறோம்.
எம்ப்ராய்டரிக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோமோ, அவ்வளவு வருமானம் கிடைக்கும். நல்ல விற்பனையாகும் காலங்களில் ஒருவரால் ஒரு மாதத்தில், 20 ஆயிரம் ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும்.பூத்துக்குளியில் மூழ்கியிருக்கும் போது கவலைகளை மறப்பது மட்டுமல்லாமல், சொந்தக் காலில் நிற்கும் உணர்வையும் கொடுக்கும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE