தமிழக நிகழ்வுகள்
8வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி., ஊழியர் தற்கொலை
திருப்போரூர் : தாழம்பூரில் எட்டாவது மாடியில் இருந்து குதித்து, ஐ.டி., ஊழியர் தற்கொலை செய்தார்.ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்திரமவுலி மகன் பிரவீன்குமார் ஹரிஹோட்டா, 36. மனைவி சுஷ்மா, 30. கேளம்பாக்கம் அடுத்த தாழம்பூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், மனைவியுடன் வசித்து வந்தார்.

இரு ஆண்டுகளுக்கு முன், வேலை செய்த சிறுசேரி ஐ.டி., நிறுவனத்தில் இருந்து நின்றுவிட்டார்; வேறு நிறுவனத்தில், வீட்டிலிருந்தே வேலை செய்துவந்தார்.தற்போதைய நிறுவனத்தில் போதிய ஊதியம் இல்லாததாலும், ஏற்கனவே வேலை செய்த நிறுவனம் தன்னை வெளிநாட்டிற்கு அனுப்பவில்லை என்ற காரணத்தாலும், மன உளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இவரது மனைவி, ஒரு மாதத்திற்கு முன், அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் தனியாக இருந்த பிரவீன்குமார், எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார். தாழம்பூர் போலீசார் வந்து, பிரவீன்குமாரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கடன் தொல்லையால் தற்கொலை செய்தாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓடிய ரயிலில் சுழலாத சக்கரம் பயணியர் தகவலால் விபத்து தவிர்ப்பு
அச்சிறுபாக்கம் : விழுப்புரம் பயணியர் ரயிலின் சக்கரம் சுழலாமல், தண்டவாளத்தில் உராய்ந்தபடி வந்ததால், பயணியர் பீதியடைந்தனர். அவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து, தொழுப்பேடில் ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விழுப்புரத்திலிருந்து நேற்று அதிகாலை புறப்பட்ட பயணியர் ரயில், தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. மேல்மருவத்துார் அருகே தொழுப்பேடு ரயில் நிலையம் அருகே, காலை 6:30 மணிக்கு வந்தபோது, ஒரு பெட்டியின் ரயில் சக்கரங்கள் சுழலவில்லை.ரயில் சக்கரம், தண்டவாளத்தில் உராய்ந்தபடி வந்ததால், தீப்பொறி, புகை வந்ததை பார்த்த பயணியர், பெரும் கூச்சலிட்டனர். ஓட்டுனர், உடனடியாக ரயிலை நிறுத்தினார்; பயணியர் அலறியடித்து வேகமாக இறங்கினர்.
தொழுப்பேடு ரயில் நிலைய அதிகாரி, செங்கல்பட்டு ரயில்வே அதிகாரிகள் பார்த்துவிட்டு, விழுப்புரம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.அவர்கள், 'ரயிலில் பிரச்னை; அவசரம்' என பொருள்படும் அபாய மணியை, விழுப்புரம் ரயில் நிலையத்தில் எழுப்பினர். இதையடுத்து விபத்து மீட்பு ரயிலில் விழுப்புரம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் மோகன்துரை தலைமையில், 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தொழுப்பேடுவந்தனர்.முன்னதாக பயணியர், புதுச்சேரி -- சென்னை விரைவு ரயிலில் செங்கல்பட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
காலை 9:50 மணிக்கு வந்த தொழிலாளர்கள், பழுதான ரயிலை ஆய்வு செய்தபோது, ரயிலின் முதல் பெட்டியில் உள்ள சக்கரம் சுழலாமல் நின்றது தெரிந்தது. உபகரணங்களை வைத்து, சக்கரத்தின் பழுதை நீக்கி, மதியம் 3:15 மணிக்கு ரயிலை இயக்கினர்.ரயில்வே பணியாளர்கள் கூறுகையில், 'ரயில் சக்கரங்கள், சில சமயம் சுழலாமல் நின்றுவிடுவது வழக்கம். ரயில் வேகமாக வந்து இவ்வாறு நடந்திருந்தால் நிச்சயம் விபத்து ஏற்பட்டிருக்கும். பயணியர் கூச்சலால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ரயில் சக்கரம் ஏன் நிற்கிறது என்பது தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதில் கோடிக்கணக்கில் முறைகேடு; மதுரை பீப்பிள் வாட்ச் தொண்டு நிறுவனம் மீது சி.பி.ஐ., வழக்கு
மதுரை : வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக மதுரை சொக்கிக்குளத்தில்உள்ள பீப்பிள் வாட்ச் தொண்டு நிறுவனம், அதுசார்ந்த சி.பி.எஸ்.சி.,அறக்கட்டளை மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.
மதுரையில் 1985ல் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை வெளிநாடுகளின் நன்கொடை மற்றும் பல்வேறு வகையில் நன்கொடையாக கிடைக்கும் நிதி ஆதாரங்களை கொண்டு சில சேவைகள்,சமூகப்பணிகள் செய்து வருகிறது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் அதற்குண்டான ஆவணங்களை காட்டி முறையாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் இந்த அறக்கட்டளை முறையான அனுமதி பெறாமலும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டும் கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்ததில் நன்கொடை பெற்றதில் ரூ.ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதையும், முறையான அனுமதி பெறாததையும் உறுதி செய்து இதை சி.பி.ஐ., விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. வெளிநாடுகளில் இருந்து பலமுறை உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் கோடிக் கணக்கில் பணம் நன்கொடை பெற்றதை கண்டுபிடித்தனர்.
இதைதொடர்ந்து சி.பி.எஸ்.இ., அறக்கட்டளை மற்றும் பீப்பிள் வாட்ச் தொண்டு நிறுவனம் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.இவ்வழக்கு தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடப்பதாகவும், முறைகேடு செய்துள்ள பண மதிப்பு குறித்த விபரம் விசாரணைக்கு பின் தெரிவிக்கப்படும் எனவும் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
மாணவி கடத்தல் வழக்கு: சிறுவன் கைது
திண்டிவனம்-திண்டிவனத்தில் பள்ளி மாணவியை, கடத்திச்சென்ற சிறுவனை போலீசார் 'போக்சோ'வில் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் 16 வயது பிளஸ் 1 மாணவி. இவரை கடந்த மாதம் 27ம் தேதி முதல் காணவில்லை.இது குறித்து அவரது பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், திண்டிவனம் பூந்தோட்டம் வீதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், காதலிப்பதாகக் கூறி சிறுமியை கடத்திச் சென்றது தெரிய வந்தது.
சிறுமியை போலீசார், நேற்று நாகப்பட்டினம் அடத்த மேலவாஞ்சூரில் மீட்டு, சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி அதே மாணவியை, அந்த சிறுவன் கடத்திச் சென்ற வழக்கில், 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். தற்போது மீண்டும் சிறுமியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாயை மிரட்ட பூச்சி மருந்து குடித்த வாலிபர் உயிரிழப்பு
ஸ்ரீமுஷ்ணம் : காதலியை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த தாயை மிரட்டுவதற்காக பூச்சி மருந்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த புதுக்குப்பம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் அருளப்பன்,20;
தந்தையை இழந்த இவர், அரியலுார் மாவட்டம் வரதராஜன்பேட்டையை சேர்ந்த பெற்றோரை இழந்த 17 வயது பெண்ணை காதலித்தார். அவரை திருமணம் செய்து கொள்ள முயன்றார்.அதற்கு, அவரது தாய் ஜோசப் மேரி மற்றும் பெண்ணின் பாட்டி ரோனிகாவும், பெண் படிப்பை முடித்ததும் திருமணம் செய்து வைப்பதாக கூறினர்.
அதில், ஆத்திரமடைந்த அருளப்பன், தான் காதலிக்கும் பெண்ணை தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைத்திட தாயை மிரட்டுவதற்காக நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். உடன் அவரை மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றன
மனைவி கண்முன் தீக்குளித்த கணவர் பலி
பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி தொண்டாமுத்துாரைச் சேர்ந்தவர் செல்வராஜ், 45; ஆட்டோ டிரைவர். இவருக்கு, மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஏழு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து உள்ளனர்.
பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய மனைவியை அழைத்து பேசியுள்ளார். பின், கேனில் வைத்து இருந்த மண்ணெண்ணெயை, ஆட்டோவில் அமர்ந்தபடி, மனைவி கண் முன்னே தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கிருந்தவர்கள் செல்வராஜை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ரூ.5 நாணயத்தை விழுங்கிய குழந்தை
யாத்கிர்-யாத்கிர் கோலிவாடா லே - அவுட்டில், மூன்று வயது குழந்தை ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கியது. தொண்டையில் சிக்கிய நாணயத்தை, டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.
யாத்கிரின் கோலிவாடா லே -- அவுட்டில், பெற்றோருடன் வசிக்கும் மூன்று வயது பரத், நேற்று காலை ஐந்து ரூபாய் நாணயத்தை கையில் வைத்து கொண்டு விளையாடியது. வாயில் போட்டு விழுங்கியதை, பெற்றோர் கவனிக்கவில்லை.சிறிது நேரத்துக்கு பின், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பெற்றோர் பார்த்த போது, நாணயம் குழந்தையின் தொண்டையில் சிக்கியிருப்பது தெரிந்தது.
அதை எடுக்க முயற்சித் தும் முடியாததால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.எக்ஸ் -- ரே எடுத்த டாக்டர்கள், நாணயம் எங்கு சிக்கியுள்ளது என்பதை கண்டறிந்து, வெளியே எடுத்தனர். குழந்தை உயிர் பிழைத்தது.சிறு குழந்தைகள் வைத்துள்ள பெற்றோர், கவனக்குறைவாக இருக்கக்கூடாது; நாணயம் உட்பட எந்த பொருட்களையும் குழந்தையின் கையில் விளையாட கொடுக்கக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
அரசு வேலை வாங்கித் தருவதாக மாணவியிடம் ரூ. 2.60 லட்சம் ரூபாய் மோசடி
புதுக்கோட்டை : அரசு வேலை வாங்கித் தருவதாக, கல்லுாரி மாணவியிடம், 2.60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, வி.ஏ.ஓ., அலுவலக உதவியாளர் மீது அரிமளம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, தலையாத்திவயல் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிபவர், வனிதா, 35. கடந்த 2021ம் ஆண்டு, புதுக்கோட்டை, ராம்நகரில் குடியிருந்த இவர், அரசு அலுவலகத்தில் டிரைவராக பணிபுரியும் கணவர் மூலம், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, அவருடன் நட்பாக பழகிய தனியார் கல்லுாரி மாணவி ஒருவரிடம், இரண்டு தவணைகளாக, 2.60 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.அரசு வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் காலம் தாழ்த்தியதால், ஏமாற்றபட்டதை உணர்ந்த மாணவி, அரிமளம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்படி, அரிமளம் போலீசார், நேற்று வழக்குப்பதிவு செய்து, கிராம உதவியாளர் வனிதாவிடம் விசாரித்து வருகின்றனர்.
பெண் குரலில் பேசி பண மோசடி; வசமாக சிக்கிய போலி அதிகாரி
வேலுார் : வேலுாரில், சிறைத்துறை போலி அடையாள அட்டையுடன், பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேலுார் அடுத்த மேல்மொணவூரை சேர்ந்தவர், உதயகுமார், 27. இவர், போலியாக சிறைத்துறை அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து, எஸ்.பி., ராஜேஸ் கண்ணனிடம் புகார் அளித்தனர்.உதயகுமாரின் மொபைல் போன் எண்ணை, போலீசார் ஆய்வு செய்ததில், அவர் மோசடி செய்தது உறுதியானது.
உதயகுமாரை நேற்று கைது செய்து, சிறைத்துறை போலி அடையாள அட்டை மற்றும் 21 ஆயிரத்து 700 ரூபாயை பறிமுதல் செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:கைதான உதயகுமார், 10ம் வகுப்பு படித்து விட்டு, வேலுாரில் ஓட்டல் சர்வராக பணியாற்றி வந்தார். பல்வேறு இடங்களில் பிக்பாக்கெட், வழிப்பறியில் ஈடுபட்டார். இதனால் காட்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, ஆறு மாதத்தில் விடுதலையானார்.
பிறகு, வேலுார் சிறை துறையில், மனநல ஆலோசகராக பணியாற்றி வருவதாக கூறி, போலி அடையாள அட்டை தயாரித்து, எழில் நகரில் வாடகை வீட்டில் தங்கி மோசடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். பலரிடம் தன்னிடம் இருந்த அடையாள அட்டையை காண்பித்து, சிறைத்துறை, தபால் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 5.5 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளார். மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களை நடத்தும் ௪௦ பேரிடம், ௨ லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு, வேறு ஒரு மொபைல்போனில் தொடர்பு கொள்ளும் படி கூறியுள்ளார். அதில், சப் - கலெக்டர் பேசுவது போல, தானே பெண் குரலில் பேசி, நம்ப வைத்துள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.போலி சிறைத்துறை அடையாள அட்டையை காண்பித்து, பண மோசடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட உதயகுமார்.
பெண் புகார் எதிரொலி :ஏட்டு 'சஸ்பெண்ட்'
திருப்பூர்:புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், ஒழுங்கீனமாக நடக்க முயன்ற போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணியாற்றி வருபவர் முத்துப்பாண்டியன், 42. கடந்த வாரம், இவர் ஸ்டேஷனில் இருந்த போது, குன்னத்துார் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த, 35 வயது பெண், தன் கணவன் மீது புகார் கொடுத்தார்.
விசாரித்த முத்துப்பாண்டியன், ஒரு வீட்டில் அந்த பெண்ணை தங்குமாறு கூறியுள்ளார்.ஆனால், அந்த பெண் அதற்கு மறுத்து, திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில், ஏட்டு முத்துப்பாண்டியன் மீது புகார் அளித்தார். விசாரித்த எஸ்.பி., செஷாங் சாய், ஏட்டு முத்துப்பாண்டியனை, நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.