'கொரோனா ஒழிந்து விட்டது. இனி கஷ்ட, நஷ்டம் எல்லாம் மறைந்துவிடும்; 2022 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்' என, கடந்தாண்டின் இறுதியில் நம்மில் பலரும் நம்பினோம். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், 'ஒமைக்ரான்' என்ற விரும்பத்தகாத புது விருந்தாளி நிம்மதியை குலைத்துவிட்டான்.
![]()
|
நுாறு சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நாடுகளிலும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், உயிரிழப்புகள் ஒன்றிரண்டு மட்டுமே; அதுவும் இணை நோயிருந்தவர்கள். மற்ற அனைவரும் பாதுகாப்பு கவசம் பெற்றுவிட்டனர்.
இலக்கை நோக்கி...
இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால்... ஏற்கனவே நாம் எடுத்துக் கொண்ட இரண்டு தடுப்பூசிகளின் காக்கும் சக்தியின் காலம், ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை தான். அதனால், மூன்றாவது தடுப்பூசியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான், 'பூஸ்டர் டோஸ்' என்கிறோம்; இது, ஒன்றும் புதிய மருந்தல்ல.
நாம் ஏற்கனவே எந்த தடுப்பூசி மருந்தை எடுத்துக் கொண்டோமோ, அதையே தான் மூன்றாவதாக எடுத்துக் கொள்ளப் போகிறோம். 'இரண்டு வகை தடுப்பூசிகளை மாற்றியும் போட்டுக் கொள்ளலாம்; அது இன்னும் வீரியம் தரும்' என்ற கருத்தும் நிலவுகிறது.'ஆனாலும், இந்தியாவில் இரு தவணை 'கோவிஷீல்டு' எடுத்துக் கொண்டவர்கள் மூன்றாவதாக கோவிஷீல்டையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், 'கோவாக்சின்' எடுத்துக் கொண்டவர்கள் மீண்டும் கோவாக்சினையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இப்போது உலக நாடுகளில் பெருவாரியான நாடுகள், மூன்றாவது தடுப்பூசியின், 100 சதவீத இலக்கை நோக்கி பயணித்து வருகின்றன. ஆனால், தமிழகத்திலோ 68.45 லட்சம் பேர் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசியே போட்டுக் கொள்ளவில்லை; 1.43 கோடி பேர் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளவில்லை. இரண்டு டோஸ்களையும் போட்டு, பூஸ்டர் டோசுக்காக காத்திருப்பவர்கள், 35.46 லட்சம் பேர். இப்போது தான், நம் இந்தியர்கள் ஒவ்வொருவரின் பொறுப்பும், கடமையும் முக்கியமாகின்றன.
முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாத அனைவரும் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும். முதல் தவணை செலுத்திக் கொண்ட அனைவரும் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாம் தவணை செலுத்தி, 9 மாதமான (273 நாட்கள்) அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டால் ஒமைக்ரான் மட்டுமல்ல... அதன் மாமன், மச்சான் வைரஸ்களே வந்தாலும் எதிர்க்கும் ஆற்றலை நம் உடல் பெற்றுவிடும்.
ஆகவே, தெரிந்தவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நம் தெருவில் வசிப்பவர்கள் என, குறைந்தது ஐந்து பேரையாவது நாம் ஒவ்வொருவரும் கண்டறிந்து, முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வைக்க வேண்டும்.
பூஸ்டர் டோஸ்
ஏற்கனவே, இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்கள் கட்டாயம், மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள செய்ய வேண்டும்.இதை கடமையாகக் கருத வேண்டும். ஒருவரை சந்திக்கும்போது, 'நல்லா இருக்கீங்களா...' என, நலம் விசாரிப்போமே அதுபோல, 'தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா...' என, விசாரித்து, முதலோ... இரண்டாவதோ... அல்லது பூஸ்டரோ... எது போட்டுக் கொள்ளவில்லையோ, அந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள வைக்க வேண்டும்.
மத்திய - மாநில அரசுகள் தரப்பில் அவர்கள் செய்ய வேண்டிய பங்கை செய்து விட்டனர். இனி, மீண்டும் முழு ஊரடங்கு வந்துவிடக்கூடாது. தொழில்களும், வாழ்வாதாரமும் மேம்பட வேண்டும்.இப்பணி முழுமை பெற இளைஞர்கள், மாணவர்கள், சினிமா ரசிகர்கள், தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், சமூக சேவகர்கள், ரோட்டரி, லயன்ஸ் சங்கத்தினர், பொதுமக்கள் என, அனைத்து தரப்பினரும் களமிறங்க வேண்டும்.
நாம் ஒன்றிணைந்து செயலாற்றினால், நான்கே மாதங்களில் அனைவரையும் தடுப்பூசி போடச் செய்து, 100 சதவீத இலக்கை நிச்சயம் எட்டிவிட முடியும்; அதைச் செய்து காட்டுவோம் வாருங்கள்!
தமிழகத்திலோ 68.45 லட்சம் பேர் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசியே போட்டுக் கொள்ள வில்லை; 1.43 கோடி பேர் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளவில்லை
![]()
|
குறைத்து மதிப்பிடவேண்டாம்...
முகக் கவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுவதுடன் தேவையற்ற கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும்; சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியில் செல்ல நேரிட்டால் வீடு திரும்பியதும் குளித்து, துணிகளை கிருமிநாசினி கொண்டு அலச வேண்டும். ஒமைக்ரானை நாம் மீண்டும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. மீண்டும் முழு ஊரடங்கு வேண்டுமா, வேண்டாமா என்பது நம் செயல்பாட்டில் தான் இருக்கிறது.
இல.ஆதிமூலம்
'தினமலர்' வெளியீட்டாளர், கோவை பதிப்பு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE