எஸ்.விஸ்வநாதன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்நாட்டில் மூத்த குடிமக்களின் வாழ்வாதாரத்திற்கு, என்ன வாய்ப்பு வழங்கப்படுகிறது?அவர்கள், மருத்துவகாப்பீடு செய்ய முடியாது; மாத தவணையில் கடன் ஏதும் அவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். ஓட்டுனர் உரிமமும் கிடையாது. உடல் தளர்வு காரணமாக, அவர்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுக்கப்படாது.
ஆனால் அவர்கள் இந்நாட்டில் வாழ வேண்டுமானால், அனைத்து வரிகளையும் முறையாக கட்டியாக வேண்டும்; ஆனால், அவர்கள் வாழ்வாதாரம் குறித்து, அரசு சிந்திக்கவே இல்லை.இளைஞர்களும் வரி கட்டுகின்றனர். இவர்களின் முன்னேற்றத்திற்காக, பல ஆயிரம்கோடி ரூபாய் நிதியில், ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\
ஆனால், மூத்த குடிமக்களின் வாழ்விற்காக எந்த திட்டமும் இல்லை; அவர்கள் சேமிப்பிற்கான வட்டி விகிதத்தையும், அரசு மெல்ல குறைத்து வருகிறது.நம் நாட்டில் மூத்த குடிமக்கள் பாவம் தான்!
தமிழின் சீரிளமையைவாழ்த்துவோம்!
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதற்காகவும், இளைய தலைமுறையிடம் சேர்ப்பதற்காகவும், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதியுள்ள, 'நீராடும் கடலுடுத்த..' என்ற தமிழ்த்தாய் வாழ்த்து, நம் மாநிலப்பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதை ஒருங்கிணைந்து நெறிமுறைப்படுத்த, சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று, அரசாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த தமிழ்த்தாய் வாழ்த்து, 55 வினாடிகளில், 'முல்லைப்பாணி' ராகத்தில் மூன்றாம் நடையில் பாடப்பட வேண்டுமாம்; இசைவட்டுகளில் ஒலிபரப்பாது, பயிற்சி பெற்றவர்களால் பாடப்பட வேண்டுமாம்.அரசு அலுவலகம், கல்விக்கூடம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டுமாம்.
மாற்றுத்திறனாளிகள் தவிர, மற்ற அனைவரும் எழுந்து நிற்க வேண்டுமாம். எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழ் அணங்கை, பெருமைப்படுத்தும் நல்ல முயற்சி இது.தமிழ்த்தாய் வாழ்த்தோ, தேசிய கீதமோ எதுவாயினும், நாட்டு மக்கள் அதற்கு மனதளவில் ஒரு மரியாதை கொடுத்து, தேச பக்தியோடு எழுந்து நிற்க வேண்டும். அதை விடுத்து, அரசாணை பிறப்பித்து கட்டாயமாக மரியாதையைப் பெற வேண்டியநிலை துரதிருஷ்டவசமானது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், சினிமா முடியும் போது திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப் படும்; ஆனால் படம் முடிந்தவுடன், மக்கள் வெளியேறி விடுவர். அது ஒரு சம்பிரதாயமாக இருந்தது அவ்வளவு தான்.ரேடியோவிலும் நிகழ்ச்சி முடிந்தவுடன், இரவு, 10:00 மணிக்கு தேசிய கீதம் ஒலிபரப்பப்படும். மக்கள் யாரும், எழுந்து நின்றதாக சரித்திரம் கிடையாது.
ஆனால் அவர்களிடம், இன்றைய காலத்தை விட தேச பக்தி அதிகம் இருந்தது. அவர்கள் அதை விளம்பரப் பொருளாக்கி, வியாபாரம் செய்யவில்லை.தேச பக்தியோ, மொழி பக்தியோ அவரவர் ரத்தத்தில் இருக்க வேண்டும். அதை திணிப்பதால் வந்து விடாது; சட்டம் போட்டு வளர்க்க முடியாது. எது எப்படியோ, தமிழை வளர்க்கும் அரசின்முயற்சியில் இது ஒரு மைல் கல். சுந்தரம்பிள்ளையைப் போல நாமும் தமிழின் சீரிளமையை வாழ்த்துவோம்.
இரண்டில் ஒன்று!
அ.கணேசன், விளாத்திகுளம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'ஒரு பொய்யை திரும்பத் திரும்ப பிரசாரம் செய்தால், அது உண்மையாகி விடும்' என்பது, சர்வாதிகாரி ஹிட்லரின் வலது கரம் கோயபல்சின் அணுகுமுறை. அதைத் தான் அடிபிழறாமல், தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசு கடைப்பிடித்து வருகிறது.
மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும், 'நீட்' தேர்வை ரத்து செய்யவும் முடியாது; தனி ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்களிக்கவும் இயலாது என்பது, தி.மு.க., உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெள்ளத் தெளிவாகவே தெரியும்.ஆனால், 'தீர்மானம்' என்ற ஒற்றை வார்த்தையை முன்னிறுத்தி, அரசியல் கட்சிகள் நடத்தும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது; அதை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பாமல் கிடப்பில் வைத்துள்ளார் கவர்னர்.இதனால் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு தீர்வு காண, தமிழக எம்.பி.,க்கள் டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷாவை சந்தித்து பேச முயற்சித்தனர். அதற்கு அவர் அனுமதி அளிக்காததால், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவும்,அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கவும், அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை, தமிழக அரசு கூட்டியது.இது தவிர, 'பல்கலை துணைவேந்தரை, மாநில அரசே நியமிப்பது தொடர்பாக, சட்டசபை
நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது...அதாவது, சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி விட்டால், அதற்கு மத்திய அரசு கட்டுப்பட வேண்டுமா?உதாரணமாக, 'பிரதமரை பதவி நீக்கம்செய்கிறோம்' என, ஏதோ ஒரு மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டால், உடனே அவர் விலகி விட வேண்டுமா?
ஏதோ ஒரு ஊராட்சியில், 'சட்டசபையை கலைக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றினால், உடனே ஆட்சியில் இருந்து தி.மு.க., வெளியேறி விடுமா?இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இது போன்ற தீர்மானம் என்ற, 'டுபாக்கூர்' வாக்குறுதிகளை வழங்கி, மக்களை ஏமாற்றுவர்?
இது போன்ற, 'நீட் தேர்வு விலக்கு' என்ற, 'புருடா'க்களுக்கு நிரந்தர முடிவு கட்ட, மத்திய அரசு களமிறங்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகள் அனைத்தையும், அரசுடைமையாக்க மாற்ற வேண்டும் அல்லது தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த இரண்டில் ஒரு முடிவை, மத்திய அரசு துணிந்து எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE