மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசன் அறிக்கை: தமிழக அரசின் சேவைகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. நிர்ணயிக்கப்பட்டுள்ள நாட்களுக்குள் கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க முடியும். அதற்கு வழிவகை செய்யும், சேவை பெறும் உரிமை சட்டத்தை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
புது, 'ஐட்டமாக' தமிழக அரசிடம் கோரி இருக்கிறீர்கள். உங்கள் அறிக்கையை முதல்வர் பார்த்தால், 'ஓகே' சொல்லி விடுவார். எனினும், நடைமுறைக்கு வருவது தான் கஷ்டம்!
ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: தமிழக சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரையில் மழை வெள்ள சேதம், பயிர்கள் சேதம், தொழில் வளர்ச்சி பற்றி எதுவுமே எதிர்பார்த்த வகையில் இல்லை; தி.மு.க., புகழ்பாடும் உரையாகத் தான் இருந்தது.'
அப்படித் தான் பலரும் சொல்கின்றனர். தி.மு.க., அரசு எழுதிக் கொடுத்த அறிக்கை, அப்படித் தானே இருக்கும். வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்த்தது தவறே!
தமிழக காங்., - பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கை: வந்த பிறகு எதிர் நின்று திரும்பிப்போக வைப்பது ஒரு விதம்; வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொரு விதம். தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச்செல்கிறது. அந்த பயம் இருக்கட்டும்.
நாட்டின் பிரதமர் என்று கூட யோசிக்காமல், கட்சி பேதத்துடன் பேசும் நீங்கள் தான், தமிழக காங்கிரசுக்கு அடுத்து தலைமை ஏற்கப் போவதாக கூறுகின்றனர். தமிழக காங்., 'வளர்ந்திடும்!'
தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: 'நீட்' தேர்வு விலக்கு குறித்து, தமிழக அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்க மறுத்தது, பார்லிமென்ட் வரலாற்றில் நடக்காத ஒன்று; ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவமதிக்கும் செயல்.
தமிழக மக்களும், மாணவர்களும், 'நீட்' வேண்டும் என்கின்றனர்; உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் அப்படியே சொல்கின்றன. தமிழகத்தில் சில கட்சிகள் வேண்டாம் என்று சொன்னால், அதை அமித் ஷா ஏற்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமா?
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று, 2011ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது வலியுறுத்தினேன். நாங்கள் தான் அந்த கோரிக்கையை முதல் முறையாக வைத்தோம்; உச்ச நீதிமன்றம் வரை சென்று முறையிட்டோம். இப்போது தான் அது சாத்தியமாகியுள்ளது.
ஏற்கனவே, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, 'பா.ம.க., தான் நேரடி ஔிபரப்புக்கு முதலில் கோரிக்கை வைத்தது' என்கிறார். நீங்கள், நான் தான் என்கிறீர்கள். எது உண்மை?
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி.ராஜா பேட்டி: நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க, மோடி அரசு அகற்றப்பட வேண்டும்; அதற்கு மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும். பா.ஜ.,வுக்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்தெழத் துவங்கி விட்டனர்.

முதலில் இந்த கோஷத்தை மாற்றுங்கள். கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இப்படித் தான் சொல்லி வருகிறீர்கள். எனினும், எந்த மாநிலத்திலும், இந்திய கம்யூ., ஆட்சி அமைத்தது போல தெரியவில்லையே!
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு: தமிழக அரசின் கஜானாவை முந்தைய, அ.தி.மு.க., அரசு காலி செய்து விட்டது. இதை, தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அதனால், பொங்கல் பரிசுத்தொகை தர வேண்டும் என்ற அ.தி.மு.க.,வின் கோரிக்கையை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்கலாமே. எதிர்க்கட்சியாக இருந்த போது, நீங்கள் கேட்டது தானே!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: எத்தனையோ தமிழக திட்டங்களை செயல்படுத்த, பயன்படுத்த வேண்டிய பொன்னான நேரத்தை, அமித் ஷாவை சந்தித்து அரசியல் செய்ய, டி.ஆர்.பாலுவும், தி.மு.க., - எம்.பி.,க்களும் நினைப்பது, ஓட்டளித்த மக்களுக்கு செய்யும் நம்பிக்கைதுரோகம்.
உங்களைப் போல, இவர்களின் அரசியல் நோக்கத்தை அமித் ஷா புரிந்து கொண்டதால் தான், அந்த குழுவை, அவர் சந்திக்கவில்லையோ?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: 'அம்மா' உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என, முதல்வர் ஸ்டாலின் கூறுவது, வெறும் வெளி வேஷம். ஜெயலலிதா மீதான அரசியல் வெறுப்புணர்வால், அம்மா உணவகங்களை மூடி, அவற்றால் பசியாறும், ஏழை மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம்.
உங்களின் 'அம்மா' திறந்த, 'டாஸ்மாக்' மதுபான கடைகளை தான், உண்மையில் இந்த அரசு மூடியிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டு, அம்மா கிளினிக்கை மூடியுள்ளனர். அம்மா உணவகத்தை விரைவில் மூட உள்ளனராம்!
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் அறிக்கை: பாதுகாப்பு குறைபாட்டால், பஞ்சாபில் நடக்க இருந்த பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல், பிரதமர் மோடி திரும்பியுள்ளார். பிரதமருக்கு நடந்த பாதுகாப்பு குறைபாடு, நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைக்குனிவு.
இந்த விவகாரத்தின் சங்கிலித்தொடர் விளைவுகள், நாட்டின் அமைதியை சீர்குலைத்து விடும் என்பதை, பஞ்சாபின் ஆளும் காங்கிரசார் அறியவில்லையோ?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE