இந்திய நிகழ்வுகள்
'சுல்லி டீல்ஸ்' செயலி வடிவமைத்தவரை ம.பி.,யில் கைது செய்த டில்லி போலீசார்
முஸ்லிம் பெண்களை அவமதிக்கும் வகையில் அவர்களை ஏலம் விடும், 'சுல்லி டீல்ஸ்' செயலியை வடிவமைத்த இளைஞரை டில்லி போலீசார் நேற்று மத்திய பிரதேசத்தில் கைது செய்தனர்.
முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை மாற்றி, தவறான முறையில் சித்தரித்து 'புல்லி பாய்' என்ற, 'மொபைல் போன்' செயலி வாயிலாக ஏலம் விடப்படுவதாக டில்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த செயலியை உருவாக்கிய அசாமை சேர்ந்த நீரஜ் பிஷ்னோய் என்பவரை சமீபத்தில் கைது செய்தனர். இவரை தவிர மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். நீரஜ் பிஷ்னோயை டில்லி அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது 'புல்லி பாய்' செயலி உருவாக்கத்தில் மூளையாக செயல்பட்டதை பிஷ்னோய் ஒப்புக் கொண்டார்.'புல்லி பாய்'இந்நிலையில் 'புல்லி பாய்' செயலியை போலவே 'சுல்லி டீல்ஸ்' என்ற செயலி ஏற்கனவே செயல்பட்டு வந்தது குறித்து கடந்த ஜூலையில் டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஓம்காரேஷ்வர் தாக்கூர், 26, என்பவரை டில்லி போலீசார் மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து சிறப்பு விசாரணை குழுவின் தலைவரும், டில்லி துணை கமிஷனருமான கே.பி.எஸ்.மல்ஹோத்ரா கூறியதாவது:மத்திய பிரதேசத்தின் இந்துாரில் வசிப்பவர் ஓம்காரேஷ்வர் தாக்கூர். இங்குள்ள ஐ.பி.எஸ்., அகாடமியில் பி.சி.ஏ., பட்டப் படிப்பு முடித்துள்ளார். முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் பதிவுகளை வெளியிடும் சமூக வலைதள குழு ஒன்றில் இவர் உறுப்பினராக இருந்துள்ளார்.
அப்போது, 'சுல்லி டீல்ஸ்' செயலியை வடிவமைத்து, அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். அதை உறுப்பினர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து, முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை அதில் பகிர்ந்துள்ளனர். ஒப்புக்கொண்டார்விசாரணையின் போது ஓம்காரேஷ்வர் தாக்கூர் இதை ஒப்புக்கொண்டார்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே ஓம்காரேஷ்வர் தாக்கூர் கைது குறித்து டில்லி போலீசார் தங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், ஊடகங்கள் வாயிலாக அதை தெரிந்து கொண்டதாகவும் இந்துார் போலீஸ் கமிஷனர் ஹரி நாராயண்சாரி மிஸ்ரா தெரிவித்தார்.
பேரணி: போலீசார் வழக்கு
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹ்ராவில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தியின் தந்தையும், முன்னாள் முதல்வருமான முப்தி முகமது சயீதின் நினைவு தின பேரணி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அப்துல் ரகுமான் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
.தமிழக நிகழ்வுகள்
மத்திய அரசு அதிகாரியாக நடித்து பணம் கேட்டு மிரட்டியவர் கைது
மேட்டுப்பாளையம்:மத்திய அரசு அதிகாரி எனக் கூறி, துணிக்கடை வியாபாரியிடம், பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.சிறுமுகையை சேர்ந்தவர் நாகராஜ்; துணிக்கடை நடத்தி வருகிறார். சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனை சங்க தலைவராகவும் உள்ளார்.சில நாட்களுக்கு முன், இந்திய அரசு என்ற ஸ்டிக்கர் ஒட்டிய காரில், சிறுமுகை அடுத்த கிச்சகத்தியூரைச் சேர்ந்த ராஜ்குமார், 46 என்பவர், இவரது கடைக்கு வந்துள்ளார்.'தான் ஓர் மத்திய அரசு அதிகாரி என்றும், அகில இந்திய கன்ஸ்யூமர் புரோடக்சன் ஆர்கனைசேஷனில் இருந்து வருவதாகவும்' தெரிவித்துள்ளார். கடையில் விற்பனை மற்றும் கொள்முதல் ரசீதுகளை கொண்டு வருமாறு மிரட்டிய அவர், கடைக்கு 'சீல்' வைக்காமல் இருக்க, 3 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.சந்தேகம் அடைந்த நாகராஜ், போலீசாரிடம் புகார் செய்தார். சிறுமுகை போலீசார் நடத்திய விசாரணையில், ராஜ்குமார், மத்திய அரசு அதிகாரியாக நடித்து, ஏமாற்ற முயன்றது தெரியவந்தது.அவரைக் கைது செய்த போலீசார், போலியான ஆவணங்கள், மத்திய அரசு முத்திரை, கார் மற்றும் போலி லெட்டர் பேடுகளை பறிமுதல் செய்தனர்.இவர், கிச்சகத்தியூரில் 'ஸ்விருட்ச பீடம்' என்ற ஆசிரமத்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
ரயில் இன்ஜின் மோதி இருவர் பலி; போன் பார்த்தபடி நடந்ததால் விபரீதம்
பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் அருகே நல்லாம்பாளையத்தில் ரயில் இன்ஜின் மோதி, கல்லூரி மாணவர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் ஆர்.எஸ். நகரில் வசித்தவர் மணிகண்டன்,18, வேலை தேடி வந்தார்.அதே பகுதியில் உள்ள காமராஜ் நகரில் வசித்தவர் விஜயகிருஷ்ணா,17. இவர், தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி ரயில் இன்ஜின் வந்து கொண்டிருப்பது தெரியாமல், நல்லாம்பாளையம் ரயில்வே பாலத்தின் மீது மொபைல் போனை பார்த்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் மீது ரயில் இன்ஜின் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரிக்கின்றனர்.
சித்ரவதையில் சிறுமி பலி தாய் உட்பட இருவர் கைது
பெரம்பலுார்-கண்டிப்பு என்ற பெயரில் நடந்த சித்ரவதையில் சிறுமி உயிரிழந்தார். இது தொடர்பாக, சிறுமியின் தாய் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகள் மகாலட்சுமி, 10; அதே கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 6ம் தேதி, பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் வீட்டில், 70 ரூபாயை திருடி தின்பண்டங்கள் வாங்கிஉள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய் மணிமேகலை, 35; உறவினர் மல்லிகா, 48 என்பவருடன் சேர்ந்து, சிறுமியின் வாய் மற்றும் வலது தொடையில் சூடு வைத்தும், மிளகாயை நெருப்பில் போட்டு புகை பிடிக்க வைத்தும் கண்டித்துள்ளார்.இதில், சிறுமியின் உடல்நிலை மோசமானதால், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, நேற்று அதிகாலை 2:00 மணியளவில் இறந்தார். அரும்பாவூர் போலீசார், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிந்து, மணிமேகலை, மல்லிகாவை கைது செய்தனர்.
தாது மணல் கடத்தல் 3 டிரைவர்கள் சிக்கினர்
துாத்துக்குடி-துாத்துக்குடி தனியார் தாது மணல் குடோனில் இருந்து தாது மணல் பைகளை வேறு இடத்திற்கு கடத்த முயன்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மூன்று டிரைவர்கள் சிக்கினர்.திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தாது மணல் ஆலைகள் செயல்பட, அரசு 2013ல் தடை விதித்தது. கடற்கரை மணலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இல்மனைட், சிர்கான், ரூட்டைல் உள்ளிட்ட தாது மணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.அரசு தடை விதித்த பிறகும், தாது மணல் நிறுவனங்கள், தங்கள் குடோனில் இருக்கும் சரக்குகளை வெளியே எடுத்து அனுப்புவது தொடர்கிறது.
இந்நிலையில், நேற்று துாத்துக்குடி அருகே முள்ளக்காடு கடற்கரையில் உள்ள ஒரு தனியார் குடோனில் இருந்து, தாது மணல் பைகளை லாரியில் ஏற்றி வெளியே கொண்டு செல்ல முயற்சித்தனர்.தகவல் அறிந்த புவியியல், சுங்கத் துறை உதவி புவியியலாளர் சுகதா ரஹீமா தலைமையில் வருவாய் துறையினர் சென்று லாரி, மணல் அள்ளும் இயந்திரம், இரண்டு டூ - வீலர்களை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர்கள் லாரன்ஸ் இருதயராஜ், புலியன், சுந்தர் ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர்.
இத்தகைய தாது மணல் கடத்தலின் போது, வாடகைக்கு வரும் தனியார் லாரிகளின் டிரைவர்கள் மட்டும் சிக்கிக் கொள்கின்றனர். தாது மணல் உரிமையாளர்கள் மீது எந்த வழக்கு, நடவடிக்கைகள் பாய்வதில்லை.போலீஸ், புவியியல் துறையின் கண் துடைப்பு நடவடிக்கையால் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தாது மணல் கடத்தல் தொடர்கிறது.
![]()
|
தூர்ந்த கிணற்றில் குளித்த மூன்று சிறுமியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
செஞ்சி-துார்ந்து போன கிணற்றில் குளித்த மூன்று சிறுமியர் நீரில் மூழ்கி இறந்தனர்,விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி, 35; கணவர் ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ௸இவரது மகள்கள் கலையரசி, 10; ஹேமாவதி, 7. அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியர் சுபாஷினி, 10; சவுந்தர்யா, 13. நால்வரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.திலகவதி நேற்று, நெல் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சிறுமியர் நான்கு பேரும் அருகில் உள்ள நிலத்தில் துார்ந்து போன கிணற்றில் இருந்த நீரில் குளித்தனர்.அப்போது, கலையரசி, ஹேமாவதி, சுபாஷினி ஆகிய மூவரும் நீரில் மூழ்கினர். அதிர்ச்சியடைந்த சவுந்தர்யா, ஓடி வந்து திலகவதியிடம் கூறினார். அப்பகுதி மக்கள், நீரில் மூழ்கிய மூன்று சிறுமியரையும் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த டாக்டர், மூவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தொற்றுக்கு பயந்து விஷம் குடிப்பு : 4 வயது சிறுவன், தாய் உயிரிழப்பு
மதுரை-மதுரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் 4 வயது சிறுவன், தாய் உயிரிழந்தனர்.
மதுரை, சிலைமான் கல்மேடு எம்.ஜி.ஆர்., காலனியைச் சேர்ந்தவர் லட்சுமி, 46. கணவர் இறந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரில் இருந்து தன் மகள் ஜோதிகா, 24; மகன்கள் ஆதி, 17; சிபிராஜ், 14; ஜோதிகாவின் மகன் ரித்தீஷ், 4 ஆகியோருடன் ஆறு மாதங்களுக்கு முன் சிலைமான் வந்தார்.ஜோதிகாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது.
வீட்டில் உள்ளவர்களை பரிசோதிக்க அதிகாரிகள் கூறினர். நேற்று முன்தினம் காலை, நால்வர் மயங்கி கிடப்பதாக அறிந்து சிலைமான் போலீசார் சென்றனர்.ஜோதிகா, அவரது குழந்தை ரித்தீஷ் இறந்தது தெரிந்தது. லட்சுமி, சிபிராஜ் மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'ஜோதிகா கணவரை பிரிந்த நிலையில், அவர் மட்டும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். சிபிராஜ், மனநிலை சரியில்லாமல் இருந்துஉள்ளார்.'கொரோனா பாதிப்பு அச்சத்தால், சாணி பவுடர் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்று, இருவர் பலியாகியுள்ளனர். ஆதி வெளியே சென்றிருந்ததால் தப்பித்திருக்கலாம்' என்றனர்.
உலக நிகழ்வுகள்
சிறைக் கலவரம்: 56 கைதிகள் காயம்
மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மான்டெர்ரே நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அபோடாகா சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே பயங்கர சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கி வன்முறைகளில் ஈடுபட்டனர். இதில், 56 சிறைக் கைதிகள் காயமடைந்தனர். இதையடுத்து நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின், கைதிகளிடம் இருந்த மொபைல் போன்கள், மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன
பாறை விழுந்ததில் 6 பேர் பலி
பிரேசிலியா: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கேபிடோலியா நகரில் ஏரி ஒன்று உள்ளது. சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் இந்த ஏரிக்கு அருகே உள்ள மலையில் நேற்று முன்தினம் ராட்சத பாறை இடிந்து விழுந்தது. அப்போது ஆறு சுற்றுலா பயணியர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் காயமடைந்தனர். மேலும், 20 பேர் மாயமாகி உள்ளதால், அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE